அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை, செப்.5 கலைஞர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளதாகவும், இப்போட்டிக்கு பதிவு கட்டண மாக பெறப்பட்ட ரூ.56 லட்சம் தமிழ்நாடு முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் கூறியதாவது: முத்தமிழறிஞர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்’ போட்டி இணையவழியில் கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கியது.
இதை கலைஞர் நினைவிடத்தில் இருந்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்போட்டி கடந்த 31ஆம் தேதி வரை நடை பெற்றது.
இதில், இந்தியாவில் இருந்தும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 36 வெளிநாடுகளில் இருந்தும் மொத்தம் 19 ஆயிரத்து 596 பேர் பங்கேற்றனர்.
கரோனா நிவாரண நிதி
அவரவருக்குப் பிடித்த இடத்தில், அவரவரின் ஓடும் திறனுக்கு ஏற்ற தூரத்தை தேர்வு செய்து ஓட வேண்டும். பின்னர் அதை செயலி மூலம் பதிவு செய்து இணைய வழியாக போட்டியை நடத்தும் குழுவினருக்கு அனுப்பி வைப்பதே இந்த மெய்நிகர் மாரத்தான் போட்டியின் வழிமுறை ஆகும்.
இந்த முறையைப் பின்பற்றி மாரத்தானில் பங்கேற்று ஓடியவர்கள் “கலைஞர் நினைவு மாரத்தான்” இணையதளத்துக்கு அனுப்பி வைத்தனர். அவை பரிசீலிக்கப்பட்டு, போட்டியில் குறிப்பிட்ட அளவுகளில் முழுமையாக ஓடி முடித்தவர்களுக்கு இணையதளத்தின் வாயிலாக சான்றிதழ்கள், ‘முத்தமிழறிஞர் கலைஞரின்’ உருவம் பதித்த பதக்கங்கள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்பதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.300 பெறப்பட்டது. இதில், சேவை வரி நீங்கலாக ரூ.56 லட்சத்து 2 ஆயிரத்து 693 கிடைத்தது. இதை தமிழ்நாடு முதலமைச்சரின் கரோனா நோய்த்தடுப்பு நிவாரண நிதியாக வழங்க இருக்கிறோம்.
புதிய உலக சாதனை
இந்த கரோனா பேரிடர் காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இணையவழியாக நடத்தப்பட்ட கலைஞர் மெய்நிகர் மாரத்தான் போட்டியில் அதிக அளவிலான பங்கேற்பாளர்கள் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இந்தச் சாதனை, முத்தமிழறிஞர் கலைஞர் மீது உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் வைத்துள்ள பெருமதிப்பை பறைசாற்றியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment