கே.சிறீநாத் ரெட்டி
இதயவியல்
நிபுணர் மற்றும் நோய்த்தொற்று சிகிச்சை நிபுணர்,
இந்திய
பொது சுகாதார அமைப்பு
(PHPI),
தலைவர்.
கரோனா
என்ற கொடிய நுண்கிருமிக்கு எதிரான தொடர் போரில் நம்பிக்கை ஒளிக்கீற்று வெளிப்பட்டுள்ளது.
இந்தியா-
தென் ஆப்ரிக்கா நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப கோவிட்-19க்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களின் மீதான காப்புரிமைக்கு விலக்கு அளிக்கும் முடிவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆதரவளித்திருக்கிறார். உலக வர்த்தக அமைப்பில் இதுதொடர்பான விவாதத்தை கொண்டுவரும்போது அமெரிக்கா உட்பட அதிக வருவாய் ஈட்டும் பல நாடுகள் எதிர்ப்பை
வெளிப்படுத்தின. தற்பொழுது தற்காலிகமாக காப்புரிமை விலக்கும் முடிவை அமெரிக்க அதிபர் எடுத்திருப்பதன் வாயிலாக உலக நாடுகளின் ஒப்புதலை பெறுவதற்கு ஊக்கமளிக்கும் என நம்பமுடிகிறது. உலக
வர்த்தக அமைப்பில் வரும் ஜுன் மாதம் இருக்கும் பேச்சுவார்த்தையில் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ், இரஷ்யா ஆதரவளித்தாலும் ஜெர்மனி தன் எதிர்ப்பை பதிவு செய்கிறது.
எதிர்ப்பார்க்கப்பட்ட மறுமொழிகள்
முன்னதாக,
உலக வர்த்தக மய்யத்தில் இதுதொடர்பான முன்னெடுப்பை வைத்தபோது அதிக வருமானம் ஈட்டும் உலக நாடுகளிடம் இருந்து பெருத்த எதிர்ப்பு வெளியானது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. பொதுவாக உலக முழுவதும் சுகாதார வசதிகள் சரிசமமாக கிடைக்கப்பெற வேண்டும் என்ற எண்ணங்கொண்ட நார்வேவும் கூட காப்புரிமைக்கு விலக்கு அளிக்கும் விஷயத்தில் எதிர்க்கவே செய்தது.
உலக
மருந்து உற்பத்தி நிறுவனங்களும் எதிர்பார்த்தவாறு கடுமையாக எதிர்த்ததோடு உலக நாடுகள் பலவற்றுடன் இணைந்து Lobbying இல் ஈடுபட்டன. உலக சுகாதாரக் காவலராக பிம்பப்படுத்தப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் கோவிட்-19 க்கு எதிரான தொழில்நுட்பம், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றின் மீதான காப்புரிமையை விட்டுக்கொடுப்பதில் எதிர்ப்பையே கொண்டுள்ளார். உலகே நெருக்கடியில் கட்டுண்டு கிடக்கும் நிலையிலும் காப்புரிமை வழங்குவதற்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து பிடிவாதமாகவே இருப்பது வருத்தத்திற்குரியதாகவே அமைகிறது.
உலக
வர்த்தக மய்யம் தன் முடிவுகளை உலக நாடுகளின் இணக்கத்துடன் செயல்படுத்துவதையே வழக்கமாக கொண்டிருப்பதால் வாக்கெடுப்புக்கு வழியில்லாமல் போனது. இதன் காரணமாக சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் காப்புரிமையை விடுவிக்க கோரும் எண்ணத்தில் இருந்தாலும் அதற்கான வடிவத்தை பெற முடியாத நிலையே இருந்தது.
வெற்று
காரணங்கள்
காப்புரிமையை
விலக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அதற்கான காரணமாக கூறுவது:
1. தகுந்த
பாதுகாப்பு மற்றும் தரத்துடன் தேவையான எண்ணிக்கையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யக்கூடிய திறன் உலகில் சில நிறுவனங்களிடமே உள்ள நிலையில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளிடம் உள்ள நிறுவனங்களிடம் வழங்குவது தடுப்பூசி தரத்தில் சமரசத்தை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக அமையும் என்ற வாதத்தை முன்வைக்கிறது.
ஆனால்,
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள எந்த நிறுவனங்களிடமும் மருந்துகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்வதற்கு இடமளிப்பதில்லை என்பதே உண்மை.
உண்மையில்
மேற்குறிப்பிட்ட நாடுகளில் தொழிலாளர்களுக்கான செலவு மிகவும் குறைவு என்ற காரணத்தால் மருந்துகள் தரம் மற்றும் பாதுகாப்புடன் கிடைப்பதற்கு அதிக நம்பிக்கையை அளிப்பதாகவே உள்ளது. ஆனால், காப்புரிமை பாதுகாக்கப்படும் வரை மட்டுமே.
அதனாலேயே
உலகப் பெரு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் காப்புரிமை பெற்ற தங்கள் தயாரிப்புகளின் உற்பத்திக்கு ஒப்பந்தம் போடுகின்றன. ஆனால் நோய்த் தொற்றுப் பிடியில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்த காப்புரிமையை கைவிடுவதுதான் சரியானதாக அமையும்.
இதற்கு
மாற்று வழியாக, காப்புரிமையை விடுவிக்காமல் மருந்துகளை தயாரிப்பதற்கான உரிமையை மட்டும் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை. ஆனால் இந்த வாய்ப்பு சில நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைப்பதாக இருக்கும். அத்துடன் இவர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் தெளிவு இல்லாததாக இருப்பதால் மருந்து உற்பத்தி செய்ய ஒப்பந்தம் பெற்ற வளரும் நாட்டின் நிறுவனத்திற்கோ அல்லது மற்ற வளரும் நாடுகளுக்கோ உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் சரிசமமாகவும், நியாயமான விலைக்கும் கிடைக்குமா என்ற எந்த உத்திரவாதமும் இல்லை.
பல்வேறு
நாடுகளாலும் கொடையாளர் களாலும் அமைக்கப்பட்ட கோவாக்ஸ் அமைப்பின் வழியாகவே வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்நாடுகளுக்கு உரிய தடுப்பூசிகளை சேர்ப்பதில் அவை பின்தங்குகின்றன. அதாவது சில அமெரிக்க மாகாணங்கள் ஒட்டுமொத்த ஆப்ரிக்க நாடுகள் பெற்ற அளவைக் காட்டிலும் அதிகளவிலான தடுப்பூசிகளைப் பெற்றிருக்கின்றன.
காப்புரிமை
தள்ளுபடிக்கு எதிரான கருத்தாளர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம், “காப்புரிமை பெற்ற உற்பத்தி நிறுவனங்களைத் தவிர்த்து அம்மருந்துகளை உற்பத்தி செய்யும் திறனோ வசதியோ வேறு எவருக்கும் உள்ளது என்பதற்கான சான்றுகள் இல்லை” எனக் கூறுகின்றனர். ஆனால், தற்பொழுது அமெரிக்க அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு முன்னரே பல நாடுகளைச் சேர்ந்த
பல்வேறு நிறுவனங்கள் அவற்றை உற்பத்தி செய்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன. வளர்ந்த நாடுகளான கனடா, தென் கொரியா நாடுகளின் நிறுவனங்களும் கூட காப்புரிமை நீக்கப்பட்டால் உற்பத்தி செய்ய முன்வந்தன. உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி
தொழில்நுட்ப மய்யம் இதுவரை 50 நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கோரப்பட்டுள்ளது.
உற்பத்தி
செய்வதற்கான திறன் குறைவு போன்ற வாதங்களை விடுத்து வளர்ந்த நாடுகள் மற்றும் பிற கொடை நிறுவனங்கள் தற்போதைய உலக நோய் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உற்பத்தியை பெருக்குவதற்கான வழிகளை ஏற்படுத்தலாம். இந்தியா மருந்து உற்பத்தி திறனை மேம்படுத்தியதையும் 70’களில் உற்பத்தி பொருட்களுக்கான காப்புரிமை பெறுவதில் இருந்து முன்னேறி 2005இல் உற்பத்தி செயல்முறைக்கான காப்புரிமை பெறும் நிலையை அடைந்திருப்பதை வளர்ந்த நாடுகள் அறிய வேண்டும்.
சீனா தொடர்பான பாதுகாப்பு வாதம்
காப்புரிமையை
தள்ளுபடி செய்யும் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் மற்றொரு காரணமாக கூறுவது, காப்புரிமை தரப்பட்ட மருந்துகளை புதிய நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு அதிக காலம் தேவைப்படும் என்பதால் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நீண்ட அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்கின்றனர். ஆனால், இந்த நோய்த் தொற்றின் முடிவு என்று நிகழும் என்று எவராலும் கூற முடியுமா? அதுமட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், கொரோனா கிருமியும் தொடர்ந்து பல புதிய வடிவங்களில்
பரிணாமம் பெற்று பரவிவரும் காலக்கட்டத்தில் இவ்வாறான வாதங்கள் ஏற்புடையதாக எவ்வாறு அமையும்?
2020-இல்
அதுவரை அதிகம் அறியப்படாத சில நிறுவனங்கள் உலகமே பாராட்டும் அளவிற்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடிந்ததென்றால் தற்பொழுதும் தொழில்நுட்ப நுணுக்கத்தை வழங்கி (Technology Transfer) பிற நாடுகளும் உற்பத்தி செய்ய அனுமதிக்க முடியும் தானே. அத்தகைய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மருந்துகளின் தரம் மற்றும் செயற்பாடுகளை ஆராய உலக சுகாதார நிறுவனம் போன்ற தர நிர்ணய அமைப்புகள்
செயல்படலாம். காப்புரிமை தள்ளுபடி செய்வதன்மூலம் தடுப்பூசி மட்டுமல்லாது மருந்துகள், மருத்துவ முறைகளுக்கும் பயனடையும். ஆனால், அதற்கான காலம் எடுக்கும் என்பதில் அய்யமில்லை.
காப்புரிமை
விடுவிப்பதற்கு எதிராக மருந்து உற்பத்தி நிறுவனங்கள் முன்வைக்கும் மற்றொரு கருத்து, அவ்வாறு காப்புரிமை விலக்கப்பட்டால் அந்த தொழில்நுட்பத்தை சீனா திருடக்கூடும் என்கின்றன. கரோனா கிருமியின் அசல் மரபணு தரவுகளை சீனா வழங்கியதைக் கொண்டு தான் மேற்குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரித்தன. உலகில் பல தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான
அடித்தளத்தை கட்டமைத்து தந்ததில் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி நிறுவனங்களின் பெரும் பங்கு உள்ளது. அவ்வாறிருக்க உலகப் பொருளாதாரமும், சுகாதாரமும் பேரழிவின் விளிம்பில் உள்ள நிலையில் காப்புரிமையை விட்டுத்தராமல் இருப்பதால் என்ன பயன் இருக்கமுடியும்? யார் அதை விலை கொடுத்து வாங்குவர்?
கண்டுபிடிப்புகள்
மற்றும் அதற்கான முதலீடுகளுக்கு உரிய பொருளாதார இலாபத்தை ஈட்டுவதன் வாயிலாகவே புதிய உற்பத்திகளை மேற்கொள்ள உதவியாக இருப்பதாக காப்புரிமையின் தேவையை குறித்து பேசுபவர்களின் மாறாத வாதமாக அமைகிறது. ஆனால், காப்புரிமையை தாண்டி உற்பத்தி செய்வதற்கான உரிமையை வழங்கினாலும் அதற்கான ராயல்டி தொகையை அதை கண்டுபிடித்த நிறுவனங்களுக்கு - காப்புரிமை கொண்டவர்களுக்கு வழங்கியே ஆக வேண்டும். இதன்மூலம்
அதீத இலாபம் பெறமுடியா விட்டாலும் அவர்களுடைய வருவாய் தடைபடப் போவதில்லை. ஃப்வைசர் நிறுவனம் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.5 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியது. இந்தாண்டு 15 பில்லியன் டாலர்களை பெறும் என நம்பப்படுகிறது. மாடர்னா நிறுவனம்
18.4 பில்லியன் டாலர்களை 2021ஆம் ஆண்டில் ஈட்டும் எனக் கூறுகிறது.
ஜோ
பைடன் அணுகுமுறை கொண்டு புதிய தொடக்கம்
உலக
வர்த்தக அமைப்பு தன் முடிவை வாக்கெடுப்பின் மூலம் அல்லாது நாடுகளின் ஒப்புதல் மூலமாக எடுக்கும். அமெரிக்கா அரசு தற்பொழுது தலையிட்டாலும் இந்த விவகாரம் நீளப்போவதில் மாற்றில்லை. கோவிட்-19க்கு எதிரான போரில் காப்புரிமை விவகாரத்தில் உலக நாடுகளின் சம்மதத்தை அதிபர் ஜோ பைடன் பெற்றுவிட்டால்
இரண்டாம் உலகப் போரில் தலைமையேற்ற பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்க்கு இணையாக
கருதப்படுவார். ஆனால், தற்பொழுது வரை ஜோ பைடனுக்கு அதுபோன்ற
ஒத்துழைப்புக் கூட்டணி அமைந்து விடவில்லை.
காப்புரிமை
தள்ளுபடி செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஆதரவு அளித்துள்ள நிலையில் வளரும் நாடுகள் உடனடியாக வழங்க
தீவிரம் காட்டவேண்டும். தோஹா பிரகடனத்தின்படி பொது சுகாதார நெருக்கடி காலக்கட்டத்தில் அதை பயன்படுத்த அனுமதிக்கிறது. தேசிய அரசுகள் நம்பத்தகுந்த உரிய நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும். அதிக வருமானம் ஈட்டும் வளர்ந்த நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் அந்நிறுவனங்களுக்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி உலக நாடுகளுக்கு தேவையான உற்பத்தியை பெருக்க உதவ வேண்டும். அதுவே தன்னலம் பாரா மனிதநேயத்தையும் சுய மரியாதையையும் பிரதிபலிக்கக்கூடிய செயலாக அமையும்.
தமிழில்:
அ.சி.கிருபாகரராஜ்
தி
இந்து - 8.5.2021

No comments:
Post a Comment