மனித குல வரலாற்றில் மிகவும் மோசமான ஆகஸ்ட் முதல் வாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

மனித குல வரலாற்றில் மிகவும் மோசமான ஆகஸ்ட் முதல் வாரம்

மனித குல வரலாற்றில் மிகவும் மோசமான வாரமாக ஆகஸ்ட் முதல்வாரம் கருதப்படும். 1945 ஆகஸ்ட் மாதம் 6 ஆம்தேதி ஹீரோசிமாவில் குட்டிப்பையன் என்ற அணுகுண்டையும் 9 ஆம் தேதி நாகசாகியில் கொழுத்த மனிதன் என்ற குண்டையும் அமெரிக்கா வீசியது,

 உலகப்போரில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்திய அய்ரோப்பிய, ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளை விட்டுவிட்டு குட்டி நாடான ஜப்பானை அமெரிக்கா குறிவைத்தது.

  அணுப்பிளவில் ஏற்படும் தாக்கத்தை கொண்டு மனிதகுலத்திற்கு நற்செயல்களைச்செய்ய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினார்கள். கண்டுபிடிப்பை உலகிற்குத் தந்தனர். ஆனால் போர் மனிதர்களை மிருகமாக்கும் என்பதற்கு இதுவே பெரும் எடுத்துக்காட்டு

 அமெரிக்காவால் ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகு, இந்த ஒளிப்படம் ஒரு அமெரிக்கப்படை வீரரால் எடுக்கப்பட்டது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு ஜப்பானில் ஏற்பட்ட சேதங்களை ஆவணப்படுத்தும் பணி வழங்கப்பட்ட ஜோ டொன்னல் என்ற அமெரிக்க ராணுவ வீரர் இந்த ஒளிப்படத்தை எடுத்தார்.

 இந்த ஒளிப்படம் குறித்து அவர் தனது நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். “10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தனது தோளில் ஒரு குழந்தையைக் கட்டிக் கொண்டு நிற்கிறான். இப்படி சிறுவர்கள் தம்பி, தங்கைகளை தோளில் சுமந்து கொண்டு விளையாடுவதை நாம் கண்டிருக்கிறோம்.  ஆனால் இந்தச் சிறுவன் விளையாடுவதற்காக தோளில் ஒரு குழந்தையை சுமந்து வரவில்லை. அவன் எதோ ஒன்றை பெரிதாக சிந்தித்துக் கொண்டு இருந்தான். அவனது காலில் செருப்பு கூட இல்லை.

அந்தச் சிறுவன் தனது தோளில் இருந்த குழந்தையைத் திரும்பிப் பார்த்தான், அப்போதுதான் அவனது தோளில் இருந்த குழந்தை இறந்திருப்பதை நான் கவனித்தேன். அந்தக் குழந்தையின் கழுத்து சரிந்திருந்தது. இறந்த குழந்தையைச் சுமந்து கொண்டு அந்தச் சிறுவன் பிணங்களை எரிக்கும் இடத்திற்குச் சென்றான். அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் தனது உதடுகளை கடித்துக் கொண்டான்.

அப்போது, அவனது வாயில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் அவனது தோளில் சுமந்துவந்த, அவனது தங்கையின் உடலைத் தகனம் செய்வதற்குக் கொடுக்கிறான். கொஞ்ச நேரத்தில் அந்தப் பிஞ்சு உடல் தீயில் கருகி விடுகிறது. அந்தத் தீச்சுவாலையைப் பார்த்த வண்ணமே அந்தச் சிறுவன் நடக்கத் தொடங்கினான்.”

இந்தச் சம்பவம் நடந்து 72 வருடங்களின் பின்னர் கிறிஸ்துவ மதத் தலைவர் போப் தனது புத்தாண்டு வாழ்த்து அட்டையில் இந்தப் ஒளிப்படத்தை பிரசுரித்து இப்படி ஒரு குறிப்பையும் சேர்த்துவிடுகின்றார்.

போரினால் நமக்கு கிடைத்தது இதுதான்ஆயுதங்களும் வன்முறையும்  என்றுமே நமக்கு அமைதியைத் தருவதில்லை! ஆனால் என்றும் உலகம் இதை ஏற்றுக்கொள்வதில்லை.

No comments:

Post a Comment