சிங்கப்பூர் 'தமிழ் முரசு' இராமகிருஷ்ணன் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

சிங்கப்பூர் 'தமிழ் முரசு' இராமகிருஷ்ணன் மறைவு

கழகத் தலைவர்  ஆறுதலும், இரங்கலும்!

சிங்கப்பூரில் 'தமிழ்முரசு' நாளேட்டின் நீண்ட காலச் செய்தியாள ராகவும், சிறந்த திராவிட - தமிழ்ப்  பற்றாளரும், நம்மிடம் மிக்க அன்பு பூண்ட குடும்ப நண்ப ராகவும் திகழ்ந்த நண்பர் திரு. இராமகிருஷ்ணன் (வயது 83) அவர்கள் மறைவுற்றார் (4.11.2021) என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிக்க துயரமும் அடைந்தோம்.

பல ஆண்டு காலமாக நட்புறவோடு பழகிய வர்கள் நாங்கள். மறைந்த முதுபெரும் பெரியார் தொண்டர்கள் எஸ்.டி. மூர்த்தி, தி. நாகரத்தினம், முருகு சீனுவாசன் போன்றவர்களுடன் பழகிய சுயமரியாதை வீரர் அவர்.

பல ஆண்டுகளுக்கு முன் அவரது டர்னர் சாலை புதிய இல்லத்தினை என்னை அழைத்துத் தான் திறந்து வைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

திருவாரூர் புலிவலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்; சிறந்த பண்பாளர்; தமிழ்மொழி, இன உணர்வாளர்.

சிங்கப்பூர் செல்லும்போது நான் தவறாமல்  அவரைச் சந்திப்பேன். நலம் விசாரித்து மகிழ்வோம்.

கடந்த சில காலமாக உடல்நலக் குறைவுடன் வாழ்ந்த அவரை அவரது துணைவியார் திருமதி லலிதா அவர்களும், அவரது மகன் ஜெயச்சந்திரன் அவர்களும், மருமகள் புஷ்பராணி மற்றும் பேரப் பிள்ளைகள் கபிலன், கமலி ஆகியோர் சிறப்பாக கவனித்துத் தேற்றி வந்தனர் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரித்தாகும்.

அவரது இறுதி நிகழ்ச்சி நாளை (5.11.2021) சிங்கப்பூர் மன்டாய் மயானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இழப்பு சிங்கப்பூர் இதழ் உலகத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும்.


கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4-11-2021 


குறிப்பு: 4.11.2021 காலை அவரது மகன் ஜெயச்சந்திரன் அவர்களை தொலைப் பேசியில் அழைத்து இரங்கலையும், ஆறு தலையும், கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

No comments:

Post a Comment