பிளஸ்-2 மதிப்பெண் கணக்கீடு செய்ய மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்: தேர்வுத்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

பிளஸ்-2 மதிப்பெண் கணக்கீடு செய்ய மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்: தேர்வுத்துறை

 சென்னை, ஜூன் 26 பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கீடு செய்வதற்காக, அந்த மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணை சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

உயர்கல்வியில் சேருவதற்கு பிளஸ்-2 மதிப்பெண் அவசியம் என்பதால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி என்பது குறித்து ஆராய ஒரு குழுவும் அமைக்கப்பட்டு அவர்களும் ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கீடு செய்வதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு அறுவுறுத்தலை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 2020-21ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்கள், பிளஸ்-1 சேர்க்கையின் போது சமர்ப்பித்த சான்றிதழ்கள், பதிவுகளுடனான பட்டியலை, அவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியலுடன் இணையதளத்தில் வருகிற 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.

சரிபார்க்கப்பட்ட இறுதி பட்டியலில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றளிக்க வேண்டும். அதனை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு பிளஸ்-2 மதிப்பெண் கணக்கிடப்பட உள்ளதா? என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை என்றாலும், பிளஸ்-2 மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணை தற்போது பதிவேற்றம் செய்ய சொல்லி இருப்பது, பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கீடு செய்வதற்கு அது அடித்தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித்துறை தீவிரம்

இதற்கிடையில், பிளஸ்-2 பொதுத் தேர்வை ரத்து செய்த அனைத்து மாநிலங்களும் ஜூலை 31ஆம் தேதிக்குள் அதற்கான மதிப்பெண் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் கணக்கிடுவதற்கான பணிகளில் தேர்வுத்துறையும், கல்வித் துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment