அ.தி.மு.க. அரசு சட்டத்தைத் ‘‘திருந்த செய்யத் தவறியதால்'' ஏற்பட்ட தீர்ப்பு இது!
ஓட்டைகளை அடைத்து சட்ட நிபுணர்களைக் கலந்து புதிய சட்டம் இயற்றுக!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, ‘ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்' சரிவர திருந்தச் செய்யத் தவறியதால், சென்னை உயர்நீதிமன்றம் அச்சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இளைஞர்களைத் தற்கொலை செய்யும் அளவுக்குத் தவறான வழிக் குத் துரத்திச் செல்லும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டம் ஒன்றை தக்க சட்ட நிபுணர் களைக் கலந்து ஆலோசித்து புதிய சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்றவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டிற்கு அ.தி.மு.க. அரசு தடை விதித்த சட்டத்தினை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. காரணம் நீதி மன்றமே கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு எவ்விதத் தடையும் இல்லை!
இந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. பல்வேறு சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டி, சென்ற தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட (அ.தி.மு.க. அரசு) அச்சட்டத்தின் ஓட்டைகளைக் காரணம் காட்டி ரத்து செய்துள்ளது; அவற்றை அடைத்து, புதிய சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டு வருவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஒரு தனிச் சட்டம் இயற்றும்போது ‘செய்வன திருந்தச் செய்' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்! ‘அவசரக் கோலம், அள்ளித் தெளித்த கதி' என்பதற்கொப்ப சரியான முறையில் சட்ட வாதங்களும் அமையாததால் தான், சட்டத்தினை ஆராயும் நீதிமன்றம் அதனை ரத்து செய்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு - சூதாட்டம்தான் - மற்ற எவர் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளா விட்டாலும் அப்பட்டமான உண்மை அது.
இதன்மூலம் பாதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ஏராளம்! 7 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; சிறுவர்கள், ஒன்றுமறியாத குழந்தைகள்கூட தமது பெற்றோரின் கிரிடிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் பணத் தைத் தொலைத்துள்ளனர்.
முந்தைய அவசரச் சட்டத்தை சரியான முறையில் தயாரித்திருந்தால், இப்படி ஒரு நிலை வந்திருக்காது. புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்தத் தடையு மில்லை என்று தீர்ப்பிலேயே தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்!
சட்ட அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
உடனடியாக தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், புதிய சட்டத்தை சிறப்பான வகையில் விரைந்து உருவாக்குவோம் என்றும் உடனடியாகத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!
இதனைச் சரிவர செய்யாத தங்கள் ஆட்சியின் திறமையின்மையை மறைத்துவிட்டோ, மறந்துவிட்டோ தி.மு.க. ஆட்சி வழக்கினை சரியாக நடத்தவில்லை என்று ஆதாரமற்ற ஒரு குற்றச்சாற்றினை மேனாள் சட்ட அமைச்சர் (அ.தி.மு.க.) திரு. சண்முகம் குறிப்பிட்டுள்ளார். தலைமை வழக்குரைஞர் (அட்வகேட் ஜெனரல்) இதில் சிறப்பாக வாதாடியுள்ளார்!
தமிழ்நாடு அரசு எப்போதும் சட்டங்கள் - அவசர சட்டங்களை இயற்றுகையில் மிகுந்த கவனத்துடன் அதன் நோக்கங்களையும், வாசகங்களையும் வரைய றுத்து, ஓட்டைகளுக்கு இடமில்லாத வகையில் நிறைவேற்றினால்தான் நீதிமன்றங்களில் அவற்றை எதிர்த்துப் போடப்படும் வழக்குகளில் அச்சட்டம் மீண்டு, தலைதாழாமல் திரும்பி வரும் நிலை அதற்கு ஏற்படும்.
சட்ட நிபுணர்களின் அறிவுரையையும் பெற்று, சட்ட வரைவுகளை ஏற்படுத்துவது அவசர அவசியம்!
இதன்மீது உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வது எந்த பலனையும் தராது. எனவே, ஒரே தீர்வு புதிய சட்டமாக - ஓட்டையின்றி - இதனை தி.மு.க. அரசு தயாரித்து, நம் இளைஞர்களை, ஆன்லைன் ரம்மி போதையிலிருந்து காப்பாற்ற முடியும் - காப்பாற்றவும் வேண்டும்!
தமிழ்நாடு (தி.மு.க.) அரசு இதில் காலந்தாழ்த்தாமல் - உயர்நீதிமன்றத் தீர்ப்பினை வைத்து, நல்ல சட்ட நிபுணர்களின் அறிவுரையையும் பெற்று, சட்ட வரைவுகளை ஏற்படுத்துவது அவசர அவசியம்.
நிதி மற்றும் பல துறைகளில் மூத்தோர், அத்துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைக் குழுவை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்து சிறப்பாக ஆளுமை செய்கிறார் என்பது பலதரப்பாலும் வரவேற்கப்படுகின்றது!
தமிழ்நாடு அரசின் சட்டத்துறையால் இயற்றப்படும் சட்டங்களும் - நீதிமன்றங்களின் திராவகப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டாலும் நிற்கும் அளவுக்கு வலிமையானதாக அமையும் வண்ணம் இத்துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த - ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரை சட்டத்துறை ஆலோசகராக (Legal Advisor) ஆக நியமனம் செய்தால், அது நல்ல ஆளுமையை, இதுபோன்ற சில நிகழ்வுகள் - தீர்ப்புகளிலிருந்து கறைபடாமல் நடைபெற பெரிதும் உதவக் கூடும்!
தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், சட்ட அமைச்சரும் இதுபற்றி சரியான முடிவு எடுக்கவேண்டும்.
வெறும் வாயை மெல்லுபவர்களுக்குப் பொரி, அவுல்களைக் கொடுத்துவிடக் கூடாது. வருமுன்னர் காப்பது முக்கியம்.
சென்னை
5.8.2021

No comments:
Post a Comment