கோவில் வியாபாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

கோவில் வியாபாரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது கோபிநாதசுவாமி கோவில்கோவில் நிர்வாகம்கோதானத்திற்கு பசுவுடன் வரும் பக்தர்களிடமிருந்து பசுக்களை பெற்றுக் கொள்ளும். பார்ப்பனர்கள் அதை தரகர்கள் மூலம் விற்றுப் பணம் பார்க்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக வருவாய் ஈட்டும் கோவிலாக ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் இருந்து வருகிறது.

. இக்கோவிலில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இங்கு பசுக்களை தானமாகத் தரும் வழக்கம் உள்ளது.

 கோவிலுக்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களில்கோதானத்திற்காக வெளி மாவட்ட பக்தர்கள் வரும்போது அர்ச்சகப் பார்ப்பனர்கள் அப்படி பசுதானம் செய்பவர்களிடம் கோவிலுக்கு வெளியே வைத்துப் பேசி, பூஜைகள் செய்து தானமாக கடவுளுக்கு கொடுத்துவிட்டதாக கூறிவிடுவார்கள். பசுவைக் கொண்டு வந்தவர்களும் கோவிலுக்குச் சென்று பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்

இதனை அடுத்து கோவில் பெயரில் பெற்ற பசுக்களை அவர்களுக்குள்ளே நியமிக்கப்பட்ட தரகர்கள் மூலம் விற்று விடுவார்கள். இதில் அவ்வூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிலநபர்களும் புரோக்கர்களை மிரட்டிப் பணம் பார்க்கின்றனர்.  

இதே போல், இராமேஸ்வரத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பசுக்களை ஓட்டிக் கொண்டு வர இயலாது. ஆகையால் அவர்களுக்கு அங்கேயே பசுக்களை விற்பதற்கு முகவர்களை (ஏஜெண்டு) பார்ப்பனர்கள் நியமித்து உள்ளனர்.

 யாராவது செல்வந்தர் திதி கொடுக்கவேண்டும் என்று வந்தால் அவர்களிடம் பேசி பசுதானம் செய்வது நல்லது என்று கூறுவார்கள். பசுவிற்கு எங்கு செல்வது என்று கேள்வி கேட்கும் போது, தான் 'செட் அப் செய்த' ஆளை வைத்து "இவர்தான் பசுவிற்கு சொந்தக்காரர்; இவரது பசுவிற்கு விலை உங்களுக்காக குறைத்துப் பேசி இருக்கிறேன், வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறுவார்கள்.

 அதே போல் அங்கே நின்றுகொண்டு இருக்கும் பசுவைக் காட்டி இந்தப்பசுதான் என்று கூறி அதை அவர்கள் கையில் பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்படைத்துவிடுவார்கள். புரோகிதர்களும் பூஜை செய்து பசுவை தானம் செய்ததாக கூறிவிடுவார்கள். வடக்கில் இருந்து வந்தவர்களும் தானம் செய்து விட்டதாக நினைத்துச் சென்றுவிட, பார்ப்பனர்கள் பசுவின் மூலம் கிடைத்த பணத்தை பங்கு போட்டுக் கொண்டு மீண்டும் ஏதாவது ஏமாளிகள் வந்தால் அவர்களுக்கும் அதே பசுவை விற்கத் தயாராகிவிடுவார்கள்.

 முக்கிய நாள்களில் ஒரே பசுவை 20 பேருக்கும் மேல் விற்றுப் பணம் பார்க்கும் வேலையும் நடந்து வருகிறது.   இதற்கென்றே இராமேஸ்வரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம், வாடகை கார் நிறுத்துமிடங்களில் ஆட்களை நியமித்து வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை ஏமாற்றிப் பசுவை விற்கும் ஏமாற்று வேலை நடந்து வருகிறது.  இதே போல் பழனி, திருப்பரங்குன்றம், சிறீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பெரும் கோவில்களிலும் இந்த ஏமாற்று வேலைகள் முகவர்கள் (ஏஜெண்டுகள்) மூலம் 'ஓகோ' என்று நடைபெற்றுக் கொண்டுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 1976 மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் ஒன்றை ஒப்புக் கொண்டார்.

"மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்திகொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது" என்று சங்கராச்சாரியாரே 'திருவாய்' மலர்ந்தாரே!

இப்போதெல்லாம் திருக்கடவூர் போன்ற கோவில் அர்ச்சகர்கள் தங்கள் முகவர்களை (ஏஜெண்டுகளை) இந்தியா முழுவதும் அமர்த்தியுள்ளனர். இதற்காக தனி அலுவலகங்களே இயங்குகின்றன. அந்த அலுவலகங்களும் நவீன தொழில் நுட்பங்களுடன் நடந்து வருகின்றன என்றால், இதன் பொருள் என்ன?

கோவிலை வைத்து வளமான தொழில் நடக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற பிரச்சினையில் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணமே!

No comments:

Post a Comment