செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி அமைத்திட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி அமைத்திட வேண்டும்

சட்டமன்ற உறுப்பினர் .ஜோதி வலியுறுத்தல்

சென்னை, செப். 5- தமிழ்நாட்டில் தஞ்சையை அடுத்த நெல் அதிகம் விளையும் செய்யாறு தொகுதியில் வேளாண் கல்லூரி ஒன்று அமைத்து தர வேண்டும் என சட்டமன்றத்தில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் .ஜோதி உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2.9.2021 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறு, சிறு மற்றும் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .ஜோதி

பேசியதாவது :-

நம்முடைய முதல்வர் அவர்கள் துணை முதலமைச்சராக இருந்தபோது செய்யாறுக்கு புதிய

SIPCOT கொண்டு வந்தார். அதன் விளைவாக 50,000க்கும் மேலான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.

நமது முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஆளுநர் உரையில் 12,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில், புதிய தொழிற்சாலையைத் தொடங்க அனுமதி அளித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி!

செய்யாறு தொகுதியில்  ESI  மருத்துவமனை அமைத்துத் தருவதாக, முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார் எனவே, செய்யாறு பகுதியில்  ESI  மருத்துவமனை புதிதாக அமைத்துத்தர வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செய்யாறு தொகுதியில் பெண்களுக்கென தனியாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்துத்தர வேண்டும். செய்யாற்றில் புதிதாக பேருந்து நிலையம் அமைத்துத் தரவேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு நீர்வரத்து ஆதாரத்தைப் பெருக்க படையிலுப்பைக் கிராமத்தின் அருகே தடுப்பணை கட்டி நீரினை இராஜகால்வாய் மூலமாக தண்ணீரைக் கொண்டு வந்து ஏரியை நிரப்ப வேண்டும்.

தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக அதிக நெல் விளைச்சல் ஈட்டித்தரும் தொகுதியாக செய்யாறு விளங்குவதால் அங்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைத்துத் தருமாறு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பத்திரிகையாளர்களின் குடும்பங்களும் சேர்க்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பத்திரிகையாளர் யூனியன் வரவேற்பு

சென்னை, செப்.5 முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பத்திரிகையாளர்களின் குடும்பங்களும் சேர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன்  (MUJ) பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர், பொருளாளர் .மணிமாறன் ஆகியோர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எம்.யூ.ஜே விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பத்தினரும் சேர்க்கப் படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான வருமான உச்சவரம்பு பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு பொருந்தாது என்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பத்திரிகையாளர் யூனியன்  (MUJ)  தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற முன்வந்திருப்பதற்கு மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேநேரத்தில், இந்த அறிவிப்பில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே பயன்பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 95 விழுக்காடு பத்திரிகையாளர்கள் இந்தத் திட்டத்தால் எந்தப் பயனையும் அடைய முடியாது.

பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களில் ஆசிரியர், செய்தி ஆசிரியர், இணை ஆசிரியர், உதவி ஆசிரியர், சிறப்பு செய்தியாளர், தலைமைச் செய்தியாளர், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பத்திரிகை வடிவமைப்பாளர், செய்தி தயாரிப்பாளர் , பிழை திருத்துநர் இப்படி பல்வேறு பதவிகளில் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு எல்லாம் அரசு அங்கீகார அட்டை கொடுக்கப்படுவதில்லை. வெளியில் சென்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள், ஒளிப்பட கலைஞர்கள்  அரசு அங்கீகார அட்டைப் பெற்றுள்ளனர். ஒளிப்பதிவாளர்களில்கூட பெரும்பாலானோர் அரசு அங்கீகார அட்டை வைத்திருப்பதில்லை.

அரசு விழாக்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில், செய்தி சேகரிப்பதற்காக செல்பவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு அங்கீகார அட்டையை அடிப்படையாக வைத்து திட்டங்களை அறிவிப்பது 5 விழுக்காடு பத்திரிகையாளர்கள் மட்டுமே பயனடைய உதவும்.

எனவே, உழைக்கும் பத்திரிகையாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில்  முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னைப் பத்திரிகையாளர் யூனியன்  (MUJ)  கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment