புரட்சிகர நாத்திக இயக்கத்தின் தலைவராக - பகுத்தறிவு இயக்கத்தின்
முதல் பெண் தலைவராக இருந்தவர் அன்னை மணியம்மையார்!
இளந்திரையன் - உஷா இல்லத்திறப்பு விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி.,
சென்னை,செப்.4 குடும்பப் பெண்ணாகத்தான் ஒரு பெண்ணால் இருக்க முடியும் என்கிற இந்த சமூகக் கட்டமைப்பில், ஒரு நாத்திக இயக்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்று, ஒரு புரட்சிகரமான இயக்கத்தை வழி நடத்த முடியும் என்பதற்கு அடையாளமாக, பகுத்தறிவு இயக்கத்தின் முதல் பெண் தலைவராக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவர் அன்னை மணியம்மையார் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
கடந்த 16.8.2021 அன்று விருத்தாசலம் பெரியார் நகரில் திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் குடும்பத்தினரால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு சீ.தமயந்தி இல்ல அறிமுக விழா, அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் வெண்கலச் சிலைகள் திறப்பு விழாவில் காணொலிமூலம் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் காணொலிமூலமாக மணியம் மையார் சிலையைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். அவரது வாழ்த்துரை வருமாறு:
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு - தமயந்தி இல்லத் திறப்பு விழா
திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செய லாளர் அன்புச்சகோதரர் இளந்திரையன் மற்றும் அவரது இணையர் உஷா ஆகியோரின் அரிய முயற்சியால் கட்டி எழுப்பப்பட்டு இருக்கிற அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு - தமயந்தி இல்ல நுழைவு நிகழ்வை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
இந்நிகழ்வில் பங்கேற்று தமிழர் தலைவர் அவர்களின் சிலையினை முதல் முறையாக தமிழ்நாட்டில் திறந்து வைக்க இருக்கின்ற திராவிட இயக்கப் போர்வாள், நாடாளுமன்ற உறுப்பினர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சிப்புயல் வைகோ அவர்களே,
இந்நிகழ்வில் பங்கேற்று நம்மிடையே சிறப்புரையாற்ற விருக்கிற பகுத்தறிவுப் பகலவன் அவர்களின் உருவச் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றவிருக்கிற தமிழர் தலைவர் அவர்களே,
துணைத் தலைவர் அண்ணன் கலி.பூங்குன்றன் அவர்களே,
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் மானமிகு முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, மானமிகு அண்ணன் வீ.அன்புராஜ் அவர்களே, மானமிகு இரா.ஜெயக்குமார் அவர்களே,
இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி சிறப் பித்திருக்கிற அண்ணன் பாவலர் அறிவுமதி அவர்களே, மானமிகு ஆ.வந்தியத்தேவன் அவர்களே, மற்றும் பெரியாரிய உணர்வாளர்களே, தமிழ்ச் சொந்தங்களே,
இந்நிகழ்வில் பங்கேற்று இணையத்தின் மூலமாக இந்நிகழ்வை சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற பகுத்தறி வாளர்களே, பெரியார் பெருந்தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முதன்முதலாக தமிழர் தலைவருடைய உருவச் சிலை!
விருத்தாசலத்தில், திருமுதுகுன்றம் என்று அழைக்கப் படுகின்ற விருத்தாசலத்தில் ஓர் இல்லத்தை எழுப்பி, அந்த இல்லத்தின் முகப்பில், திராவிடர் கழகத்தின் நிறுவனரும், பகுத்தறிவுப் பகலவனுமான அய்யா தந்தை பெரியாரின் உருவச் சிலையையும், அன்னை மணியம் மையாரின் உருவச் சிலையையும், முதன்முதலாக தமிழர் தலைவருடைய உருவச் சிலையையும் திறந்து வைக்கக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற அன்புச்சகோதரர் இளந்தி ரையன் அவர்களையும், அவருடைய இணையர் உஷா அவர்களையும் நான் முதலில் நெஞ்சாரப் பாராட்டு கிறேன், வாழ்த்துகிறேன்.
இன்னொரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவேண்டும். சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் வருகை தந்து காத்திருக்கிறார்கள். ஆகவே, இந்த இணைப்பில் நெடுநேரம் என்னால் இருக்க இயலாத நிலை - அதனால் நான் வருந்துகிறேன்.
என் தாய் மண் என்கிற உணர்வோடு இந்த நிகழ்வில் பங்கேற்பதில் எனக்கு மகிழ்ச்சி
நான் அரியலூர் மாவட்டத்தில் பிறந்தாலும்கூட, கடலூர் மாவட்டத்தில்தான் படித்தேன். அதிலும் குறிப்பாக புகுமுக வகுப்பு என்கிற பி.யூ.சி. வகுப்பினை விருத்தாசலம் அருள்மிகு கொளஞ்சியப்பன் கலைக் கல்லூரியில் பயின்றவன். ஓராண்டு காலம் நான் இந்த திருமுதுகுன்றம் என்னும் நகரத்தில் தங்கி இருந்து படிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், அந்த மண் என் தாய் மண் என்கிற உணர்வோடு இந்த நிகழ்வில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லாவற்றையும்விட, அன்னை மணியம்மையார் அவர்களின் உருவச் சிலையைத் திறந்து வைக்கக்கூடிய ஒரு பெரும்பேறு எனக்கு வழங்கப்பட்டு இருப்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அதற்காக தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுத்தறிவு இயக்கத்தின் முதல் பெண் தலைவர் மணியம்மையார்
குடும்பப் பெண்ணாகத்தான் ஒரு பெண்ணால் இருக்க முடியும் என்கிற இந்த சமூகக் கட்டமைப்பில், ஒரு நாத்திக இயக்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்று, ஒரு புரட்சிகரமான இயக்கத்தை வழி நடத்த முடியும் என்பதற்கு அடையாளமாக, பகுத்தறிவு இயக்கத்தின் முதல் பெண் தலைவராக இருந்தவர் என்கிற பெருமைக் குரியவராக அன்னை மணியம்மையார் அவர்கள் விளங்குகிறார்.
அவரது உருவச் சிலையைத் திறந்து வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக நான் மீண்டும் ஒருமுறை இளந்திரையன் உள்ளிட்ட அவரு டைய குடும்பத்தினருக்கும், திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் யாவருக்கும் என்னுடைய மனமுவந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
என்னுடைய பிறந்த நாள் குறித்தும் இங்கே அறி முகப்படுத்திய தோழர் சுட்டிக்காட்டினார். நாளைக்கு என்னுடைய பிறந்த நாள் - அதையொட்டித்தான் இப் பொழுது சில நிகழ்ச்சிகள் அரங்கில் ஒருங்கிணைக் கப்பட்டு இருக்கின்றன. இன்று மாலை பெரியார் திடலிலும்கூட அது நடைபெறவிருக்கிறது. தமிழர் தலைவர் அவர்களும் அதிலே பங்கேற்கவிருக்கிறார்.
சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை
தமிழர் எழுச்சி நாள் என்னும் பெயரில், விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்வில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை - சமூகநீதிக்கான சமூகங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் - இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடிய வகை யில், ஒரு கருத்தியல் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 17 வரையில், ஒரு மாத காலம் சமூகநீதி சமூகங்களுக்கான ஒற்றுமைத் திங்கள் என்னும் அறிவிப்போடு நாங்கள் இதனைத் தொடங்குகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மய்ய மாக வைத்து விழாவை நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு கரோனா தொற்று என்பதால், விழா நடை பெறவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு பனை மரம் காப்போம் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு தமிழர் எழுச்சி நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 17 ஆம் தேதிவரை நடத்தினோம். லட்சக் கணக்கான பனை விதைகளை நாடு முழுவதும் ஊன்றினோம்.
ஆக, இந்த ஆண்டு கருப்பொருள் என்னவென்றால், ஷெட்யூல்டு காஸ்ட், ஷெட்யூல்ட் டிரைப்ஸ், ஓ.பி.சி. அண்ட் மைனாரிட்டிஸ் இந்த சமூகங்கள் ஒருங்கிணைய வேண்டிய தேவை இருக்கிறது.
சமூகநீதிச் சமூகங்களைப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கிறார்கள்
சங் பரிவார் கும்பல், சனாதன கும்பல் இந்த சமூகநீதிச் சமூகங்களைப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக் கிறார்கள். ஓபிசி சமூகத்தினர்கூட ஒற்றுமையாக இருந்து விடக் கூடாது; அவர்கள் ஒருங்கிணைந்து ஒரு எண்ணிக்கை பலம் கொண்டவர்களாக வலிமைப் பெற்றுவிடக் கூடாது என்று ஜாதிப் பெருமைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி வரலாறு உண்டு; பாரம்பரியம் உண்டு; எனவே, யாரும், யாருக்கும் சமமில்லை. நீங்கள் அவரைவிட மேலானவர்கள், நீங்கள் இன்னும் மேலானவர்கள் என்று ஜாதிப் பெருமிதத்தைத் தூண்டிவிட்டு, ஊக்கப்படுத்தி, சமூகப் பிரிவினையை, சமூகப் பிளவுகளை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்களுக்கான பாதுகாப்பு.
ஆகவே, ஓபிசி ஒற்றுமைகளையும் உடைத்தெறி வது; ஷெட்யூல்டு காஸ்ட் சமூகத்தினரையும் அகில இந்திய அளவில் தலித்துகளாக ஒருங்கிணைந்துவிடக் கூடாது; அல்லது வேறு எந்தப் பெயரிலும் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது.
அகில இந்திய அளவில் ஷெட்யூல்டு காஸ்ட் அடையாளத்தோடு ஒரு குடையின்கீழ் அணிதிரண்டால், 30 கோடிக்கும் மேலானவர்கள் இந்திய அளவில். அப்படியானால் ஓபிசி எந்த அளவிற்கு எண்ணிக்கை என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கும்பலின் அடிப்படை நோக்கம்
ஆகவே, ஓபிசி சமூகத்தைச் சார்ந்தவர்களும்கூட, ஓபிசி என்ற பெயரில் ஒருங்கிணைந்துவிடக் கூடாது. அதேபோல, மைனாரிட்டிஸ் சிறுபான்மையினர், இஸ் லாமியர்களும், கிறித்துவர்களும் ஒருங்கிணைந்துவிடக் கூடாது. இதுதான் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கும்பலின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது; செயல் திட்டமாக இருக்கிறது.
சமூகநீதிக்கு சவக்குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
ஓபிசி அமைப்புகளைச் சார்ந்தவர்களையே பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்து, அவர்களைக் கொண்டே சமூகநீதிக்கு சவக்குழி தோண்டிக் கொண்டி ருக்கிறார்கள்.
பொதுத்துறைகளையெல்லாம், அரசு துறைகளை யெல்லாம் தனியார் மயப்படுத்துவதின்மூலம் இட ஒதுக்கீடு என்கின்ற கருத்தியலையே அடியோடு அடித்து நொறுக்கிவிடவேண்டும். அதையும் ஓபிசி சமூகங்களைச் சார்ந்த மோடி, அமித்ஷாவை வைத்தே சாதித்துவிட வேண்டும் என்கிற அடிப்படையில், அவர்களை ஊக்கப்படுத்தி, பிரதமராக்கி, உள்துறை அமைச்சராக்கி, இன்னும் அதிகார வலிமையுள்ள பதவிகளையெல்லாம் கொடுத்து, ஓபிசி சமூகத்தினரை வைத்தே, ஓபிசி சமூகத்திற்கு எதிராக வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்ற சங் பரிவார் கும்பலின் சதித்திட்டங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, இந்தக் காலகட்டத்தில் சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை என்பது இன்றியமையாத ஒரு வரலாற்றுத் தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் கைகோர்த்து நிற்போம்.
இந்த ஒற்றுமையைக் கட்டி எழுப்பக் கூடிய ஆற் றலும், அதற்குரிய தலைமையும், பண்பும் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு இருக்கிறது.
தந்தை பெரியார் கண்ட கனவு நனவாகி இருக்கிறது!
தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்கக் கூடிய அளவில், பெரியாருக்குப் பின்னால் அண்ணா, அண்ணாவிற்குப் பின்னால் கலைஞர் என்று தேர்தல் அரசியல் களத்தில், இன்றைக்குக் கலைஞருக்குப் பின்னால், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறார்.
அவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததைப் பயன் படுத்தி, தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்கக் கூடிய வகையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக லாம் என்பதை சட்டப்பூர்வமாக அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதுதான் சமூகநீதி இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி - மகத்தான வெற்றி - ஒரு மகத்தான புரட்சி - சமூகப் புரட்சி - அமைதிப் புரட்சி - அறவழிப் புரட்சி - சட்ட வழிப் புரட்சி.
ஆகவே, இன்று இவையெல்லாம் நிறைவேறுகிறது என்றால், நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும், ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக ஒரு மனிதன் எங்கே வேண்டுமானாலும் நுழையலாம், ஆனால், கோவிலின் கருவறைக்குள் நுழைய முடியாது.
நிலவில்கூட அடியெடுத்து வைக்கலாம்; ஆனால், கோவிலின் கருவறைக்குள் ஒரு சூத்திரன் நுழைந்துவிட முடியாது.
இப்படிப்பட்ட ஓர் அவலம் - தலைமுறை தலை முறையாகத் தொடர்ந்து வந்த நிலையில், அந்தக் கருவறையில் எங்களால் நுழைய முடியும் - அதை ஒரு நாள் சாதித்துக் காட்டுவோம் என்று தந்தை பெரியார் கனவு கண்டார். அந்தக் கனவு இப்பொழுது நனவாகி இருக்கிறது.
சமூகநீதி இயக்கங்களுக்குக் கிடைத்தமாபெரும் வெற்றி
அண்ணன் தளபதி அவர்களின் தலைமையிலான இந்த ஆட்சி அதனை நிறைவேற்றி இருக்கிறது. இது சமூகநீதி இயக்கங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
பெரியாருக்குப் பிறகு அன்னை மணியம்மையார், அவருக்குப் பிறகு நம்முடைய தமிழர் தலைவர். திராவிடர் கழகம் என்கிற ஒரு மாபெரும் இயக்கத்தை, சமூகநீதி இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி பாதுகாத்து வருகிற இந்தச் சூழலில், அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகலாம் என்பதை நடைமுறைப்படுத்தி, உடனடியாக அந்த வெற்றியை, அந்த மகிழ்ச்சியை, அந்த சாதனையைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், பெரியார் திடலுக்குச் சென்று தமிழர் தலைவரைச் சந்தித்து, இந்த சாதனைக்குரிய மகிழ்ச்சியை தளபதி அவர்கள், தமிழர் தலைவரோடு பகிர்ந்து கொண்டார் என்பதை அறிந்து, தமிழ்ச் சமூகமே இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கிறது. இது தொடரக்கூடாது என்று சனாதன சக்திகள் நினைக்கிறார்கள்.
அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகாலமாக தொடர்ந்து குறி வைத்து, கடுமையான அவதூறுகளையெல்லாம் பரப்பி, அந்த இயக்கத்தைச் சிதைத்துவிட வேண்டும் என்று பாடாய் பட்டார்கள், படாதபாடு பட்டார்கள், பகீரத முயற்சிகளை மேற் கொண்டார்கள். ஆனால், அவற்றையெல்லாம் தகர்த்து, தவிடுபொடியாக்கி திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற சமூகநீதி இயக்கம் - திராவிடர் கழகத்தின் பிள்ளை ஆட்சி அதிகாரப் பொறுப்பில் வந்திருக்கிறது என்று சொன்னால், அது தி.மு.க.விற்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட, ஒட்டுமொத்த சமூகநீதிச் சக்தி களுக்குக் கிடைத்த வெற்றி - விடுதலைச் சிறுத்தை களுக்குக் கிடைத்த வெற்றி என்று நான் பெருமிதத்தோடு சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு இணைந்து செயல்படுவோம்!
அப்படிப்பட்ட இந்த சமூகநீதியைக் காப்பாற்றுவதற்கு, சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்கிறது - ஒரு சவாலாக இருக்கிறது. இந்த சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமையை வென்றெ டுப்பதற்கு நாம் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு இணைந்து செயல்படுவோம் என்று இந்த நல்ல நாளில் உறுதிமொழியாக எடுக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைவருக்கும், அனைத்துத் தரப்பினருக்கும் அறைகூவல் விடுக்கிறது.
திருமுதுகுன்றத்தில் - விருத்தாசலத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் உருவச் சிலையை நிறுவி, அதனைத் திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பை வழங்கிய அன்புச் சகோதரர் இளந்திரையன் அவர்களுக்கும், உஷா அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன் றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்து, உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.

No comments:
Post a Comment