மகளிருக்கான சிறப்புப் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

மகளிருக்கான சிறப்புப் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்!

 சென்னை, திருவாரூர், காரைக்கால், மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் அரியலூர் மண்டலங்கள்

சென்னை, ஜூலை 31- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் - பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்தும் மகளி ருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் 19.07.2021 அன்று முதல் மாநிலம் முழுவதும் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

19.07.2021 (திங்கட்கிழமை):

சென்னை, திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, விழுப்புரம், மதுரை மற்றும் அரியலூர் உள்ளிட்ட 7 மண்ட லங்கள் இணைந்த பிரிவு - 3இன் முதல் வகுப்பு காணொலி வாயிலாக 19.07.2021 அன்று மாலை 6.00 மணிக்குத் தொடங் கியது.

முதல் நிகழ்வாக, பயிற்சி மாணவர் எம்.கே.பவதாரிணி தந்தை பெரியாரின் பொன்மொழி ஒன்றை வாசித்தார்.

இந்தச் சிறப்பு வாய்ந்த பயிற்சி வகுப்பின் முதல் உரையை நிகழ்த்திய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களைக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் .இன்பக்கனி பயிற்சி வகுப்பில் இணைந்திருந்த மகளிருக்கு அறிமுகப்படுத்தினார். “புலவர் படிப்புக்கு விரும்பி விண்ணப்பித்து அவரின் ஜாதியைக் காரணம் காட்டி தருமபுரி ஆதீனக் கல்லூரியால் விண்ணப்பம் மறுக்கப்பட்ட தால் கால்நடை மருத்துவ உதவியாளர் பயிற்சி பெற்று தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் அரசுப்பணி செய்து இறுதியாக சென்னையில் பணியிலிருக்கும் போது, 1985இல் விருப்ப ஓய்வு பெற்று இயக்கத்தில் களப் பணிக்காக தன்னை இணைத்துக் கொண்டவர். அவசரகால கடுமையான நேரத் திலும் அரசுப் பணியில் இருந்துகொண்டே இயக்கப்பணி ஆற்றிய கொள்கை வீரர். இயக்கத்தினருக்கு ஒரு என் சைக்ளோபீடியாவாகவும், கொள்கை எதிரிகளுக்கு மின்சாரமாகவும் விளங்கும் கவிஞர்என்று எடுத்துரைத்தார்.

கழகத்துணைத் தலைவர்

தந்தைபெரியார் ஓர் அறிமுகம்என்ற தலைப்பில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் வகுப்பு எடுத்தார்.

தந்தைபெரியார் பெண் கல்வியின் அவசியத்தை எப்படி எல்லாம் சிந்தித்து பேசினார்; அதற்காகப் பாடுபட்டார்; பெண் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக மிதிவண்டியில் பள்ளிக்குப் பயணிப்பதைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்; அலி சகோதரர்கள், காந்தியார், ஜெயபிரகாஷ் நாராயண், குன்றக் குடி அடிகளார், இன்னும் இது போன்று மாறான கருத்து கொண்டோரிடமும் எப்படி தோழமை கொண்டார்; தான் சாகும் வரையில் இந்த இனத்திற்காக எப்படி எல்லாம் பாடுப்பட்டார் என மகளிருக்குப் புரியும் படி எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் விளக்கினார். “மண்டைச் சுரப்பை உலகு தொழும்என்ற புரட்சிக் கவிஞரின் கவிதையொடு தந்தை பெரியாரைப் பற்றிய அறிமுகத்தை முடித்தார்.

பயிற்சி வகுப்பில் இருந்த மகளிர் அனைவரும் ஆர்வத் தோடும், உற்சாகத்தோடும் வகுப்பைக் கவனித்தனர். பிறகு அவர்கள் எழுப்பிய சில வினாக்களுக்கும் சிறப்பாக விளக்கமளித்தார் கவிஞர்.

தந்தை பெரியாருக்குபெரியார்என்று மகளிரால் பட்டம் அளிக்கப்பட்ட நாள் எது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சரியான விடையை முதலில் அளித்து பரிசுத்தொகை ரூ.100/- பெற்றார் எஸ்.திவ்யா என்ற மாணவர். இறுதியாக என்.சத்யா அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு இணைப்புரையை பெரியார் களம் இறைவி இறையன் அவர்கள் வழங்கினார்.

20.07.2021 (செவ்வாய்க்கிழமை):

இரண்டாம் நாள் நிகழ்வு காணொலி வாயிலாக 20.07.2021 அன்று மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.

இந்த சிறப்பு வாய்ந்த பயிற்சி வகுப்பில் தந்தை பெரியாரின் பொன்மொழியை பயிற்சி பெறும் வி.கலைச்செல்வி வாசித்தார்.

தந்தை பெரியாரும், சமூகநீதியும்

வெளியுறவுச் செயலாளர்

தந்தை பெரியாரும், சமூகநீதியும்என்ற தலைப்பில் வகுப்பெடுக்க இணைந்த திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களை  திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளர் வழக்குரைஞர்  பா.மணி யம்மை அவர்கள் மகளிருக்கு அறிமுகம் செய்தார். சமூகநீதி களத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பயணித்துத் தந்தை பெரியாரையும், இயக்கத்தையும், தமிழர் தலைவரையும் வட இந்தியாவிற்குக் கொண்டு சென்றதில் பெரும் பங்கு வகிப்பவர். இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான 69% இடஒதுக்கீட்டைப்  பற்றி இன்றைய தலைமுறையும், நாளைய தலைமுறையும் தெரிந்துக்கொள்ள “69% இடஒதுக்கீடு ஏன், எப்படி, யாரால்என்ற நூலை எழுதி யுள்ளார்! ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது! அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் பொறுப்பா ளராக இருந்து சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருப்பதை மகளிருக்குத் தெரிவித்தார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

சமூகநீதியின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் இந்திய அரமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயேநீதி”(Justice)என்பதை - “சமூகம், பொருளாதாரம், அரசியல்” (Social, Economic, Political)என்று தான் வரிசைப் படுத்துகிறார் அண்ணல் அம்பேத்கர். அந்தச் சமூகநீதியைத் தான் பல ஆண்டுகளுக்கு முன்னாள் வட இந்தியாவில் ஜோதிபா பூலே தொடங்கினார். காங்கிரசில் தான் இருந்த போது மெட்ராஸ் ராஜதானியில் நடைபெற்ற பல மாநாடுகளில் சமூகநீதியை நிலைநாட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர தந்தை பெரியார் பல முறை முயற்சித்தார். அவருடைய முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைய, இறுதியில் காங்கிரசை விட்டு அவர் வெளியேற அதுவே காரணமாக அமைந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் இடையறா முயற்சியால் சில உயர் பதவிகளுக்கு வந்தாலும் பார்ப்பனர்கள் தங்கள் உயரிய நிலையிலிருந்து அந்த ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வளவு சிறுமைப் படுத்தினர் என்பதை விளக்க, முக்கிய வழக்கான மாவட்ட ஆட்சியர் ஆர்.எஸ்.மலையப்பன் வழக்கினை எடுத்துக் கூறி பல வரலாற்று உண்மைகளை பங்கேற்ற மகளிருக்கு தெளிவு படுத்தினார்.

பங்கேற்ற மகளிர் அவரின் உரையை ஆர்வத்தோடு ஊன்றி கவனித்து, பெண்களின் சமூகநீதியைச் சார்ந்த பல கேள்விகளைக் கேட்டு தங்கள் அய்யங்களைத் தெளிவு படுத்திக் கொண்டனர்.

முந்தைய வகுப்பில் எடுக்கப்பட்ட பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விக்குச் சரியான விடையை முதலில் அளித்து பரிசுத்தொகை ரூ.100/- பெற்றார் பங்கேற்ற பி.எஸ்.கிரிஜா அவர்கள். இறுதியாக ஷாலினி ஜெரால்டு நன்றி கூறி னார். இறைவி இறையன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

21.07.2021 (புதன்கிழமை):

மூன்றாம் நாள் நிகழ்வு காணொலி வாயிலாக 21.07.2021 (புதன்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.

தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள்

பயிற்சி மாணவி வி.விஷாலியால் வாசிக்கப்பட்ட தந்தை பெரியாரின் பொன்மொழி ஒன்றோடு வகுப்பு தொடங்கியது.

தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள்  என்ற தலைப் பில் வகுப்பெடுக்க வந்த திராவிட மகளிர் பாசறையின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மையை கழகத்தின்  துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி மகளி ருக்கு அறிமுகப்படுத்தினார். சென்னையில் மிகவும் எளிமை யான குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தாலும் தன் மன உறுதியாலும், உழைப்பாலும் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாகி, பிறகு சட்டம் படித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து அந்தப் பணியோடு இயக்கப் பணியையும் செய்துக் கொண்டிருப்பவர். குடும்பமே தி.மு.கவில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் இதிலும் இவர் முதல் தலைமுறையாக தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணி ஆற்றுகிறார். தந்தை பெரியார் திடலில் 2015ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத் கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் நாள் அன்று காவிகளின் சூழ்ச்சியை முறியடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களால் மாட்டுக்கறி விருந்துடன் நடத்தப்பட்டதாலி அகற்றும் நிகழ்ச்சியில்வழக்குரைஞர் மணியம்மையின் அம்மாவும் விரும்பி முன்வந்து தன் தாலியை அகற்றிக் கொண்டார். மாணவர் கழகத்தில் திறம்பட செயலாற்றி தற்போது திராவிட மகளிர் பாசறையின் பொறுப்பாளராகவும் சிறப்பாக களப்பணி ஆற்றுகிறார் மணியம்மை என்று எடுத்துரைத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களின்

குடியிருப்புகளுக்கு குடிநீர்

பிறப்பினிலே பெரியாராய்த்தான் பிறந்தார்என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுடன் ஆரம்பித்த வகுப் பாசிரியர், தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகளைப் பற்றி கூறுகையில் உலகில் எங்கும் இல்லாத ஜாதிக் கொடுமையை, இழிவை நீக்க இந்நாட்டில் காலமெல்லாம் போராடியவர் தந்தை பெரியார். ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க வந்த தலைவர்கள் பலர் உண்டு, ஆனால் ஜாதியை ஒழிக்க தன் வாழ்நாளின் இறுதி வரை போராடியத் தலைவர் தந்தை பெரியார் ஒருவரே என்றார். தெற்கு ஆசியாவிலேயே முதல்முதலாக தன்னுடைய ஈரோடு நகராட்சியில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டியை நிறுவி குடிக்கக் தண்ணீர் மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்தார். அவரின் ஜாதி ஒழிப்புப் பணிகளை விளக்கும் பொருட்டு, 1951இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமை போரால் முதல் முறையாக திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டம், 1952இல் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம், 1938ஆம் ஆண்டு நடை பெற்ற நீடாமங்கலம் வன்கொடுமை ஆகியவற்றை விவரித்தார்.

உச்சநீதிமன்றத்தில்

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீதிபதி

தீண்டாமை ஒழிக்கப் படுகிறதுஎன்று கூறி ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மக்களுக்கு மாநாடுகளின் மூலமாக எடுத்துக் கூறி, அதனை 1957இல் எரித்து, சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்பதே எழுதப்படாத சட்டத்தில் அதனை எழுதவும் வைத்தவர். அப்போராட்டத்தினால் 20க்கும் மேற்பட்ட தன்னலமற்ற தொண்டர்களை இயக்கம் பறி கொடுத்தது. நாடு சுதந்திரம் அடைந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நீதிபதி இல்லையே என்ற தந்தை பெரியாரின் ஆதங்கமே, ஜஸ்டிஸ் வரதராஜன் அவர்களைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகக் கலைஞர் நியமிக்கவும், பிறகு அவரே உச்ச நீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீதிபதி ஆகவும் வழிவகுத்தது என்று தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகளை, வரலாற்று நிகழ்வுகளை பங்கேற்ற மகளிருக்கு எடுத்துரைத்தார்.

வகுப்பில் உரையைக் கூர்ந்து கேட்ட மகளிர் தோழர்கள் பல கேள்விகளை எழுப்பி வகுப்பாசிரியரின் விளக்கங்களைப் பெற்று தங்கள் அய்யங்களைத் தீர்த்துக் கொண்டனர்.

முந்தைய வகுப்பில் எடுக்கப்பட்ட பாடத்திலிருந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குச் சரியான விடையளித்து பரிசுத்தொகை ரூ.100/- பெற்றார் ஆர். புவனேஸ்வரி.

இறுதியாக மாணவி லைலா அவர்கள் வகுப்பில் கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இறுதி வரை இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார் பெரியார் களம் இறைவி இறையன்.

22.07.2021 (வியாழக்கிழமை):

நான்காம் நாள் நிகழ்வு காணொலி வாயிலாக 22.07.2021 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்குத் தொடங் கியது.

மகளிர் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்த பொன்மொழி தான் என்றாலும் அது தனக்கு மிகவும் பிடித்த பொன்மொழி என்று கூறி தந்தை பெரியாரின் பொன்மொழியை வாசித்து நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார் பயிற்சி மாணவர் எஸ்.யாழினி.

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

பயிற்சி வகுப்பெடுக்க வந்த ஆசிரியர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனியை அறிமுகப்படுத்திய திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, “திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால்மதிவதனிஎன்று பெயர் சூட்டப்பட்ட பெருமைக்குரியவர். இவரது அம்மா பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த போதும் திருமணத்திற்குப் பிறகு இணையருடன் திராவிட இயக்கப் பணியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். மதிவதனி அவர்கள் பயோடெக்னாலஜி இளங்கலை முடித்துவிட்டு சட்டம் பயின்று வழக்குரைஞராகி மீண்டும் சட்ட மேற்படிப்பு (எம்.எல்.,) படித்துக் கொண்டிருக்கிறார். சட்டப்படிப்பில் (பி.எல்.,) கோல்டு மெடல் பெற்றவர். சிறந்த பேச்சாளர். சிறந்த களப் பணியாளர். இயக்கத்தின் மாணவர் கழகத்தில் திறம்பட செயலாற்றி இப்போது திராவிட மகளிர் பாசறையின் மாநில பொறுப்பிலும் செவ்வனே பணியாற்றி வருபவர்என்று குறிப்பிட்டார்.

தந்தை பெரியாரின்

பெண்ணுரிமைச் சிந்தனைகள்

தந்தைபெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்என்ற தலைப்பில் வகுப்பெடுத்த திராவிட மகளிர் பாசறையின் மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதினி, பெண்கள் அன்று முதல் இன்று வரை குடும்பம், கல்வி, திருமணம், தாய்மை, குழந்தை என்று அனைத்தின் பெயராலும் அடிமைப்படுத்தப் படுகிறார்கள். இவை அனைத்திலிருந்தும் பெண்களை விடு விப்பதே தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனையாக இருந்தது. பெண் உரிமை என்பது பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள மனித உரிமையே! இந்த உரிமை ஆண் பெண் பேதமற்றது. பெண்களின் அடிமைத்தனத்திற்கு ஜாதி, மதம், கடவுள், வேதம் ஆகியவற்றைப் பற்றிய பொது சமூகத்தின் சிந்தனையே காரணமாக அமைந்தது. இவற்றை பெண் களிடமிருந்து ஒழிக்காமல் அவர்களின் விடுதலை சாத்திய மில்லை என்று தந்தை பெரியார் நம்பினார். எனவேதான் பெண்களின் கைகளிலிருந்து கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுக்கச் சொன்னார். தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல் அனைத்து பெற் றோரும் தங்கள் பெண்களுக்கே அதிக செலவு செய்து படிக்க வைத்து அவர்களை அறிவு உடையவர்களாகவும், துணி வுள்ளவர்களாகவும் வளர்க்க அறிவுறுத்தினார். திருமண மந்திரங்களிலும் மற்ற அனைத்து சடங்குகளிலும் பெண்கள் இழிவு படுத்தப் படுவதால் இவற்றிற்கு பெண்கள் உடன்படக் கூடாது என்றார். திருமணத்தைத் தவிர்க்கச் சொன்ன பெரியார் பெண்களை ஒழுக்கமின்றி வாழச் சொல்லவில்லை. மாறாக அந்த ஒழுக்கத்தின் அடிப்படை அன்பாக இருக்க வேண்டுமேயன்றி சமூகத்தின் மீதுள்ள பயமாக இருக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தினார். பெண்களுக்கு வாக் குரிமை, சொத்துரிமை என்று அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று போராடிய பெரியார்எப்படி பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்காதோ அது போல் ஆண்களால் பெண்களுக்கு நிச்சயம் விடுதலை கிடைக்காதுஎன்றார். அவர் வலியுறுத்திய பல பெண் ணுரிமைகள் இன்று சட்டமாகி விட்டன. ஓர் ஆணாயிருந்தும் பெண்களின் உரிமைகளுக்காக ஓயாது உழைத்த தாயுமானவர் தந்தை பெரியார் என்று தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகளை மகளிரின் மனதில் ஆழமாகப் பதிவு செய்து அவர்களின் உணர்வுபூர்வமான வினாக்களுக்கு அமைதி யாகவும், ஆழமாகவும் விடையளித்தார் சே.மெ.மதிவதனி. மகளிர் தோழர்களுக்கு சோர்வு ஏற்படாத வண்ணமும் எளி தாக புரியும் விதத்திலும்  படங்கள் (ஸ்லைடு)  போட்டும் விளக்கினார்.

முந்தைய வகுப்பில் எடுக்கப்பட்ட பாடத்திலிருந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குச் சரியான விடையளித்து பரிசுத்தொகை ரூ.100/- பெற்றார் பி.ஆனந்தி அவர்கள்.

இறுதியாக பி.மதுபாலா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் இணைப்புரையை பெரியார்களம் இறைவி இறையன் வழங்கினார்.

23.07.2021 (வெள்ளிக்கிழமை)

அய்ந்தாம் நாள் நிகழ்வு காணொலி வாயிலாக 23.07.2021 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.

தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள்

பயிற்சி மாணவி எஸ்.ரேவதி, தந்தை பெரியாரின் பொன் மொழி ஒன்றை வாசித்து வகுப்பினைத் தொடங்கி வைத்தார்.

தந்தைபெரியார் நடத்திய போராட்டங்கள்என்ற தலைப்பில் வகுப்பெடுக்க வந்த, கழகப்  பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களைக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி அறிமுகப்படுத்தினார். “வகுப்பில் இணைந்திருக்கும் மகளிரில் அய்வரைத் தவிர மற்ற அனைவரும் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் பிறந்தே இல்லாதவர்கள். இவர்கள் எப்படி நாளிதழ், புத்த கங்கள் வாயிலாக தந்தை பெரியாரைப் பற்றி அறிந்தார்களோ அதைப் போன்று ஒரு நாள்விடுதலைநாளிதழ் படிக்கக் கிடைத்த வாய்ப்பால் நாள்தோறும் அதைப் படித்து தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் முனைவர் துரை.சந்திரசேகரன். இயக்கத்தில் இணைய பல மாணவர் களை உருவாக்கியவர். தான் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்தது மட்டுமல்லாமல் தன் குழந்தைகளுக்கும் செய்து வைத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயமரியாதை திருமணங்களைத் தலைமை ஏற்று நடத்தி வைத்தவர். பட்டி தொட்டி எல்லாம் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பக் கூடியவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், முனைவர் மற்றும் வழக்குரைஞர் ஆவார்என்று அறிமுகப்படுத்தினார்.

போராடும் குணம்

தந்தை பெரியார் வாழ்ந்த நாள்கள், சுற்றுப்பயணம் செய்த நாள்கள், தூரம் ஆகியவற்றைக் கூறி வகுப்பினைத் தொடங்கிய முனைவர் துரை.சந்திரசேகரன் சிறு வயது முதலே தந்தை பெரியார் அவர்கள் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடும் குணத்தைக் கொண்டிருந்தார் என்றார். காந்தியாரால் ஈர்க்கப்பட்டு 1921இல் தந்தை பெரியார் நடத்திய கள்ளுக்கடை மறியல் போராட்டத்தால் ஈரோடு நகரம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்பட்டது. அந்தப் போராட்டத்தை நிறுத்த ஈரோட்டில் உள்ள இரண்டு பெண் களாலேயே முடியும் என்று அன்னை நாகம்மையார், அன்னை கண்ணம்மையார் ஆகியோரைப் பற்றி காந்தி யாரையே கூற வைத்தது.

குருகுலப் போராட்டம்

1924இல் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோருக்கு குருகுலத்தில் தனித்தனியாக உணவு  வழங்கப்படுவதை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்; கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப் பட்டோரை நடக்க அனுமதிக்காததை எதிர்த்து நடத்திய வைக்கம் போராட்டம்; 1927இல் தந்தை பெரியார் கலந்து கொண்ட ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் (அதில் மேனாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் பெரியாரின் கைப்பெட்டியைச் சுமக்க முன்வந்தது, அதைப் பெரியார் அவர்கள் மறுத்தது); 1938இல் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து நடத்திய கடுமையான மொழிப்போராட்டம்; 1950இல் நீதிக்கட்சி ஆட்சி தொட்டே தமிழர்கள் அனுபவித்து வந்த வகுப்புவாரி உரிமை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மறுக்கப்பட்டதை எதிர்த்து முதல் முறையாக மாணவர் களையும் இணைத்து நடத்திய போராட்டம், அதனால் முதல் முறையாக திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டம்; 1953இல் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், அதனால் பச்சைத் தமிழர் காமராஜர் அவர்கள் முதல்வராக்கப்பட்டு அவர் கிராமப்புற குழந்தைகளுக்கு கல்விக்கொடை அளித்தது; மீண்டும் இந்தி திணிப்பை எதிர்த்து 1955இல் தேசியக் கொடி எரிப்பு போராட்டத்தை அறிவித்து அன்றைய முதல்வர் காமராஜர் அளித்த உறுதி மொழியால் போராட்டத்தை நிறுத்தியது; 1957இல் நடத்திய ஜாதியைப் பாதுகாக்கும் சட்ட எரிப்புப் போராட்டம் - அதனால் சிறையிலும் வெளியே வந்தும் இறந்த 20க்கும் மேற்பட்ட தன்னலமற்ற கழகத் தொண்டர்கள்; 1958இல் நடத்தியபிராமணாள்பெயர் பலகை அழிப்பு போராட்டம்; இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் போராட்டம்; என்று தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்நாளில் நடத்திய பல போராட்டங்களைப் பட்டியலிட்டு உணர்வு பூர்வமான விளக்கமளித்து இளைய தலைமுறையினருக்கு எழுச்சி ஊட்டினார் பேராசிரியர். வினாக்களைத் தொடுத்த மகளிருக்கும் நகைச்சுவை உணர்வோடு விளக்கமளித்து தெளிவு செய்தார்.

முந்தைய வகுப்பில் எடுக்கப்பட்ட பாடத்திலிருந்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குச் சரியான விடையளித்து பரிசுத்தொகை ரூ. 100/- பெற்றார் நித்யா அவர்கள்.

பயிற்சி மாணவர் ரத்னா தீபக் அவர்கள்தோள் சீலைபோராட்டத்தைப் பற்றிய பாடல் ஒன்றை இனிமையாகப் பாடினார். 

இறுதியாக பயிற்சி மாணவர் பாலகவிதா அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து இணைப்புரையை  வழங்கி வகுப்பை முடித்து வைத்தார் பெரியார்களம் இறைவி இறையன்.

அனைத்து நிகழ்வுகளையும் .இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்), பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) மற்றும் இறைவி இறையன் (தலைவர், பெரியார் களம்) ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment