வேலூர் மாவட்டம்: நீட் தேர்வு ஒழிப்பு ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் -அமைச்சர் துரைமுருகன் சுயமரியாதைச் சூளுரை!
வேலூர், அக்.25 மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலூர் மாவட்டக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் பேசினர்.
வேலூர் மாவட்டம் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மகால் அரங்கில், நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் தொடர் பிரச்சார நிகழ்வுகளில் ஒன்றாக 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதே நிகழ்வில், ‘கற்போம் பெரியாரியம்', ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' ஆகிய இரண்டு புத்தகங்கள் அறிமுக விழாவும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த புத்தகங்களை திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அறிமுகம் செய்து பேசினார்.
வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை வகிக்க, வேலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் அனை வரையும் வரவேற்றார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திராவிடர் கழகத்தின் மேடையில் தனது கன்னிப்பேச்சை வழங்கினார்.
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சகி, குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமுலு, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட காங்கிரஸ் இயக்க தலைவர் டீக்காராமன், முகம்மது சகி, மாநில அமைப்பு செய லாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிர் அணி அமைப் பாளர் தேன்மொழி, மண்டல தலைவர் சடகோபன், பெரியார் மருத்துவரணி செயலாளர் மருத்துவர் ஜெகன்பாபு, திராவிடர் கழக காப்பாளர் சத்துவாச்சாரி கணேசன், மாநில மகளிர் அணி பொருளாளர் அகிலா, மண்டல மகளிர் அணி செயலாளர் ஈஸ்வரி, மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். இறுதியாக விஸ்வநாதர் நன்றியுரை கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார். அவர் தனது உரையில், மேடையில் அமர்ந்திருந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற பொறுப்பாளர்கள் அனை வரையும் சுட்டிக்காட்டும் விதத்தில், இந்த விழுதுகள் எவ்வ ளவு முக்கியமோ, அதேபோல் அந்த விழுதுகளைத் தாங்கி நிற்கும் வேர்களும் முக்கியம் என்று ஆழமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நாம் எத்தனை பட்டங்கள் வாங்கினாலும் இன்னும் நமது ‘சூத்திரப்பட்டம்' போக வில்லையே என்று கவலைப்பட்டபடியே திராவிடர் இயக்கம், இந்த இழிவு நீங்க என்னென்ன செய்தது என்பதைச் சுட்டிக் காட்டினார். சுடுகாட்டில்கூட பேதமிருப்பதையும், திராவிடர் இயக்கம்தானே அதைக் கண்டிக்க முன்வந்தது என்று எடுத்துரைத்தார். அந்த திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி தான் இன்றைய ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி என்று இன்றைய தமிழ்நாடு அரசையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பாராட்டினார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்', ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்லி, இதுதான் திராவிடம் என்று பேசினார். கிறித்துவ மதத்திலேகூட தட்டுங்கள் திறக்கப்படும் என்றுதான் இருந்தது. அங்கேயும் கதவு மூடித்தான் இருந்தது. ஆனால், இந்து மதத்தில் ‘கிட்ட வராதே, எட்டி நில்' என்று நிறுத்திவிட்டான்.
பெரியாரின் கைத்தடிதானே கதவை உடைத்துத் திறந்தது என்று வகுப்புவாரி உரிமைப் போர் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லிப் புரியவைத்தார். வாய்ப்பு வந்த பிறகு நம் மக்கள் கல்வி வேலை வாய்ப்பில் மேலே வந்தார்களா இல்லையா? என்று கேள்வி கேட்டு தெளிய வைத்தார். ‘தேசபிதா' காந் திக்கே சீனுவாச அய்யங்கார் வீட்டினுள் நுழையும் சுதந் திரத்தைப் பெற்றுத்தந்ததே பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தானே? என்று நாம் அனுபவித்த கொடுமைகளையும், சுயமரியாதை இயக்கத்தின் பெருமைகளையும் பட்டியலிட் டார். அதன் தொடர்ச்சியாகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை என்று வரலாற்று உண்மைகளை எடுத் துரைத்தார்.
அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளை இன்றைய முதல்வர் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மு.க.ஸ்டாலின் எடுத்ததும் அதே சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சிதான்! சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டுக்கு செய்த சாதனைகள் அனைத்தும் இந்தியாவுக்கே கிடைத்திருக்கிறது. எங்கள் கைகளில் இருந்த அறிவுச்சுடரை இன்றைய இளைஞர்கள் கைகளில் கொடுத்திருக்கிறோம். நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதே வரலாற்றுத் தொடர்ச்சியை நினைவுபடுத்திவிட்டு, நீட் தேர்வு பற்றிய தகவல்களைக் கூறி, இதில் நாம் வெற்றி பெறுவோம், அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் வேலூர் மாவட்டம் திராவிடர் இயக்கத்தோடு நீண்ட நெடுங்காலம் தொடர்புடைய மாவட் டம் என்று, அதன் வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்தார். அன்னை மணியம்மையார் அவர்கள் நம்முடைய வேலூர்தான்!
அறிஞர் அண்ணா, காந்தியாரின் சிலையைத் திறந்து வைத்தது இங்கேதான்! ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று அண்ணா சொன்னதும் இங்கேதான்! கோட்டை மைதானத்தில் போராட்டத்தில் அண்ணா சிறைப் பட்டதும் இங்கேதான்! ‘வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும், நாடு இருந்தால்தான் கட்சி நடத்த முடியும்' என்று திராவிட நாடு கோரிக்கையை ஒத்தி வைக்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை வெளியிட்டதும் இங்கே தான்! என்று அடக்கத்துடன் பட்டியலிட்டார்.
பின்னர் திராவிடர் இயக்கம் மட்டும் இல்லாவிட்டால், துரைமுருகனாகிய நான் ஏர் உழுது கொண்டுதான் இருந் திருப்பேன்! இந்த வரலாற்றை நமக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை என்று தன்னையும் சேர்த்து குறைபட்டுக் கொண்டார். பெரியார் வந்து சுயமரியாதை ஊசி போட்டதை பகிர்ந்து கொண்டார். அத்தோடு அந்த சுயமரியாதை ஊசி மட்டும் போடப்படாமல் இருந்திருந்தால், நாம் நாயினும் கீழாக இருந்திருப்போம் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
ஒரு மனிதனுக்கு காற்றும், நீரும் எப்படி முக்கியமோ, அது போல தவிர்க்கவே முடியாதவர் பெரியார்! என்று பலத்த கைதட்டல்களூக்கிடையே கூறிவிட்டு, அடி மண்ணை மேல் மண்ணாகவும், மேல் மண்ணை அடி மண்ணாகவும் வரலாற்றை உழுதுபோட்ட வைரக்கலப்பை பெரியார் என்ற கவிப்பேரரசு வைரமுத்து பெரியார் பற்றி எழுதிய கவிதையை சுட்டிக்காட்டி, அடி மண் நாம் என்றும், மேல் மண்ணை ‘அவாள்' என்று தனக்கேயுரிய பாணியில் சுட்டிக்காட்டினார். எண்ணியதை நிறைவேற்றிக் காட்டுகிற வல்லமை பெரியாருக்கு உண்டு. அய்யாவைத் தவிர்த்துவிட்டு தமிழ் நாட்டில் யாராலும் அரசியல் செய்ய முடியாது. அதே வல்லமை இப்போதிருக்கிற தமிழினத் தலைவர் வீரமணிக்கு உண்டு. ஆசிரியர் அவர்கள், ஒற்றைநாடி உருவம், மூன்று முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், இரவு பகல் பாராமல் நூற்றுக்கணக்கான மைல்கள் சுற்றிச்சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறவர்! என்று ஆசிரியரின் பணிகளை உருவகத்துடன் கூறிவிட்டு, மிகுந்த உணர்வு வயப்பட்டு, ‘அய்யா நீங்கள் எனக்கு பெரியாராகவே தெரிகிறீர்கள்' என்று கூறி நிறுத்தினார். கைதட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. இறுதியில் நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் காஞ்சி மண்டலத் தலைவர் எல்லப்பன், அரக்கோணம் மாவட்டத் தலைவர் லோகநாதன், அமைப்புச் செயலாளர் ஒரத்தநாடு குண சேகரன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் எழிலரசன், மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டி, மாநில அமைப்புச் செய லாளர் ஊமை ஜெயராமன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் மூர்த்தி, செய்யாறு ப.க. தலைவர் வெங்கட்ராமன், வேலூர் மண்டலத்தலைவர் சடகோபன், வேலூர் மகளிரணிச் செயலாளர் ரம்யா கண்ணன், வேலூர் மாணவர் கழகப்பொறுப் பாளர் வெங்கடேசன், முனைவர் தமிழ்மொழி, ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, கண்டு, கேட்டு மகிழ்ந்து சென்றனர்.
No comments:
Post a Comment