யாரையும் புண்படுத்தவேண்டும் - யாரோடும் வம்புக்குப் போகவேண்டும் என்பதா நம்முடைய நோக்கம் - அல்ல!
இனப் போராட்ட ரீதியான கருத்தே அதன் அடிப்படை!
இராவண காவிய நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, அக்.16 இராமாயணத்தை ஏன் எதிர்த்தார் தந்தை பெரியார்? - யாரையும் புண்படுத்தவேண்டும் - யாரோடும் வம்புக்குப் போகவேண்டும் - சண்டை பிடிக்கவேண்டும் - இராம பக்தர்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பதா நம்முடைய நோக்கம்? அல்ல! இராமாயணத்தை எதிர்ப்பது ஏன்? என்று ‘‘இராமாயணப் பாத்திரங்கள்’’ நூலில் ஒரு முன்னுரையை தந்தை பெரியார் எழுதியிருப்பதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
கடந்த 11.10.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் “புதுமை இலக்கியத் தென்றல்” சார்பில் நடைபெற்ற “வெல்லும் தூய தமிழ்” (மாத இதழ்) ஆசிரியரும், 43 நூல்களை யாத்தவரும், புதுச்சேரி மாநில அரசால் ‘தமிழ் மாமணி’ விருது பெற்றவரும், தனித் தமிழ் ஆர்வலரும், பகுத்தறிவாளருமான முனைவர் மானமிகு க. தமிழ மல்லன் அவர்களின் “இராவண காவிய ஆய்வுரை” நூலை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நாம் வம்புக்குப் போகவில்லை என்பதுதான் வரலாறு
1971 இல் சேலம் மாநாடு நடைபெற்றதல்லவா - ராமனுக்கு சிறப்பு(!) நடந்த மாநாடு - அப்படிப்பட்ட மாநாட்டில் அதுபோன்ற சம்பவத்தை அவர்கள் தான் தேடி வரவழைத்தவர்களே தவிர, நாமாக செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. எனவே, நாம் வம்புக்குப் போகவில்லை என்பது தான் வரலாறு.
மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்ற பொழுது, ஊர்வலத்தினர்மீது செருப்பைத் தூக்கிப் போட்டார்கள். அய்யாமீது விழ வேண்டிய செருப்பு, பின்னால் வந்த கருப்புச் சட்டைத் தோழர் கள்மீது விழுந்தது. உடனே அந்த செருப்பை அவர்கள் எடுத்து, ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட ராமன் படத்தை செருப்பால் அடித்தார்கள் - இதுதான் நடந்த உண்மை.
அப்படிப்பட்ட ஊர்வலத்தில் நடந்தே வந்தவர் இராவண காவிய ஆசிரியர் புலவர் குழந்தை அவர்கள்.
அதுமட்டுமல்ல, புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவை பெரிய அளவிற்கு நாம் நடத்தினோம், அவருடைய இரண்டு மகள்களை அழைத்து.
இராவண காவியத்தினுடைய சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
இராவண காவியத்தினுடய பெருமைகளை எடுத்துச் சொல்லுகின்ற காலகட்டத்தில், அவருடைய உணர்வுகள் என்பவை மிக ஆழமானது, மிகத் தீவிரமானது. கடைசிவரையில் அந்த உணர்வோடுதான் இருந்தார்.
கம்பனுக்கு நிகராக ஒருவரும் இருக்க முடியாது என்று சொன்னால், கம்பன் என்ன பெரிய கொம்பனா? என்று கேட்டு, அதற்கு நிகராக எங்களால், திராவிட இயக்கத்தவர்களாலே எழுத முடியும் ஓர் இலக்கியத்தை என்று, காட்டுவதற்காகவே இவ்வளவு பெரிய நூலை எழுதினார்.
இலக்கியம் என்று சொல்லும்பொழுது எல்லா வகையிலும், அவரைப் போன்றவர்கள், தமிழறிஞர்கள். நாங்கள் எல்லாம் அதிகமாகத் தமிழ்ப் படிக்காதவர்கள் - பெரியாரைப் படித்தவர்கள்.
அப்படிப்பட்ட அளவிற்கு வாய்ப்பைப் பெற்று, சிறப்பான அளவிற்கு இராவண காவியப் பெருமையை ஏன் அவர்கள் எடுத்தார்கள்? ஏன் இன்றைக்கும் அது பெரிய பிரச்சினையாக இருக்கிறது?
இராம பக்தர்களை சங்கடப்படுத்தவேண்டும் என்பதா நம்முடைய நோக்கம்?
இராமாயணத்தை ஏன் எதிர்த்தார் தந்தை பெரியார்? - யாரையும் புண்படுத்தவேண்டும் - யாரோடும் வம்புக்குப் போகவேண்டும் - சண்டை பிடிக்கவேண்டும் - இராம பக்தர்களை சங்கடப்படுத்தவேண்டும் என்பதா நம்முடைய நோக்கம்? அல்ல!
அய்யா அவர்கள் இராமாயணத்தை எதிர்ப்பது ஏன்? என்று ‘‘இராமாயணப் பாத்திரங்கள்'' நூலில் ஒரு முன்னு ரையை எழுதியிருப்பார். மிக எளிமையான காரணங்கள் அவை.
இன்றைக்கு இராமனை வைத்து வடநாட்டில் அரசி யலைப் பிடித்துவிட்டார்கள். நாளைக்கு உத்தரப்பிர தேசத்தில், இவ்வளவு பெரிய எதிர்ப்புக்கிடையில், அதையே மூலதனமாக வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று சொல்லி, சமூகநீதியையெல்லாம் பலிகடாவாக்கி - ஒடுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் மயக்க மருந்து கொடுப்பதுபோல - பக்தி போதையைப் பயன்படுத்தி, இன்றைக்குப் பெரிய அளவிற்கு வசூல் வேட்டை நடத்தினார்கள் - அதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கின்றது என்றெல்லாம் சொல்கிறார்கள். அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.
ஏன் விடாமல் இராமாயணத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள்?
ஏன் பாரதக் கலாச்சாரம், பாரதம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்?
தந்தை பெரியார் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதைப்போல சொல்வார்!
தந்தை பெரியார் அவர்கள், சிறு குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதுபோல சொல்கிறார்,
‘‘திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து, அவர்களைத் தன்மானமும், பகுத்தறிவும் அற்றவர்களாக ஆக்கி, மனிதத் தன்மையை இழக்கச் செய்யக்கூடியதாகச் செய்த ஆரியப் பிரச்சாரக் கதைகளில் முதன்மையா னவை இராமாயணமும், மகாபாரதமும் ஆகும்.
இராமாயணக் கதை தமிழனை இழிவுபடுத்துவதைத் தவிர, அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் இராமாயணத்தையோ, இராமனையோ வைத்திருப்ப தானது, மனித சுயமரியாதைக்கும், இன சுயமரியாதைக் கும், தமிழ்நாடு சுயமரியாதைக்கும் இழிவும் ஆனதாகும்‘’ என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார்.
இந்த அடிப்படையில்தான் தந்தை பெரியார் எதிர்ப்பை நோக்கவேண்டும்.
அண்ணா அவர்கள் சொல்கிறார்,
‘‘தமிழ்நாடு, தமிழ், தமிழர் தன்மை - ஆரியர் வருகை - அவரை தமிழர் ஆதரித்தமை - ஆரியரின் உட்கருத்து - அவர்தம் உளவு முறை - கெடு நினைப்பு - தீய செயல் ஆகியவற்றினை விரித்துரைத்திருக்கிறார் புலவர் குழந்தை'' என்று!
இராவண காவிய சொற்பொழிவுகள்!
புலவர் குழந்தையின் இராவண காவியத்தில், அவ்வளவு பெரிய கவிதைகளையும், பாடல்களையும் புரிந்துகொள்ள முடியவில்லை, காப்பியமாக இருக்கிறது என்று சொன்னால், அதை எளிமைப்படுத்தி கொடுத்தி ருக்கிறார் அய்யா முனைவர் தமிழமல்லன் அவர்கள்.
இவர் சொற்பொழிவை ஆற்றியதுபோன்று, அதற்கு முன்பு புலவர் வெற்றியழகன் அவர்கள் இதே அரங் கத்தில் சொற்பொழிவை ஆற்றியிருக்கிறார்.
அதற்கு முன்பே, சிலம்பொலி அவர்கள், ஒருமுறை அல்ல இரண்டு முறை சொற்பொழிவாற்றி இருக்கிறார் இதே அரங்கத்தில்.
எங்களுடைய இயக்கத்தில் திருச்சிக்கு அருகில் உள்ள புள்ளம்பாடியைச் சேர்ந்த ஆசிரியர் வெற்றி யழகன் அவர்கள், இராவண காவியத்தைப்பற்றி சொற் பொழிவாற்றி இருக்கிறார். திருவரங்கத்தில் தொடர்ந்து இராவண காவிய சொற்பொழிவு நடந்தது.
ஆக, இது ஓர் உணர்ச்சிப்பூர்வமான, ஒரு பண் பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கக்கூடிய ஒரு பேரா யுதம் - போராயுதம் - அதைத்தான் அய்யா அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.
ஆராய்ச்சி முன்னுரை
இராவண காவிய நூல் வெளியீட்டின்போது, ஆராய்ச்சி முன்னுரை ஆற்றுகையில் அண்ணா அவர்கள்,
‘‘சுருங்கக் கூறுமிடத்து இந்நூல் பழைமைக்குப் பயணச் சீட்டு - புதுமைக்கு நுழைவுச் சீட்டு. தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள், கவி சுவை அறியாத வர் - கலை உணர்வில்லாதவர் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றல் ஆயுதம்.’’
கம்பன் போன்று இந்த இனத்திற்குத் துரோகம் செய்தவர் வேறு யாரும் கிடையாது. அவருடைய திறமை உயர்ந்ததாகவும், கவிச்சக்கரவர்த்தியாகவும் இருக்கலாம். ஆனால், நம்முடைய மக்களுக்கு என்ன பலன் என்றால், காட்டிக் கொடுத்ததுதான்.
ஏனென்று கேட்டால், வால்மீகி இராமாயணத்தில்கூட ராமன் கடவுளாக்கப்படவில்லை. மனிதனாகத்தான் காட்டப்பட்டான்.
கடவுள் ஆக்கப்பட்டது எதில் என்றால், ஆயிரம் ஆண்டுகள் கழித்து துளசிதாசர் இராமாயணம் என்று சொல்லக்கூடிய ஹிந்தி இராமாயணத்தில்தான். அதில் என்ன எழுதியிருக்கிறதோ, அதை அப்படியே எடுத்துக்கொண்டுதான், கம்பன் பாடினான்.
‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் அய்ந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.
அதற்கு அர்த்தம் என்னவென்றால்,
வடக்கில் துளசிதாஸ் செய்தான்; தெற்கில் கம்பன் செய்தான்
‘கரிய நிறம் கொண்ட திருமாலை விடவும், நெற்றிக்கண் கொண்ட சிவனை விடவும், தாமரை மலர்மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும், பஞ்சபூதங்களை விடவும், எல்லாவற்றையும் விட மேலான உண்மையைக் காட்டிலும், பெரியவர்கள் பிராமணர்கள் என்று கூறி, அவர்களை உள்ளத்தால் விரும்பி ஏற்றிடவேண்டும்' என்று கம்பன் கூறுகிறான். இதையே வடக்கில் துளசிதாஸ் செய்தான். தெற்கில் கம்பன் செய்தான்.
துளசிதாசர் இராமாயணம் என்ன கூறுகிறது? பிராமணர்களின் பாதங்களில் குறையாத பக்தியை வைப்பதுதான் மோட்சம் அடைய வழி! பிராமணர்களைப் பழித்துப் பேசினால் அடுத்த ஜென்மத்தில் காக்கையாகப் பிறப்பார்கள் என்கிறது துளசிதாசர் இராமாயணம்.
எல்லோரையும்விட உயர்ந்தவர்கள் யார் என்றால், பிராமணர்கள் - பார்ப்பனர்கள்தான். அவர்கள்தான் அந்தணர்கள்.
அந்தணர்கள் என்போர் யார்?
அந்தணர்கள் என்பதற்கே - வள்ளுவர் யாரை அந்தணர் என்று சொல்கிறார் - கம்பன் யாரை அந்தணர் என்று சொல்கிறார் - இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
இதுதான் வள்ளுவர் பார்வை.
அதேநேரத்தில், கம்பன் பார்வையில் அந்தணர் என்பது, முழுக்க முழுக்க நம்முடைய நாட்டில் பூணூல் போட்ட பார்ப்பனர்கள்தான்.
அவர்கள் முகத்தில் பிறந்தவர்கள் - ஆகவே, அவர்களை வணங்கவேண்டும் என்பதுதான்.
கடவுளை வணங்குவது முக்கியமல்ல - பிராமணர்களை வணங்கவேண்டும்!
இது மனுதர்மத்தில் இருக்கின்ற ஒரு சுலோகம்
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்
(ரிக் வேதம் 62ஆம் பிரிவு - 10ஆம் சுலோகம்)
இதற்கு என்ன அர்த்தம் என்றால்,
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது,
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்,
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை;
ஆகவே, கடவுளை வணங்குவது முக்கியமல்ல - பிராமணர்களை வணங்கவேண்டும் - பார்ப்பனர்களை வணங்கவேண்டும் என்ற கருத்து துளசிதாசர் ராமாயணத்தில் - மனுதர்ம கருத்து - அதே கருத்து கம்ப இராமாயணத்தில்.
கம்பனுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
அவருக்கே ஒரு குற்ற உணர்வு வந்துள்ளது என்னடா நம்முடைய சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கிறோமே என்று.
அதனால்தான், குற்ற உணர்வோடு பாடியிருக்கிறார் கம்பன்.
அதேநேரத்தில், புலவர் குழந்தை கம்பீரமாக இராவண காவியத்தை இயற்றியிருக்கிறார்.
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
கம்பனைவிட சிறப்பாக எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர் யாருமில்லை என்று இலக்கிய கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்பது வேறு.
இன உணர்வு கண்ணோட்டத்தோடு, நியாய உணர்வு கண்ணோட்டத்தோடு பார்க்கும்பொழுது, உலகளாவிய அந்த நிலையில் பார்க்கும்பொழுது, - பழி நம்மீது வந்துவிடுமே என்று அஞ்சுகிறார், தயங்கு கிறார்.
இந்த நூலை எழுதியதற்காக அவரது மனமே அவரை (கம்பனை) வாட்டி, வதைத்தது.
ஆனால், புலவர் குழந்தையோ, இதை செய்வதுதான் எனக்குப் பெருமை- இதுதான் என்னுடைய ஆயுதம் என்று பெருமிதத்தோடு எழுதுகிறார்.
இதுதான் ஆரியத்திற்கும் - திராவிடத்திற்கும் இருக்கின்ற வேறுபாடு. இதை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும் நீங்கள்.
அண்ணா மேலும் தொடருகிறார்,
தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர் என்றார்.
‘‘காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே, இது அழிந்துவிடாது என்று இறுமார்ந்து இருப்போருக்கு ஓர் அறைகூவல். தமிழருக்கு ஓர் உண்மையை உணருமாறு ஓர் அன்பழைப்பு. தமிழரசுக்கு கால்கோள்'' என்று சொன்னார்.
இராவண காவியம் ஓர் ஆற்றல் ஆயுதம்
எனவே, இராவண காவியம் ஓர் ஆற்றல் ஆயுதம் என்று சொல்வதற்கு பொருள் என்ன என்பதை அண்ணா அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இப்படி ஏராளமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
அய்யிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!
வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!
என்றார் புரட்சிக்கவிஞர்.
அய்யிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
என்ற வரியைப் படித்தவுடன் எனக்கு ஓர் அய்யம் தோன்றிற்று.
யார் வேண்டுமென்றாலும், பாவேந்தர் ஆகலாம்; ஆனால், புரட்சிக்கவிஞர் என்றால், ஒரே ஒருவர்தான்!
புரட்சிக்கவிஞரைப் பற்றி பேசவேண்டும் என்றால், பாவேந்தர் என்று சொல்வதைவிட, புரட்சிக்கவிஞர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், யார் வேண்டுமென்றாலும், பாவேந்தர் ஆகலாம்; அவருக்குமேலே கவிச் சக்ரவர்த்தி ஒருவர் இருக்கலாம். ஆனால், புரட்சிக்கவிஞர் என்றால், ஒரே ஒருவர்தான்.
அய்யா புலவர் இராமநாதன் அவர்களிடம் நான் கேட்டேன்.
அய்யிரண்டு திசைமுகத்தும் என்று சொன்னால், பத்து திசை வருகிறதே என்று அவரிடம் கேட்டேன்.
அவர் சொன்னார், எட்டு திசை, மேலே, கீழே இரண்டையும் சேர்த்தால், பதது திசை என்றார்.
ஆகவே, புரட்சிக்கவிஞருடைய சிந்தனை எவ்வளவு சிறப்பானது என்பதைப் பாருங்கள்.
அய்யிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
என்று சொல்லிவிட்டு,
இங்கே கவிஞர் சொன்னார் பாருங்கள், பெரியா ருக்கு பெரிய வருத்தமே, நம்முடைய இனம் வளர்ச்சி யடைகிறது என்பது எல்லாம் சரிதான். ஆனால், விபீடணக் கூட்டம் அவ்வப்பொழுது வருகிறதே என்பதுதான். விபீடணனுக்கு ஆழ்வார் பட்டம் கொடுக்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம்?
(தொடரும்)
No comments:
Post a Comment