எழுவோம் இன்றே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

எழுவோம் இன்றே!

முனைவர் கடவூர் மணிமாறன்

மாநிலங்கள் எல்லாமும் மகிழ்ந்து வாழ்த்தும்

               மாண்பார்ந்த முதல்வருளே முதல்வர் என்னும்

தேனார்ந்த பெரும்புகழின் உரிமை யாளர்

               திராவிடத்தின் தேயாத புகழை மீட்கும்

வானளவு பேருள்ளம் கொண்டார்; மக்கள்

               வளம்பெறவே நாள்முழுதும் உழைக்கக் கற்றார்!

கோணல்மிகு நெஞ்சுடையார் பத்தாண் டாகக்

               குற்றங்கள் இழைத்ததனை மறக்கப் போமோ?

 

மக்களையே தேடிவரும் மருத்து வத்தின்

               மதிவளத்தை என்னென்போம்; நமக்கு நாமே!

தக்கபடி இளைஞர்க்கு வேலை வாய்ப்பு !

               தண்டமிழ்க்கே முதலிடத்தை வழங்கும் சீர்த்தி;

மிக்கபல மகளிர்நலத் திட்டத் தாலே

               மேன்மையுறத் தமிழகமும் மிளிர்வ தற்கே

எக்கணமும் பாடுபடும் ஏந்தல்; நாட்டில்

               ஏற்றத்தை மாற்றத்தை விதைக்கும் நல்லார்!

 

தெளிவில்லார்,  தமிழர்தம் பெருமை பேணார்,

               திராவிடமோர் வெற்றுச்சொல் என்றே நாளும்

உளறுகிறார்; உண்மைக்குத் திரைகள் போட்டே

               ஒப்பாரி வைக்கின்றார்; வஞ்ச கத்தால்

அலறுகிறார்; தளபதியார் உணர்வை ஏலார்;

               அரைக்கிறுக்கர் போலிங்கே ஆர்க்கும் வேண்டாக்

குளறுபடி எல்லாமே அறியும் வையம்;

               குளிர்நிலவைக் கையிரண்டால் மறைக்கப் பார்ப்பார்!

 

ஒன்றியத்தார் அதிகாரத் தாலே நந்தம்

               ஒண்டமிழ்க்குப் பல்லாற்றான் கேடு செய்யும்

புன்மைகளை அரங்கேற்றிப் பூரிக் கின்றார்!

               புத்தொளியை, பகுத்தறிவை வழங்கிச் சென்ற

மன்பதையோர் மதிக்கின்ற பெரியார் என்னும்

               மலையோடு மோதுகிற குருவிக் கூட்டம்

என்னாகும்? எதிர்காலம் விடையைக் கூறும்

               இனமானம் தழைத்திடவே எழுவோம் இன்றே!

No comments:

Post a Comment