தஞ்சை, நவ.5- டெல்டா மாவட்டங்களில் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங் களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.
வடகிழக்கு பருவமழை தொடங் கிய நாள் முதலாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து இரவு நேரங்களிலும், பகலில் அவ்வப் போதும் மழை பெய்து வந்தது. நள்ளிரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா இளம் நெற்பயிர்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் மழை நீரில் மூழ்கியது.
திருவாரூர் மாவட்டத்தில் 30 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலும், குறுவை அறுவடையும் பாதிக்கப்பட்டுள் ளது. ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டாலும், வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கன மழையால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
புதுச்சத்திரம் அருகே உள்ள பூவாலை, அலமேல்மங்காபுரம், சேந்திரக்கிள்ளை, மணிக்கொல்லை, வயலாமூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சற்று தாழ்வான பகுதிகளில் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம், காட்டுமன்னார் கோவில், குறிஞ்சிப்பாடி, குமராட்சி உள்ளிட்ட இடங்களிலும் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகு பெருமாள் குப்பம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment