அரசுத் துறைகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

அரசுத் துறைகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்!

கருநாடக மாநில மேனாள் முதல் அமைச்சர் திரு. குமார சாமி  அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை அவிழ்த்துக் கொட்டினார்.

"நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற 4000 பேர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்துள்ளனர். நாடு எங்கே சென்று கொண்டி ருக்கிறது?" என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

கருநாடக மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜூனே கார்கே அவர்களும் இதே பாணியில் இன்னொரு தகவலையும் முன் வைத்தார்.

"ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி விட்டது. அனைத்துத் துறை களிலும்   குறிப்பாக, கல்வித்துறையில் அதிகமாகவே கால் பதித்து விட்டது" என்று கூறியுள்ளார்.

கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்த தகவல் இவற்றை எல்லாம்விட அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.

"இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் இணைச் செயலாளர்கள் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸின் பின்புலத்தில் உள்ளவர்கள் அய்..எஸ். ஆக இல்லாத நிலையிலும்கூட நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைகளும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் எனும் பாசிசத்தின் மாடல்தான் இது; கல்வித்துறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மய்யங்கள் இவர்களின் இலக்குகளாக உள்ளன. 'சங்கல்ப்' என்னும் பெயரில் உள்ள ஓர் அமைப்பு அய்..எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி நிறுவனங்களை (Coaching Centre) நடத்தி வருகிறது. அங்கிருந்து பலரும் அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்" என்று ஜோதிமணி எம்.பி. குறிப்பிட் டுள்ளார்.

இந்தப் பயிற்சி மய்யத்தில் படிப்போர்க்கு நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் போடப்படுவதாகவும் தகவல்.

ஆர்.எஸ்.எஸின் ஊடுருவல் ஏதோ இப்பொழுது தான் நடக்கிறது என்று அவசர மனக்கணக்குப் போட வேண்டாம்.

அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக வருவதற்கு முன்பாகவே, ஜனதா அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக  இருந்தபோதே - வெளிநாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரக அலுவலகங்களிலெல்லாம் ஊடுருவி விட்டனர்.

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை இதற்கு முன்னிருந்த ஆளுநர் பறித்துக் கொண்டு செயல்படவில்லையா?

இந்தியாவின் விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணுபகவத் வெளிப்படையாகக் கூறியதுண்டே!

80 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிர்வாகப் பணிகளில் (Executive Posts) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத் திலும் முக்கிய பிரிவுகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று விமானப்படைத் தளபதி விஷ்ணுபகவத் கூறியதுண்டே!

ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்படவில்லையா?

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்ற உண்மை வெளி வந்ததே - அது எப்படி? இந்தப் பின்னணிதான்.

அயோத்தியில் பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வழிகாட்டுதலில்,  தலைமையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அம்மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரியாக (ஷிஷிறி) இருந்த டி.பி. ராய் என்பவர் பிறகு அவர் பிஜேபியில் சேர்ந்து தேர்தலிலும் பி.ஜே.பி. சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டு மக்களவை உறுப்பினராகவும் ஆகவில்லையா?

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரலாம் என்று குஜராத் அரசு அறிவிக்கவில்லையா? (2000 ஆண்டு பிப்ரவரி) குஜராத் முதல் அமைச்சராக இருந்த சேசுபாய் படேல்தான் அந்த அறிவிப்பைச் செய்தவர்.

இந்தப் பின்னணிகளையெல்லாம் புரிந்து கொண்டால்தான் கருநாடக மாநில மேனாள் முதல் அமைச்சர் திரு. குமாரசாமி அவர்கள் தெரிவித்த கருத்தின் தகவலில்  உள்ள உண்மையின் நுட்பம் என்னவென்று புரியும்!

மோடி ஆட்சியில் பாதுகாப்பு சம்பந்தமான தொழிலகங்கள் கூட தனியார் வசம் போகும் ஆபத்து இருக்கிறது என்றால், இந்தியாவின் பாதுகாப்பு இரகசியத்தின் கதி என்னாவது என்பதும் முக்கியமான கேள்வியே!

எதைப்பற்றியும் கவலைப்படாமல், தங்களின் இந்துத்துவ தத்துவத்தை நிலை நிறுத்தும் கண்மூடித்தனம் மட்டுமே அவர்களை நொடிதொறும் நொடிதொறும் இயக்கிக் கொண்டே இருக்கிறது.

வெகு மக்களின் கண் விழிப்புத்தான் இதற்கு ஒரே தீர்வு - கட்சிகளைக் கடந்து சிந்திப்போமாக!

No comments:

Post a Comment