மாநில மறுசீரமைப்புக்குப் பிறகும் இடஒதுக்கீட்டுச் சலுகைகள் தொடரும்: உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

மாநில மறுசீரமைப்புக்குப் பிறகும் இடஒதுக்கீட்டுச் சலுகைகள் தொடரும்: உச்சநீதிமன்றம்

ஒருங்கிணைந்த பிரிக்கப்படாத மாநிலத்தில் வசிக்கும் ஒருவர், அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு எந்தவொரு மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற முடியும்; ஆனால், ஒரே நேரத்தில் மாநிலங்களிலும் இட ஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியாதுஎன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், ஹஸாரிபாக் மாவட்டத்தில் கடந்த 1974இல் பிறந்தவர் பங்கஜ் குமார். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த இவருடைய தந்தை பணி மாறுதலுக்காக குடும்பத்துடன் ஹஸாரிபாக் வந்தார். பங்கஜ் குமாருக்கு 15 வயதாகும் போது அவர் குடும்பம் ராஞ்சிக்கு இடம் பெயர்ந்தது.

கடந்த 2008இல் ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். நேர்காணலில் அவர் அளித்த ஜாதிச் சான்றிதழில் அவர், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விண்ணப்பத்தில் அவர் பீகாரின் பாட்னாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், அவருக்குப் பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் 2 பேர், அவருடைய நிரந்தர முகவரியைக் காரணம் கூறி அவருக்கு பணி நியமனம் வழங்க மறுத்து 24.2.2020 அன்று தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து பங்கஜ் குமார், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதி யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த அந்த நபர், பீகார் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பீகார் அல்லது ஜார்க்கண்ட் இவையிரண்டில் எந்தவொரு மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற முடியும். அதேசமயம், ஒரே நேரத்தில் இரு மாநிலங்களிலும் இட ஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியாது.

பங்கஜ் குமார் வழக்கில், அவர் ஜார்க்கண்ட் மாநில அரசு ஊழியராகப் பணியாற்றி வருகிறார். அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் கீழ் சலுகைகளைப் பெறத் தகுதி பெற்றவர். எனவே, 2007-ஆம் ஆண்டு வெளியிட்ட பணி நியமனத்துக்கான விளம்பரத்தின் அடிப்படையில், அவரை 6 வாரங்களில் பணியில் அமர்த்த வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் அவருக்கு பதியமும், இதர படிகளும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நன்றி: சட்டக்கதிர்

No comments:

Post a Comment