பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மாநிலங்கள் அடையாளம் காணும் அதிகாரம் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் மறுஆய்வு மனு - நாளை விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 27, 2021

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மாநிலங்கள் அடையாளம் காணும் அதிகாரம் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் மறுஆய்வு மனு - நாளை விசாரணை

புதுடில்லி, ஜூன் 27 அரசமைப்பின் 102ஆவது சட்டத் திருத்தத்தின்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடை யாளம் காண்பதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனு நாளை (28.6.2021) விசாரணைக்கு வரவுள்ளது.

மகாராட்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதில் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகிய 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ‘அரசமைப்பின் 102-ஆவது சட்டத் திருத்தத்தின்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத் தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநிலங் களுக்கு இல்லை. அந்தச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 366 (26சி). 342 பிரிவுகளின்படி அந்த வகுப் பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. அந்த வகுப்பில் எந்தவொரு சமூகத்தையும் சேர்க்க, விலக்க, மாற்றம் செய்ய தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் அல்லது குடியரசுத் தலை வருக்கு பரிந்துரைகளை மட்டும்தான் மாநிலங்களால் வழங்க முடியும்என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில் நீதிபதிகள் அசோக்பூஷண், எஸ். அப்துல் நசீர் வழங்கிய தீர்ப்பில், ‘102-ஆவது சட்டத் திருத்தத்தின் 342 பிரிவு சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரத்தை மாநிலங் களிடம் இருந்து பறித்துக் கொள்ள வில்லைஎன்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பான்மையின் அடிப்படையில் 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனு வில், ‘102-ஆவது சட்டத் திருத்தத்தின் 342 பிரிவு குறித்து நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் கூறியதே சரியான விளக்கம். எனவே இதுதொடர் பாக திறந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த மறுஆய்வு மனு தொடர்பாக தீர்ப்பளிக்கப்படும் வரை கடந்த மே 5-ஆம் தேதி பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நாளை (28.6.2021) திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment