தமிழர் பெரும் படையும் இந்தி எதிர்ப்புப் போரும் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் காணொலி முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

தமிழர் பெரும் படையும் இந்தி எதிர்ப்புப் போரும் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் காணொலி முழக்கம்

சென்னை, ஆக.7  1.8.1938 அன்று திருச்சியில் கட்டாய இந்தியை எதிர்த்து தமிழர் பெரும்படை தொடங்கப்பட்ட நாளினை முன்னிட்டு

1.8.2021 அன்று இரவு 8 மணி தொடங்கி

10 மணி வரை நாள்தோறும் கொள்கை முழக்கம் எனும் நிகழ்ச்சி காணொலி வழியே மதிமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்டது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தமிழர் பெரும்படையும் இந்தி எதிர்ப்புப் போரும் எனும் தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையின், சுருக்கம்:

1938 மொழிப்போர் அறிவுலக ஆசான் தந்தைப் பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட பெரும் போர் ஆகும். ராஜகோபாலாச்சாரி கொண்டு வந்த கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட போர் பலதரப்பட்டவர்களையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை பெரியார் நடத்தினார். இந்தி வேண்டாம் என்று இறுதி எச்சரிக்கை கொடுத்த சென்னை மாநில தமிழர் மாநாடு 26.12.1937இல்  திருச்சியில் கூடியது. அதைத்தொடர்ந்து அந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தி சென்னை மாநில இந்தி எதிர்ப்பாளர் மாநாடு 27.2 1938அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது.

இந்தி புகுத்தப்பட்ட நாள் 21.4.1938 திருச்சியிலிருந்து எதிர்ப்பு பிரச்சாரப் படை குமாரசாமி பிள்ளையை தலைவராகவும், தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியை தளபதியாகவும், நகரதூதன் ஆசிரியர் மணவை திருமலைசாமியை அமைப்பாளராகவும் கொண்டு 42 நாட்கள்234 ஊர்களில் பரப்புரை செய்து 82 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி இந்திக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்தப் படை 11.9.38இல் தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கமிட்டது. சென்னையில் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்கியது முதலமைச்சர் வீட்டின் முன்பும் இந்து தியாலஜி க்கல் பள்ளியின் முன்பும் போர் நடைபெற்றது.பெண்கள்மாநாடுகூடிஅதிக அளவில் பெண்களும் இப்போரில் பங்கேற்பது என முடிவெடுத்தனர்.பெரியார்எனும்பட்டத்தையும்வழங்கினர். இந்தப் போரில் 73 பெண்கள் 32 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 269 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

அறிஞர் அண்ணா சிறை சென்றது இப்போரில் தான். தந்தை பெரியாருக்கு இரண்டாண்டு கடுங்காவல் 2000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை என விதிக்கப்பட்டு 167 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுவிக்கப்பட்டார். இந்தப் போரில் தான் மொழிக்காகமுதன் முதலாக  நடராசன், தாளமுத்து களப்பலி ஆயினர். படிப்பு வாசனையற்ற

அரிஜன் அதனால் செத்தார் என்று ஏகடியம் பேசினார் ராஜகோபாலாச்சாரியார்.

ஒவ்வொரு நாள் போராட்டத்தின் போதும் ஒவ்வொருவர் சர்வாதிகாரிகள் ஆக பெரியாரால் நியமனம் செய்யப்பட்டனர் முதல் நாள் சிடி.நாயகம், இரண்டாம் நாள் ஈழத்தடிகள், மூன்றாம் நாள் கே.எம். பாலசுப்பிரமணியம், நான்காம் நாள்

ஜி.என்.ராஜு, அய்ந்தாம் நாள் எஸ்.கே.சாமி, ஆறாம் நாள் எம்.எஸ்.மொய்தீன், ஏழாம் நாள் புவனகிரி நமச்சிவாயம், மாயவரம் சம்பந்தம், காஞ்சி பரவஸ்து ஆச்சாரியார், பெரியகுளம் ரங்கசாமி, கந்தம் ரோஸ் அம்மாள், மாரியம்மாள், புலவர் ராமநாதர் ஆகியோர் 8; 9; 10; 11; 12; 13 ஆம் நாள் சர்வாதிகாரிகள். கட்டாய இந்தி 21.2.1940 அன்று ஒழிந்தது. கட்டாய இந்தியை எதிர்த்து தந்தை பெரியார் தொடங்கிய தமிழர்கள் நடத்திய பெரும் போர் வெற்றி பெற்றது.

தமிழை பாதுகாக்க பெரியார் இவ்வளவு பாடுபட்டுள்ளார். இன்றைக்கு தமிழுக்கு பெரியார் என்ன செய்தார் என்று கேட்கும் ஏதிலிகள் இருக்கவே செய்கின்றனர். கட்டாய இந்தி நுழைந்து இருந்தால் தமிழின் நிலை தமிழர் நிலை என்னவாகியிருக்கும். அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். என்று தமது உரையில் துரை சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

     காணொலி காட்சியில் அமைப்புச் செயலாளர் வந்தியதேவன், கண்ணதாசன், ஆற்காடு உதயகுமார், சேலம் கோபால், ராஜ்பாலா, சசிகுமார், ஜானகி, ராஜா, ஸ்டீபன், சுரேஷ் ஸ்கை சிவா, செங்கல்பட்டு கோபிநாத், செங்கல்பட்டு பிரவீன், ராஜேஷ்குமார், பின்னலூர் மணிகண்டன், கே.டி.சேகர், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment