நாயுடு சங்கத்தின் சார்பில் நவம்பர் 13ஆம் தேதி நடத்தப் பட உள்ள மாநாட்டுத் துண்டறிக்கையில் தேவையில்லாமல், அதிகப்பிரசங்கித்தனமாக தந்தை பெரியார் படத்தையும் வெளி யிட்டது பெரும் பிரச்சினையாக சமூக வலைதளங்களில் பெரும் விவாத அரங்கை ஏற்படுத்தி விட்டது.
இதுகுறித்து "தமிழர் குரல் இணையம்" (26.10.2021) வெளியிட் டுள்ள தகவல்கள் முக்கியமானவை. அதன் விவரம் வருமாறு:
குறிப்பிட்ட அழைப்பிதழை வெளியிட்ட, ‘தமிழ்நாடு நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் சடகோபனை தொடர்பு கொண்டு tamilankural.com இதழ் சார்பாக இது குறித்து கேட்டோம்.
அவர் நம்மிடம், “தமிழ்நாட்டில் நாயுடுக்கள் நாயக்கர்கள் என அழைக்கப்படுகிறோம். நாங்கள் தெலுங்கு வம்சாவளியாக இருந்தாலும், 97 சதவிகிதம் பேர் தெலுங்கை மறந்துவிட்டோம். அம்மொழியை பேசும் மூன்று சதவிகிதத்தினருக்கும் தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியாது.
நாங்கள் முழுவதும் தமிழராகவே உணர்ந்து, தமிழராகவே வாழ்கிறோம். தமிழ்தான் எங்கள் தாய் மொழி.
எங்களில் தமிழில் பண்டிதம் மிக்க படைப்பாளிகள் பலர் உண்டு. தமிழ் மொழிக்காக போராடியவர்களில் நாங்களும் உண்டு. இன்றும்கூட தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்காகவே குரல் கொடுக்கிறோம் - போராடுகிறோம்.
பாரம்பரியமாக, நாயுடு, நாய்க்கர் என ஜாதியில் வருகிறோம். அதாவது வன்னியர், நாடார், பிள்ளை போல நாங்களும் தமிழ் ஜாதிதான்!” என்றார்.
அவரிடம் நாம் மேலும் பேசியதாவது: "அது சரிதான்.. ஆனால் ஜாதிக்கூட்டத்தில் தந்தை பெரியார் படம் தேவையா?”
”தந்தை பெரியாரை நாங்கள் போற்றுகிறோம். சமூக நீதிக்கான அவரது போராட்டங்கள்தான் நாட்டை சீர்திருத்தின. பாடை தூக்கும் பிரிவில் இருந்து உயர்வாக கருதப்படும் பிரிவு வரை நாயுடு, நாய்க்கரில் உண்டு. அனைவரையும் ஒன்றிணைத்து, உயர்வு தாழ்வு கூடாது என்பதற்காகவே இந்த மாநாடு.
எங்கள் சமூகத்தின் உயர்ந்த தலைவர்களின் படங்களை பிரசுரித்துள்ளோம். மதுரையைச் சேர்ந்த கண்ணையா நாயுடு என்பவர், வியாபாரத்துக்காக இலங்கை சென்றார். அங்கு சிங்கள மன்னருக்கு வாரிசு இல்லாத நிலையில் இவர் மன்னரானார். அவர்தான் விக்கரமசிங்கர். அவர் படத்தைச் சேர்த்திருக்கிறோம்.
சரோஜினி நாயுடு படத்தைக்கூட சேர்த்திருக்கிறோம். அவர் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் அல்ல; வங்காள இனத்தவர் அவர்., கோவிந்தராஜுலு நாயுடு என்ற மருத்துவரை காதலித்து மணம் செய்துகொண்டதால்தான் தன் பெயருக்குப் பின்னால் நாயுடு என சேர்த்துக்கொண்டார். ஆனால் அவர் மிகச் சிறந்த பாடகி, சுதந்திரப்போராட்ட வீராங்கனை, முற்போக்குவாதி.. ஆகவே அவரது படத்தை அழைப்பிதழில் சேர்த்திருக்கிறோம்.இவர்களைப்போல அனைவரும் முன்னேற வேண்டும் என்பதைக் குறிக்கவே இப்படங்களை சேர்த்தோம்” என்றார்.
நாம், ” அது இருக்கட்டும். ஜாதி ஒழிப்பில் இறுதி வரை உறுதியாக இருந்த பெரியார் படத்தை சேர்த்ததுதான் சர்ச்சையாகி இருக்கிறது!” என்றோம்.
அதற்கு அவர், “தந்தை பெரியாரை மதிக்கிறோம். அவரே தன்னை பலிஜா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டிருக்கிறார்” என்றார்.
அதற்கு நாம், “தனது சகோதரி மகளுக்கு மிகச் சிறு வயதிலேயே (குழந்தை) திருமணம் செய்து வைக்கப்பட்டதையும், அப்பெண்ணின் கணவர் மிகச்சில காலத்திலேயே இறந்துவிட்டதையும் குறிப்பிடும் தந்தை பெரியார், ‘நான் சார்ந்த பலிஜா நாயுடு ஜாதியில் மறுமணம் செய்துவைப்பதில்லை. ஆனால் என் சகோதரி மகளுக்கு மறுமணம் செய்வித்தேன்’ என்கிறார். அதாவது, மறுமணம் செய்விப்பதில்லை என்பதைக் குறிப்பிடவே ஜாதியைக் குறிப்பிடுகிறார்.
தவிர ‘மறுமணம் செய்வித்தபோது என்னை எதிர்த்த என் உறவினர்கள், நான் ஈரோடு சேர்மேன் பதவிக்கு வந்ததும் ஓடி வந்தனர்’ என்றும் கிண்டலாக குறிப்பிடுகிறார், பெரியார்.
அதோடு மதுரை நாயக்க மன்னர்கள் உள்ளிட்ட அனைத்து மன்னர்களையுமே கடுமையாக விமர்சிக்கிறார்.
அக்காலத்தில் ஜாதிப் பெயரை தங்களது பெயருக்கு பின் சேர்ப்பது வழக்கமாக இருந்தது. முதன் முதலில், என் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப்பெயரை இனி பயன்படுத்த மாட்டேன் என்று அறிவித்து அதன்படி நடந்தவர் பெரியார். இன்றும் பெயருக்குப் பின் ஜாதிப் பெயரை சேர்க்கும் வழக்கம் இந்தியா முழுதும் இருந்தாலும், தமிழ்நாட்டில் பெருமளவு கிடையாது. இதற்குக் காரணம் தந்தை பெரியார்தான். தவிர சுய ஜாதி விரோதியாக அவர் வாழ்ந்தார். தான் சார்ந்த ஜாதியையும் கடுமையாக விமர்சித்தவர்.
தவிர, ஜாதிக்கு காரணமான மதத்தை, கடவுள் என்கிற பதத்தை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். உங்கள் அழைப்பிதழின் மேலே, ‘சிறீராமஜெயம்’ என அச்சடித்துள்ளீர்கள். அதன் கீழே பெரியார் படத்தையும் பிரசுரித்துள்ளீர்கள். இது முரண்பாடாக தெரியவில்லையா” என்றோம்.
சிறிது நேரம் யோசித்தவர், “இனி பெரியார் படத்தை அழைப்பிதழில் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறோம்” என்றார், நாயுடு ஜாதி கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் சடகோபன்.
அதோடு, பெரியார் படம் நீக்கப்பட்ட அழைப்பிதழையும் அனுப்பினார்.
அவர், “தெலுங்கு வம்சாவளிகளாக இருந்தாலும், தெலுங்கை பெரும்பாலோர் மறந்துவிட்டோம். தமிழே எங்கள் தாய்மொழி, நாங்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களே’ என்பது வரவேற்கத்தக்தே. அதே நேரம், இன்னமும் ஜாதிப் பிடிமானத்தை கொண்டிருப்பதோடு, பெரியார் படத்தை பயன்படுத்துவதுதான் உறுத்தலாக இருந்தது. ‘இனி தவிர்ப்போம்’ என்பதோடு அதை செயல்படுத்தியும் இருப்பது மன நிறைவை அளிக்கிறது.
- டி.வி. சோமு, இதுதான் 'தமிழர் குரல்' இணையத்தின் தகவலாகும்.
தந்தை பெரியார் பெயர் ஒரு ஜாதி அமைப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது கண்டு முற்போக்குச் சிந்தனையா ளர்கள் மத்தியிலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் மத்தி யிலும் கோபக்கனல் வெடித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதுதான் பெரியார் ஊட்டி சென்ற ஓர் உணர்வு. ஜாதி ஒழிப் புக்காக அரசமைப்புச் சட்டத்தையே எரித்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே!
தந்தை பெரியார் என்றால் ஏதோ ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தக்காரரல்ல - ஒட்டு மொத்த சமூகத்திற்கே பாதுகாவலர் என்ற எண்ணம் ஓங்கி நிற்பதை உரத்துக் கத்தும் அனுமார் தமிழர்கள் உணர்வார்களாக!
உண்மை தெரிந்த நிலையில் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்ட நாயுடு சங்கத்தாரும் பாராட்டுக்குரியவர்களே!
No comments:
Post a Comment