ஒடுக்கப்பட்ட மக்களே, உங்கள் கவனம் கல்வியில் இருக்கட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

ஒடுக்கப்பட்ட மக்களே, உங்கள் கவனம் கல்வியில் இருக்கட்டும்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், ஒட்டனந்தல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு தலைகுனிய வைக்கக் கூடியதாகும். இந்த 2021 லும் கூட மனித சமத்துவத்திற்கு எப்படிப்பட்ட அறைகூவல்கள் எழுந்து நிற்கின்றன என்பதை எண்ணும்போது வெட்கம் நம்மை நிலைகுலைய வைக்கிறது.

ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு இம்மாதம் 12ஆம்தேதி திருவிழா நடத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதே ஊரைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்  காவல் நிலையத்திற்குத் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, கிராமத்திற்கு வந்த காவல்துறையினர் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருப்பதையும், கோவில் திருவிழாக்களுக்கு தடைவிதித்து இருப்பதையும் எடுத்துரைத்து திருவிழாவை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களும் காவல்துறை மற்றும் அரசின் உத்தரவை மதித்து திருவிழாவை ரத்து செய்துள்ளனர்.

இந்த திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்கெனவே முன்பணம் வாங்கியிருந்த இசைக்குழுவினருக்கு திருவிழா நிறுத்தப்பட்ட தகவல் செல்வதற்குள் அன்று மாலையே ஒட்டனந்தல் கிராமத்திற்கு வந்துவிட்டனர். தாங்கள் கொண்டு வந்திருந்த வேனில் இருந்தபடியே அந்த குழுவினர்தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். ஆனாலும் கூட்டம் கூடவில்லை. திருவிழா நடத்துவதாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் அதே நபர், இசை நிகழ்ச்சி நடைபெற்றதையும் காவல் நிலையத்திற்குக் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் இசைக்கருவிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். தங்களது கிராமத்தால் இசைக்குழுவினர் பாதிக்கப்பட வேண்டாம் என்றும்,  இசைக்கருவிகளை இசைக் குழுவினரிடம் ஒப்படைத்து விடுமாறும் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட காவல்துறையினரும் இசைக்கருவிகளை திரும்பவும் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்த நபரிடம் 'ஏன் இப்படி செய்தீர்கள்?' என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தங்கள் பகுதி பஞ்சாயத்தாரிடம் கூறியிருக்கிறார் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தவர். இதனையடுத்து கட்டப் பஞ்சாயத்து கூடியிருக்கிறது. வாய்த்தகராறு ஏற்பட்ட அந்த சம்பவம் ஏற்கத்தக்கது அல்ல என்றும், தாங்கள் செய்தது தவறு தான் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  கூறியிருக்கிறார்கள். ஆனாலும், இதை ஏற்க மறுத்த ஜாதி ஆதிக்க சக்திகள் காலில்விழுந்து மன்னிப்புக் கோருமாறு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெரியவர்கள் 3 பேர், "பஞ்சாயத்தார் காலில் விழுந்து இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது. நாம் ஒற்றுமையாக இருப்போம்" எனக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். இதுகுறித்த காணொலி மே 14 அன்று சமூக வலை தளத்தில் வைரலாக பரவியது.இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன், திருவெண்ணெய் நல்லூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராமதாஸ் ஆகியோரை முழுமையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இரு தரப்பினரும் தனித்தனியே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இப்புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு தரப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றொரு தரப்பினர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் அங்கு வேறு ஏதும் பிரச்சினை இல்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால் இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவம் நடந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றொரு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் தாழ்த்தப்பட்ட மக்கள் 4 பேர் மற்றும் பெயர் குறிப்பிடாத 50 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்குத்திட்டை ஊராட்சிமன்றத் தலைவர் இராஜேஸ்வரி தாழ்த்தப்பட்டவர் என்பதால், தரையில் உட்கார வைக்கப்பட்டார். அரசு அலுவலர் சிந்துஜா கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் வீ.முருகேஸ்வரி தான் தாழ்த்தப்பட்டவராக இருப்பதால், ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், உயர்ஜாதியினரும் எப்படி எல்லாம் இழிவுபடுத்தப்படுத்துகின்றனர் என்பதை விளக்கி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்ததுண்டு.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கோணாகாபாடி ஊராட்சி மன்றத் தலைவர் - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவர் மற்ற ஜாதியினரால் அவமதிக்கப்பட்டதும், ஊராட்சி மன்றத் தலைவருக்கான கடமைகளைச் செய்யத் தடுத்ததுமான புகாரின் பெயரில் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டதுண்டு.

தாழ்த்தப்பட்டவர்களை அவமதித்தால், இழிவு செய்தால் பிணையில் வர முடியாத சட்டங்கள் இருந்தும், இதுபோன்ற அவமதிப்புகளும், இழிவுகளும் தொடர்கின்றன என்றால், இதற்கான முடிவுதான் என்ன? பரிகாரம்தான் என்ன?

அரசியலிலும் ஜாதியை முன்னிறுத்தும் அரசியல்வாதிகளும், இதற்கு முக்கிய காரணம் என்பதில் அய்யமில்லை.

கிராமங்கள்வரை அரசியல் கட்சிகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஜாதி மறுப்புக் கொள்கைகள்தான் அரசியல் கட்சிகளின் கொள்கைகளாக இருக்கின்றன.

இந்த நிலையில், இத்தகைய ஜாதி தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவது எப்படி என்பதை அரசியல் கட்சிகளின் தலைமைகள் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.

ஜாதி உணர்வோடு செயல்படும் கட்சிக்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்தகையவர்களைக் கட்சிப் பொறுப்புகளில் அமர்த்தவும் கூடாது.

திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை செய்து கொண்டுதான் வருகிறது. அரசியல் கட்சிகள் திராவிடர் கழகத்தின் இத்தகு சமூகப் புரட்சிப் பணிக்குப் பெரும் ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும்.

ஜாதி சழக்குகள் சச்சரவுக்குக் காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை கண்ணியமான வகையில் கடமை உணர்வோடு கைது செய்து தண்டனை பெற்றுத்தரவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் கல்வியில் சிறந்தோங்கி மேலே வளருவதற்கான முயற்சியில் இறங்கவேண்டுமே தவிர, ஜாதி சகதியில் சிக்கி சீரழியக் கூடாது.

No comments:

Post a Comment