மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய 'விடுதலை' அறிக்கையில் (6.5.2021) குறிப்பிட்டதுபோல இந்த வெற்றி சாதாரணமாக வந்த ஒன்றல்ல.
கடுமையான உழைப்பு - திட்டவட்டமான நடவடிக்கைகள் இவற்றிற்கிடையே ஏச்சுகள், பேச்சுகள் - திரிபுவாதங்கள் - பண பலம் - பத்திரிகைப் பலம் - ஆட்சி அதிகார பலம் இவற்றையெல்லாம் கடந்து, வெற்றி மாலை இந்தக் கூட்டணிக்கு வந்து சேர்ந்தது.
பள பளக்கும் மணிமகுடம் அல்ல- முள் கிரீடம்! அச்சுறுத்தும் கரோனா முதல் பகை; கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை. ஆண்டுக்கு 66 ஆயிரம் கோடி கடனுக்கான வட்டி என்பதையெல்லாம் நினைத்தால் தலையைச் சுற்றுகிறது.
'எல்லோரும் கஷ்டப்பட்டு என்னைக் கொண்டு வந்து விட்டீர்கள்; நானோ இப்பொழுது பெருஞ் சுமைகள், சவால்களை எதிர்நோக்கிக் களத்தில் நிற்கிறேன்!' என்று கருதும் மிகப்பெரிய பொறுப்பான இடத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நின்று கொண்டுள்ளார்.
முதலமைச்சர் பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்பதற்கு முன்னதாகவே அவருடைய அரசு பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகளை நடத்தினார்.
மேயராக இருந்த காலகட்டத்திலும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக அவர் இருந்த காலத்திலும் சரி, அவர் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளும் அதிகாரிகள் அத்தனைப் பேரும் பொறுக்கு மணிகள்.
அவருடைய வெற்றிக்கான முக்கிய காரணிகளுள் இது மிகவும் முக்கியமானது; அதுவும் இதுவரை அவர் வகித்த பதவிகளைவிட, இது ஒரு மாநிலமே தமிழ்நாடே அவர் தோளால் சுமக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்திலும் எது நடந்தாலும் அவற்றிற்குப் பொறுப்பேற்றுத் தீரவேண்டிய பொறுப்பான பதவி! பதவி என்பதைவிட பொறுப்பு என்ற சொல் பொருத்தமானதாக இருக்கக் கூடும்!
மற்றவர்களைக் கலந்து ஆலோசிக்கும் எந்த முடிவும் வெற்றியில் முடியும். பிரதமர் நரேந்திர மோடிபோல, 'எல்லாம் நான்தான்!' என்கிற ஒரு தனி மனிதர் ஆட்டம் கடையாணி கழன்றதாக அச்சிறும்.
''கரோனாவை எதிர்கொள்வதை ஒரு மக்கள் இயக்கமாக நடத்திட வேண்டும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவரைச் சந்தித்தபோது (4.5.2021) நேரில் கூறினார். இதில் கட்சி மாறுபாடுகளைக் கூடக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.
நல்ல கருத்து என்று கூறினார் தளபதி.
உடனே மறுநாள் அறிக்கையில் மக்கள் இயக்கமாக நடத்துவோம் என்று கூறியது அவரின் முதிர்ச்சியை வெளிப்படுத்தக் கூடியதாகும்.
அறிக்கை வெளியிட்டதோடு நிற்கவில்லை. கரோனா நிலவரங்களை ஒருங்கிணைக்க மாவட்டந்தோறும் கண்காணிப்பு கான அதிகாரிகள் நியமனம் - தற்காலிகப் பணியாளர்களாக இருந்த செவிலியர்கள் 1212 பேர் நிரந்தரம் என்று அடுத்தடுத்து செயல் பணிகளுக்கு உத்தரவு.
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
'' மருத்துவ அவசர நிலை அளவுக்கு கோவிட்-19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மய்யம் ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள் ளேன்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றைத் தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்த மய்யம் உதவியாக இருக்கும்.
முன்களப்பணியாளர்களின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது.
மருத்துவ அவசர நிலைக்காலம் என்பதால் 50 சதவிகித படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவ மனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்
கட்டணத்திலும், முடிந்தளவு சலுகை காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும்.
உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.''
மேற்கண்ட செயல் திட்டங்கள், வேண்டுகோள்கள் இந்தக் காலகட்டத்தில் எத்தகைய அவசரமானவை என்பதை விளக்கத் தேவையில்லை.
பிரதமர் சொன்னதுபோல தடுப்பூசித் திருவிழா அல்ல - போர்க்கால நடவடிக்கைகளாக தடுப்பூசி முதற்கொண்டு மருத்துவக் கட்டமைப்புப் பணிகள் நொடிக்கு நொடி முன்னேற்றம், இலக்கு நிறைவு என்ற வகையில் அமைந்திட வேண்டும்.
முதலில் தடுப்பூசி என்றபோது சற்று அச்சப்பட்ட நிலையில், பிறகு அதன் அவசியத்தையும், அருமையையும் உணர்ந்து தடுப்பூசிப் பற்றாக்குறை என்கிற அளவுக்கு மக்கள் முந்திக்கொண்டு வருவதுபோல, முதலில் அரசின் நடவடிக்கைகளைக் கண்டு மக்கள் மத்தியில் போதிய நம்பிக்கை ஏற்படவேண்டும். அந்த நம்பிக்கை தானாக வராது - அரசின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் வரும். அதில் முதல் வெற்றியை இப்பொழுதே நமது மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் எய்தி விட்டார் என்றே கருதவேண்டும்.
கரோனா கட்சியைப் பார்த்தோ, மதத்தைப் பார்த்தோ, கொள்கையைப் பார்த்தோ வருவதில்லை. எனவே, இதனை எதிர்கொள்வோரும், மக்கள் இயக்கமாக நடத்துவோரும் இந்த அடிப்படையில் நின்று அரசுக்கு உறுதுணையாக நிற்போமாக!
No comments:
Post a Comment