‘நீட்' தேர்வு: விலை பேசும் வினாத்தாள் -ஆள்மாறாட்டம் - கேள்வித்தாள் திடீரென்று புதிய மாற்றம் போன்ற குளறுபடிகளின் குத்தகை பள்ளிகள் நடத்தப்பட முடியாத சூழலில், ‘நீட்' தேர்வு கொடுமையானதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

‘நீட்' தேர்வு: விலை பேசும் வினாத்தாள் -ஆள்மாறாட்டம் - கேள்வித்தாள் திடீரென்று புதிய மாற்றம் போன்ற குளறுபடிகளின் குத்தகை பள்ளிகள் நடத்தப்பட முடியாத சூழலில், ‘நீட்' தேர்வு கொடுமையானதே!

மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டும் சமூகநீதிக்கு விரோதநீட்' தேர்வு ஒழிக்கப்படுமா? ஒன்றிய அரசு கண் திறக்குமா?

நீட்' தேர்வு - விலை பேசும் வினாத்தாள் - ஆள் மாறாட்டம் - கேள்வித் தாள் திடீரென்று புதிய மாற்றம் போன்ற குளறுபடிகளின் குத்தகை; பள்ளிகள் நடத்தப்பட முடியாத சூழலில், ‘நீட்' தேர்வு கொடுமை யானதே! மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டும் சமூகநீதிக்கு விரோதநீட்' தேர்வு ஒழிக்கப்படுமா? ஒன்றிய அரசு கண் திறக்குமா? என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நீட்' தேர்வின் மோசடிகளும், குளறுபடிகளும், ஊழல் அம்பலங்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வெளிவந்துகொண்டே உள்ளன.

சட்ட விரோத, நியாய விரோத, மக்கள் விரோத இந்தநீட்' தேர்வின் தீய விளைவுகள் நாளும் பகிரங்கப் படுத்தப்பட்டே வருகின்றன.

உச்சநீதிமன்ற நீதிபதிகளே கூட கேள்வி கேட்கும் அளவுக்குநீட்' தேர்வின் உள்ளடக்கமான முரண்பாடு களும், பலவீனங்களும் ஆண்டுதோறும் அத்தேர்வு நடைபெற்ற பின் - எப்படி தமிழ்நாட்டில் உயிர்ப் பலிகள் - மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் பெருகி வருகின்றனவோ, மற்ற பகுதிகளிலும் அதேபோல, வெளிவந்து கொண்டே உள்ளன.

ஒன்றிய அரசு விடாப்பிடியாக

நீட்' தேர்வை நடத்தி முடித்தது!

கரோனா காலத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இறுதி பொதுத் தேர்வு, சி.பி.எஸ்.. என்ற ஒன்றிய கல்வி அமைப் பின்கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான இறுதி செகண்டரி தேர்வு முதலியன எல்லாம் இவ்வாண்டு கைவிடப்பட்டு - அறிவிக்கப்பட்ட நிலையில்கூட, இந்தநீட்' தேர்வை இவ்வாண்டு நடத்தவேண்டாமென்று பெற்றோர், கல்வி யாளர்கள், மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்ட வேண்டு கோளை நிராகரித்து, ஒன்றிய அரசு இதில் மட்டும் விடாப் பிடியாக நடத்தியே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நின்று எப்படியோ நடத்தி முடித்தது!

அத்தேர்வில் வட மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களில்நீட்' தேர்வின் கேள்வித் தாள்களை 35 லட்சம் ரூபாய் கொடுத்து  வாங்கி, பகிர்ந்துள்ள அவலமும், ஆள்மாறாட்டமும் செய்துநீட்' தேர்வு எழுதி - கண்டுபிடிக்கப்பட்டதிகில்' கதைகளும் ஏராளம் வெளியாகின்றன.

உச்சநீதிமன்றத்தில் எழுப்பிய கேள்வி நியாயமானதுதானே!

இப்போது அந்தந்த மாநிலத்தில்நீட்' தேர்வை எழுதியவர்கள் - உச்சநீதிமன்றத்தில், ‘நீட்' தேர்வை மறுபடியும் நடத்துங்கள், கேள்வித் தாள்அவுட்'டாகிய பிறகு நடந்த தேர்வு எப்படி சரியான தேர்வாக முடியும் என்று மாணவர்கள் - பெற்றோர் எழுப்பும் கேள்வி நியாயமானதுதானே!

அதுமட்டுமா?

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறும் இந்தநீட்' தேர்வு எந்த ஓர் ஆண்டிலாவது குளறுபடிகள் இல்லாமல் நடந்ததுண்டா?

ஒன்றிய சுகாதாரத் துறை அறிவித்தது மகா, மகா கொடுமையல்லவா?

அதுமட்டுமா?

இவ்வாண்டில் மற்றொரு பெரிய அநீதிநீட்' தேர்வுக் குள் - வழக்கமான பாடத் திட்டங்களை மாற்றி, திடீ ரென்று சில மாதங்களுக்குமுன், புதிய பாடத் திட்டப்படி தான் மாணவர்கள் தேர்வு எழுதிட வேண்டுமெனநீட்' தேர்வுக் குழு - ஒன்றிய சுகாதாரத் துறை அறிவித்தது மகா, மகா கொடுமையல்லவா?

புதிய பாடத் திட்டப்படி மாணவர்கள் தேர்வு எழுத போதிய அவகாசம் கொடுத்து, மாணவர்களுக்கு அதில் தெளிவும், பரிச்சயமும் ஏற்படும் வாய்ப்பைத் தந்து, தேர்வினை நடத்துவதுதானே முறை?

இதற்குமுன்பு கல்வித் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்ட போதுகூட, இந்த நடைமுறைதானே பின்பற்றப்பட்டது? இப்போது இந்தநீட்' தேர்வு பாடத் திட்டத்தில் மட்டும் ஏன் இந்த அவசர கெடுபிடி?

இதனை  உச்சநீதிமன்றத்தில், மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் ஒய்.வி.சந்திரசூட் அவர்களேகூட மனம் பொறுக்காமல், ஒன்றிய அரசின் வழக்குரைஞர்களிடம்  ‘‘ஏன் இப்படிநீட்' தேர்வு எழுதும் மாணவர்களை பந்துபோலக் கருதி, இப்படி பந்தாடுகிறீர்களே'' என்று கேட்டுள்ளாரே! அதன் பிறகாவது தமது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளும் தெளிவு அத்துறைக்கு ஏற்படவேண்டாமா?

கரோனா காலத்தில் மூர்த்தண்யமாக இப்படித் தேர்வு நடத்தியதே கொடுமை! அதைவிட இரட்டைக் கொடுமை திடீரென்று திணிக்கப்பட்ட ஒரு புதிய பாடத் திட்டத்தை வைத்து சில மாத குறுகிய அவகாசத்தில்நீட்' தேர்வு எழுத வற்புறுத்தியதும் மிகப்பெரிய சமூக அநீதி அல்லவா!

உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் வந்தால், உடனே அதை உச்சநீதிமன்றத்திற்கே மாற்றுங்கள் என்று கூறுவதுகூட எவ்வகையில் நியாயமாகும்? ஏற்கெனவே தேக்கமடைந்துள்ள வழக்குகள் பல லட்சக்கணக்கில் உள்ள நிலையில், இது மேலும் சுமையானதாகும்.

இன்னும் இந்தக் கொடுமையை எதிர்த்து நாளும் புரிதல் பரவலாக ஏற்பட்டு வருகிறது.

இந்து' ஆங்கில நாளேட்டில் விளக்கக் கட்டுரை

மேற்கு வங்கம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களும் இதனை எதிர்க்கத் தொடங்கிவிட்டன. இன்று (29.9.2021) ‘இந்து' ஆங்கில ஏட்டில், (பக்கம் 10 இல்) அய்தராபாத் நல்சாரில் உள்ள பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஃபைசன் முஸ்தபா அவர்கள் - திறமையை வளர்க்கும், அடிப்படையை வளர்க்கும் என்றநீட்'பற்றிய கூற்று முற்றிலும் பொய்யாக்கப்பட்டு, தோல்வியே ஏற்பட் டுள்ளது என்று விரிவாக விளக்கக் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.

இனியாவது மோடி அரசு - ஒன்றிய அரசு கண் திறக்குமா?

மக்களைப் போராட்டக் களத்திற்கு வரவழைக்குமா?

கி.வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை                                    

29.9.2021           

No comments:

Post a Comment