உறுதியான கூட்டணியால் திராவிட முன்னேற்றக் கழகம் வென்ற அன்றைய வரலாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 8, 2021

உறுதியான கூட்டணியால் திராவிட முன்னேற்றக் கழகம் வென்ற அன்றைய வரலாறு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் ஆகும்.

1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் மெட்ராஸ் ஸ்டேட்  சட்டமன்றத் தேர்தல்கள் எனும் பெயரில் அழைக்கப்பட்டன.

சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டமன்றத் தேர்தல் 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடை பெற்றது. அப்போது ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி தோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான எதிர்க் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்று,

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வரானார்.

1967 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 45 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

1962 சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறை முதலமைச்சராக வெற்றி பெற்றவர் காமராஜர். இந்தியா முழுவதும் காங்கிரசு வலுவிழக்கத் தொடங்கியது.

இதனால் (1954-1963) முதல் ஒன்பது வருடங்களாக முதல்வராக இருந்த காமராஜர் தான் வகித்திருந்த முதலமைச்சர் பதவியில் இருந்து தாமாகவே விலகி  அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டு டில்லி சென்று விட்டார்.

அவருக்கு பதிலாக தமிழக முதல்வரான பக்தவத்சலத்திடம் காமராஜரிடமிருந்த நிர்வாகத் திறனும், மக்கள் செல்வாக்கும் இல்லை. மேலும் 1964 இல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு பஞ்சம் ஏற்பட்டது. அதனால் காங்கிரஸ் அரசு மக்களின் நம்பிக்கையின்மையையும் எதிர்ப்பையும் பெற்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது.

1964 ஆம் ஆண்டு காங்கிரஸ் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு இந்தியா மற்றும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி பலமான சரிவை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியில் அடுத்த பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் 1965 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி கட்டாயமாக்கபடவேண்டும் என்று  கொண்டு வந்த சட்டம் தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டமாக திமுக தலைமையில் மாறி இருந்தது.

இதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி, 1965 வரை ஆங்கிலமும், இந்தியும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென தமிழகத்தில் பலர் கருதினர்.

தமிழ்நாட்டில் திமுகவினர், மாணவர்கள்  மற்றும் பல தமிழார்வலர்கள்  இந்தி தனி ஆட்சி மொழியாவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1965 இல் ஜனவரி-பிப்ரவரி-களில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறைச் செயல்கள் மிகுந்தன. மாநில காங்கிரசும், முதல்வர் பக்தவத்சலமும் இந்தியை ஆதரித்து, அதற்கெதிரான போராட்டத்தைக் கடுமையான முறைகளைக் கையாண்டு ஒடுக்கினர்.

இதனால், பெருவாரியான பொதுமக்கள் காங்கிரசின் மீது வெறுப்பும், அதிருப்தியும் கொண்டனர்.

முந்தைய தேர்தலில் ஒற்றுமையில்லாமல் இருந்த எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தின் மூலம் ஒன்றினைந்து ஒரு குடையின் கீழ் வந்தன. அரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.

கட்சிகள்

இத்தேர்தலில் காங்கிரசு தனித்தும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.

 திமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் சுதந்திராக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், . பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இக்கூட்டணியை உருவாக்குவதில் அறிஞர் அண்ணாவும், ராஜகோபாலச்சாரியும் பெரும்பங்கு வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகள்

இத்தேர்தலில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது.  76.57% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசு கட்சி 51 இடங்களைக் கைப்பற்றியது. நாம் தமிழர் மற்றும் தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் முதல் முறையாக திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது  இதுவே முதல் முறை. இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து   தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

இத்தேர்தலில் அன்றைய தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். முதல்வராயிருந்த பக்தவத்சலம் திருப்பெரும்புதூர் தொகுதியிலும், காங்கிரசு தலைவர் காமராஜர் விருதுநகர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர்

எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை, திமுகவின் தேர்தல் பிரச்சாரம், அறிஞர்அண்ணாவின் அரசியல் நுட்பம் ஆகியவையே திமுக கூட்டணியின் வெற்றிக்குக் காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இக்கூட்டணி அப்போது தமிழகத்திலிருந்த பதினான்கு மாவட்டங்களில் பத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரசால் ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுக நகர்ப்புறங்களில் தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்ததுடன், கிராமப் புறங்களிலும் முதல் முறையாகக் காலூன்றியது. காங்கிரசின் தோல்விக்கு அக்கட்சி தாழ்த்தப்பட்டோரின் ஆதரவை இழந்ததும் முக்கிய காரணமாகும்.

தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகின. திமுக தலைவர்  அறிஞர் அண்ணா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தென் சென்னைத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து  (ராஜினாமா) விலகி மார்ச் 6 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 22 ஏப்ரலில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்ற உறுப்பினரானார்.

இத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து தந்தை பெரியார் பிரச்சாரம் செய்திருந்த நிலையிலும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் திருச்சியிலிருந்த தந்தை பெரியாரை நேரில் சென்று சந்தித்த அறிஞர் அண்ணா, இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்ற உணர்வோடு ஆட்சி செய்தார்.

அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை

திமுக அமைச்சரவையில் 6 மார்ச் 1967 முதல் 10 பிப்ரவரி 1969 வரை இடம் பெற்றிருந்த அமைச்சர்கள்:

அறிஞர் அண்ணா

முதல்வர், பொது நிர்வாகம், நிதி, திட்டம், மதுவிலக்கு, அகதிகள்  

நாவலர் இரா. நெடுஞ்செழியன்

கல்வி, தொழில், மின்சாரம், சுரங்கங்கள், கனிமம், ஆட்சி மொழி, கைத்தறி, அறநிலையங்கள்   

கலைஞர் மு.கருணாநிதி

பொதுப் பணிகள், சாலைகள், போக்குவரத்து, துறைமுகங்கள்        

கே. . மதியழகன்

உணவு, வருவாய், வணிக வரி   

.கோவிந்தசாமி

விவசாயம், கால்நடை, மீன்வளம், வனங்கள்

எஸ்.ஜே. சாதிக் பாட்சா

சுகாதாரம்      

சத்தியவாணி முத்து

ஆதிதிராவிடர் நலம், தகவல்       

எம். முத்துசாமி

உள்ளாட்சி, காதி, கிராமப்புறத் தொழில்               

எஸ். மாதவன்

சட்டம், கூட்டுறவு, வீட்டு வசதி  

என். வி. நடராஜன்

தொழிலாளர் நலம்

No comments:

Post a Comment