உ.பி. நிகழ்வு : ஒன்றிய அரசுக்கு உலை வைக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

உ.பி. நிகழ்வு : ஒன்றிய அரசுக்கு உலை வைக்கும்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரியில் நடைபெற்ற கொடூரம் ஒன்றிய அரசுக்கு வெறும் தலைவலி மட்டுமல்ல - .பி. மாநில அரசுக்கு மட்டுமல்ல - ஒன்றிய அரசுக்கே உலை வைக்கப் போகிறது.

அதிகாரப் போதையில்  வீண் வம்பை விலைக்கு வாங்கும் வேலையில் - இறங்குவது என்று ஆரம்பித்தால் அதற்கான விலையைக் கொடுத்துத்தானே தீர வேண்டும்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என்ற நிலை ஏற்படும் நிலையில், அந்தவழியாக சென்றே தீருவோம் என்று அடம் பிடிப்பது எந்த வகையில் சரியானது?

அதுவும் ஓராண்டுக் காலமாக - வரலாறு காணாத வகையில் அறப்போர் நடத்தும் விவசாயிகள் திரண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கடந்த ஓராண்டில் மட்டும் 600 பேர்களுக்கும் மேல் உயிரிழந்த சூழலில் இதனை ஆளும் தரப்புப் புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் நடந்து கொள்ளலாமா?

உண்மைக்கு மாறாக - விவசாயிகள் வாகனங்கள் மீது தாக்கினார்கள் - அதன்பின் விளைவுதான் வன்முறை என்று எல்லாம் சோடனை செய்வது எந்த வகையில் சரி? இது ஆரோக்கிய நிலைதானா?

ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இடத்தில் - யாரை எதிர்த்துக் கருப்புக் கொடி என்று அறிவிக்கப்பட்டதோ அவர்கள் அந்த வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டது ஏன்? சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாதா? ஒரு சாதாரண காவல்துறை சப்-இன்ஸ்பெக்டருக்கும் கூடத் தெரிந்த விஷயமாயிற்றே!

பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற பிரியங்காவையும், ராகுல் காந்தியையும் அனுமதிக்க மறுக்கிறது உத்தரப்பிரதேச அரசு. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கில் போராட்ட உணர்வோடு திரண்டு நிற்கும் ஒரு சூழலில் சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்கள் செல்ல அனுமதித்தது - சட்ட ஒழுங்குப் பார்வையிலும் சரி - பொதுப் புத்திப் பார்வையிலும் சரியானதுதானா!

ஏதோ ஒரு பிரச்சினை வெடிக்கட்டும் - அதனை மய்யப் பொருளாக்கி, விவசாயிகள் பிரச்சினையைத் திசை திருப்பி, வன்முறைப் போராட்டம் என்று முத்திரை குத்தி - அதற்கொரு முடிவை ஏற்படுத்தலாம் என்று நினைப்பது எல்லாம் மலிவான அரசியல் என்பது ஒருபுறம் இருந்தாலும், இத்தகைய முடிவு எதிர் விளைவை ஏற்படுத்தும் என்று யோசிக்க முடியாமல் போனது ஆளும் தரப்பின் அறியாமையா? அகந்தையா? என்பது முக்கிய கேள்வியாகும்.

ஒரு தலை நகரத்தில் ஓராண்டாக, இரவு பகல் பாராமல், மாறி மாறி வரும் தட்ப வெப்ப நிலையையும் எதிர் கொண்டு  குடும்பம் குடும்பமாக விவசாயிகள் அறப் போராட்டம் நடத்தும் நிலையில், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டும் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பிரதமர், போராட்டக்காரர்களை அழைத்துப் பேசும் மனநிலை இல்லாதவர் என்றால் இதனை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது!

மதவாதம் மனத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு - மக்கள் நலம் கிஞ்சிற்றும் அற்றுப்போனது அசாதாரணமானது - வரலாறு எங்கும்  பாசிச நடவடிக்கை என்றே இது பேசப்படும்.

இது ஏதோ இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் பிரச்சினை என்று அலட்சியப்படுத்தலாம் - ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளை மட்டுமல்ல மற்ற தொழிலாளர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலே சினம் மூண்டு - ஒன்றிய அரசுக்கு உலை வைக்கும் எரிமலையாக வெடிக்கப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அதிகார பீடங்களையும் அசைத்து, வீழ்த்தும் என்பது தான் உலக வரலாறு கற்பிக்கும் பாடமாகும்.

அதிகார போதை கண்களை மறைக்கலாம், ஆனால் நாளை நடக்கப் போவது இதுதான்!

No comments:

Post a Comment