ஜெருசலம், நவ.28 புதிய வகை கரோனா வைரசால் இஸ்ரேலில் மீண்டும் அவரச நிலைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னெட் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மலாவியில் இருந்து இஸ்ரேல் திரும்பிய பயணி ஒருவருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாறுபட்ட வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் மற்றும் 2 பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என தெரிவித்தனர்.
இந்தநிலையில் புதிய வகை கரோனா வைரஸ் குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் உடனடியாக அமைச்சரவையை கூட்டினார். அதில், இது டெல்டா மாறுபாட்டை விட மிகவும் தொற்றுநோயாகவும் வேகமாகவும் பரவுவதாகவும் அவர் கூறினார். இது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா? அல்லது ஆபத்தானதா என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நாம் தற்போது அவசரகால விளிம்பில் இருக்கிறோம். அனைவரும் தயாராக இருக்குமாறும், 24 மணி நேரமும் பணியில் முழுமையாக ஈடுபடுமாறும் அமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.
புதிய வகை கரோனா பரவல்- 7 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்
லண்டன், நவ.28 தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த பி.1.1.529 ஓமைக்ரான் என்ற வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது.
அந்த வகையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (சுவாசிலாந்து) ஆகிய தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மேலும், கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் பிரிட்டன் இணைத்துள்ளது. இந்த 6 நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment