08.05.1948 - குடிஅரசிலிருந்து....
சென்ற வாரத் தொடர்ச்சி
யார் கவலைப்பட்டார்கள்?
இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக்கொண்டதுண்டா? எத்தனையோ ரிஷிகள், எத்தனையோ நாயன்மார்கள், எத்தனையோ குருமூர்த்திகள், எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இது. இவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்? தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும், ஆரியம் அதற்கு அடிபணியவில்லையே? மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ்திகர் என்று கூறி, மக்கள் அவர்களைப் பின்பற்றாதபடி செய்துவிட்டதே? ஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பவுத்தர்களையும், சமணர்களையும் கழுவிலேற்றி விட்டதே? வருணாசிரமத்தைப் பாதுகாக்கத்தானே இவ்வளவும் செய்யப்பட்டது. அதுவும் அந்த வருணாசிரம தர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால்தானே அவ்வளவும் செய்யப்பட்டது.
கீதையை எறிந்து கைகழுவி திருக்குறளைக் கையிலெடு!
பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்தகாரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயணமாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்படவில்லை? அவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள் ஏன் பாராயணமாக்கப்படவில்லை? இவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா? கிருஷ்ணனும், கீதையும் வருணாசிரம தர்மத்தை (ஜாதிப் பிரிவினையை) ஆதரிப்பதுதான், ஆரியத்தின் போற்றுதலுக்குக் காரணம் என்பதை நீ இன்றாயினும் உணருவாயா? உன் திருவள்ளுவரும் திருக்குறளும் ஆரியத்தால் போற்றப்படாமைக்குக் காரணம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற கூற்றுத்தான் என்பதை உணர்வாயா? இன்றாயினும் உணர்வு பெற்று கிருஷ்ணனையும், கீதையையும் தூக்கியெறிந்து விட்டு உண்மைத் திராவிடனான வள்ளுவனையும், அவன் குறளையும் அத்திட்டத்தில் வைப்பாயா?
ஒரு குலத்துக்கொரு நீதியை ஒழித்திட வரிந்து கட்டு!
இதை எல்லாம் கூறினால் என்னை வகுப்புத் துவேஷி என்கிறாயே! பூசணிக்காய் அளவு எழுத்தில் பிராமணாள் ஹோட்டல் என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பேதம் பாராட்டுவதில்லையென்று பெருமையடித்துக் கொள்ளும் தேசியத் தோழனே! உன் சுதந்திர ராஜ்யத்தில், நடைமுறையில் இருந்துவரும் இந்து லாவில், ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டிருக்கிறது? இந்துலா சட்ட புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறதே; இச்சட்டம் மனுதர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள இந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது; இச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதி தானாக முடிவு கட்டக் கூடாது; இச்சாஸ்திரங்களில் வல்லவர்களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக்கிறதே ஜாதி, பேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தால் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும், அதேபோல், ஒரு பார்ப்பனனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்கு பார்ப்பனன் சொத்தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப்பட்டிருக்கிறதே. இது உன் கண்களுக்கு ஏன் படாமற்போகிறது? இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?
முதலில் இவைகளைச் செய்!
பாடுபடும் நான் ஏன் சூத்திரன்? பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன்? என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வரவேண்டுமோ கோபம்? சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால், என்னை வகுப்புத் துவேஷி என்று கூற உனக்கு நாக்கு நீளுமா? ஏன் இந்தப் பித்தலாட்டம்? நாலு ஜாதி என்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங்களிலிருந்து எடுத்து விட்டாயா? அல்லது அவற்றை எரித்துவிட்டாயா? எங்களை வகுப்புத் துவேஷி என்று கூறுவதற்கு, ஹோட்டல்காரனை மனிதன் ஹோட்டல் என்று போட்டுக் கொள்ளும்படி சொல்! இந்துலாவில் ஜாதிப் பற்றி இருப்பனவற்றையெல்லாம் திருத்தியமை! சாஸ்திரங்களையெல்லாம் கொளுத்தி விடு! ஜாதி பிரிவினைப் பற்றிக் கூறும் சகலத்தையும் அழி! கோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையுண்டு என்று சட்டம் செய்! பிறகு நான் வகுப்புப்பற்றிப் பேசினால் வாயேன் சண்டைக்கு? அதுவரை பொறுத்துக் கொண்டிரு தம்பி! இன்றேல் உன் வண்டவாளமெல்லாம் அம்பலமாகி விடப் போகிறது.
சமபந்தியில் பார்ப்பான் என்றால் சந்தோஷப்படலாமா நீ?
பார்ப்பானெல்லாம் இப்போது சமபந்தி போஜனம்கூட செய்கிறார்களாம் ஜாதி பாராட்டாமல். எங்கள் வீட்டுச் சோறு ருசியாய் இருந்தால் எந்தப் பார்ப்பானும் தான் சாப்பிடுவான். உண்மையில் எத்தனை பிராமணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோ, சக்கிலியையோ தம்முடனிருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்? நீ சாப்பிடுவதைக்கூட நாங்கள் பார்க்கக் கூடாது என்கிறாயே! அதுதான் போகட்டும் என்றாலும், நான் வெட்டிய குளத்துத் தண்ணீரானாலும், அதையும் திரை போட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக்கிறாய்!

No comments:
Post a Comment