புதுச்சேரியில் புதுக் குழப்பம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

புதுச்சேரியில் புதுக் குழப்பம்!

 முதல்-அமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் மருத்துவமனையிலிருந்து புதுவை திரும்புவதில் தாமதமாகும் நிலையில் பா... சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் தொற்று தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் புதுச்சேரியில் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம், சட்டமன்றக் கூட்டம், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு என எதுவுமே நடைபெறாத நிலையில் அரசுப் பணிகள் முடங்கி உள்ளன

இந்த நிலையில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற திரு. ரங்கசாமி  அவர்கள் தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கரோனா தடுப்புப் பணிகளில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியில் அங்கம் வகிக்கப் போகும் பா...வும், துணை முதல்-அமைச்சர் உள்பட 

3 அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது.  

இந்த நிலையில் சட்டமன்ற பா... தலைவர் நமச்சிவாயம் தலைமையில் 14.5.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.

இதுபோன்ற அதிகாரிகள் கூட்டங்களை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் தான் நடத்துவது வழக்கம். ஆனாலும் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுள்ள நிலையில் அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் பா... சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது என்.ஆர். காங்கிரஸ் கட்சி வட்டாரத்தை அதிருப்திக்குள்ளாக்கியது.

இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சட்டமன்ற பா... தலைவர் நமச்சிவாயம், "கூட்டணிக்குள் குழப்பம் இல்லை. முதல்-அமைச்சரின் உடல் நலன்தான் முக்கியம். பதவி ஏற்பை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சமாதானம் கூறினார்இருந்தபோதிலும் ஊரில் முதல்-அமைச்சர் இல்லாதநிலையில் பா... தன்னிச்சையாக நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதாகவே கருதப்படுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் புதுவை திரும்பும் முதல்-அமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் இதுபோன்ற அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தல் முடிவுக்குப் பின் புதுவை அரசியல் களம் சூடு பிடித்து இருந்த நிலையில் தற்போதைய நிலவரத்தால் மேலும் அதை அதிகப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தன்னாட்சி படைத்த மாநிலமல்ல. யூனியன் பிரதேசமாகும். இத்தகைய மாநிலங்களில் ஆளுநருக்கு முக்கியத்துவம் உண்டு.

கிரேண்பேடி என்ற முன்னாள் அய்.பி.எஸ். அதிகாரி புதுச்சேரி மாநிலத்தின் லெப்டினண்ட் கவர்னராக இருந்தபோது ஆடிய ஆட்டம் அசாதாரணமானது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. வி. நாராயணசாமி (காங்கிரஸ்) அவர்களின் தலைமையில் அமைந்த ஆட்சியைச் செயல்படாமல் செய்வதிலேயே குறிப்பாக இருந்தார் என்பது வெளிப்படையானது

முதல் அமைச்சர் தூண்டிலில் கண் வைத்திருந்த திருவாளர் நமச்சிவாயத்தை (காங்கிரஸ்) பயன்படுத்தி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் ஆட்சி பா... முயற்சியால் கவிழ்க்கப்பட்டது.

புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. முதல் அமைச்சர் நாற்காலிக்காக காங்கிரசிலிருந்து வெளியேறிய நவச்சிவாயத்தின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபமானது. என்.ஆர். காங்கிரஸ் அதிகம் இடம் பிடித்ததால் திரு. ரங்கசாமி அவர்கள் முதல் அமைச்சர் ஆகி விட்டார்

நமச்சிவாயம் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார். தனக்கு துணை முதல் அமைச்சர் பதவி கிடைக்குமா என்று ஏக்கப் பெரு மூச்சு விடும்நிலை. காங்கிரசில் தொடர்ந்திருந்தால் அந்தத் துணை முதல் அமைச்சர் பதவியிலாவது தொடர்ந்து இருக்கலாமே - மோசம் போய் விட்டோமே என்று புலம்பும் நிலை.

முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி  சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பா...வினர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது எந்த வகையில் சரி? இது சட்ட விரோதமான செயல் அல்லவா? அதிகாரிகள் இதற்கு எப்படி இணங்கினர் என்பது முக்கியமான கேள்வியாகும்.

முதல் அமைச்சர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் பா...வைச் சேர்ந்த மூன்று பேர் நியமன உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் நியமிக்கப்பட்டனர்.

ஆறு இடங்களை சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்ற பா... மூன்று சுயேட்சை உறுப்பினர்களைத் தன் பக்கம் கொண்டு வந்து விட்டது. நியமன உறுப்பினர்கள் மூவரையும் சேர்த்தால் பா...வின் பலம் 12 ஆகி விட்டது. இன்னும் சில சுயேச்சை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு குள்ள நரித் தந்திரத்தில் ஈடுபடுகிறது பா...! அதிகாரம் இல்லாதவர்கள் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார்கள் என்றால் இதன் பொருள் இவர்கள் ஆட்சிக்கே வந்து விட்டனர் என்ற எண்ண ஓட்டத்தை மக்களிடம் உருவாக்குவது தானே - முதல் அமைச்சரை, அவரது அமைச்சரவையைப் பலகீனப்படுத்து வதுதானே!

புதுவை மாநில 'பொல்திக்' என்பது ஒரு தனி பாணிதான் எப்பொழுதும்  - இது ஒரு வகை  என்று எடுத்துக் கொள்வதா?

புதுச்சேரி மாநில மக்கள்; நடந்து முடிந்த தேர்தலில் தவறு செய்திருப்பதை இப்பொழுதாவது உணர்வார்களா? மறுபடியும் இந்தத் தவறை செய்யக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோள்!

 

No comments:

Post a Comment