'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. தவிர்த்த அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள்குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை முறையாக நடந்து வந்தது.
ஒன்றிய அரசால் திணிக்கப்படுகின்ற நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் 20 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள் ளனர். கடந்த ஆட்சியில் இரண்டு சட்ட வரைவுகள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசோ குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட முனைப்புக் காட்டாமல் அலட்சியத்துடன் நடந்துகொண்டது.
தற்பொழுது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து, அக்குழுவின் பரிந்துரையின்படி, தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் ஒரு மனதாக சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எழுதியதைப்போல், 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியதுடன், நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரை நகலையும் அளித்துள்ளார்.
இந்நிலையில், 'நீட்' அசல் விடைத்தாள் நகலை வழங்கக் கோரியும், மறு மதிப்பீடு செய்யக்கோரியும் மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு 'தாக்கீது' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் விவரம் வருமாறு,
தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த முப்புடாதி என்பவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
"என் தந்தை சமையல் வேலை செய்கிறார். இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு, செப்., 12இல் நடந்தது. திருநெல்வேலி மய்யத்தில் தேர்வு எழுதினேன். விடைத்தாளில் - ஓ.எம்.ஆர்., சீட்டில், என் கைரேகையை பதிவிட்டேன். தேர்வு அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட்டார். விடைத்தாள் அக்., 15இல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. என் பெயரில் பதிவேற்றம் செய்த விடைத் தாளில் மாறுபாடு உள்ளது. என் கைரேகை இல்லை. முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது; காவல்துறையில் புகார் செய்தேன். மேல் விசாரணை நடத்தவில்லை.
தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, விடைத்தாள் நகலை, 'இ - மெயிலில்' மருத்துவ தேசிய தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது; எனக்கு அனுப்பவில்லை.மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நவம்பரில் துவங்குகிறது. என் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்யப்படாவிடில், கலந்தாய்வில் அனுமதிக்க வாய்ப்பில்லை. என் அசல் விடைத்தாள் நகலை வழங்க வேண்டும். கலந்தாய்வில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும்."
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்து, ஒன்றிய சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல், மாநில மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக்குழு, தேசிய தேர்வு முகமைக்கு தாக்கீது அனுப்பி நவ., 15க்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
இதுபோன்ற ஏகப்பட்ட குளறுபடிகள் 'நீட்' தேர்வில் நடந்துள்ளன. 'நீட்' கேள்வித் தாள்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட அவலமும் ஊடகங்களின் மூலம் அம்பலமாகின. கடந்த முறை நடைபெற்ற 'நீட்' தேர்விலும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் சென்று கதவைத் தட்டியதுண்டு. ஆனால் அதற்கான பரிகாரம் கிடைத்தபாடில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடிய ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், ஏழை எளிய கிராமப்புற மக்களின் மருத்துவக் கனவுகளின் வேர்களை அடியோடு வெட்டி வீழ்த்தும் இந்த 'நீட்' தேர்வின் ஆணி வேரை அடியோடு வெட்டி வீழ்த்தாவிட்டால் மீண்டும் மனுதர்மம் கூறும் குலத் தொழில்தான் மிஞ்சும்.
பெரும்பான்மை மக்களிடத்தில் விழிப்புணர்வும், கிளர்ச் சியும் வெடிப்பதன் மூலம்தான் 'நீட்'டுக்கு மரணவோலை எழுத முடியும்.
கிளர்ச்சி வெடிக்கட்டும்!
உரிமைகள் மலரட்டும்!!
No comments:
Post a Comment