இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவு

இமாச்சலப் பிரதேசத்தில், இடைத்தேர்தல் நடந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும், மண்டி மக்களவைத் தொகுதி யிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று பா...விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அனைத்து இடங்களிலும் தோல் வியை தழுவி யுள்ளது. ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், ஒரு சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக கட்டிய பணத்தை (டெபாசிட்டை) இழந்து படுதோல்வியடைந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நவம்பரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பா... அரசின் செயல்திறனுக்கான மதிப்பீடாக இந்த இடைத்தேர்தல்கள் பெரிதும் கருதப்பட்டன.

 மாநில மற்றும் மோடி அரசுக்கு எதிரான அதிருப்தி அலை தான் இந்த மாபெரும் வெற்றியை காங்கிரசுக்கு பரிசளித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பாஜக மீது மக்களின் கோபத்தை திருப்பியுள்ளது. மலைகளால் சூழப்பட்ட மாநிலமான இமாச்சல், பெரும்பாலும் சுற்றுலாத் துறை வருவாயை நம்பியுள்ளது. ஆனால் கரோனா ஊரடங்குகளால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவில்லை.

ஆப்பிள் விலையில் ஏற்பட்ட சரிவு பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது, குறிப்பாக மண்டியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா சிங் தனது தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகள் போராட்டம் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். டில்லி எல்லைகளில் ஓராண்டுக் காலமாக நடக்கும் விவசாயப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, கண் பார்க்காத, காது கேட்காத, வாய் பேசாத எதேச்சதிகார அரசு என்று ஒன்றிய அரசை விமர்சனம் செய்தார்.

மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து குலு நகரிலுள்ள  சால்வை மற்றும் கம்பளி உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், இமாச்சல் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தனது சொந்த தொகுதியான செராஜைச் சுற்றி சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார், பிற பகுதிகளைக் கண்டு கொள்ள வில்லை என்றார். முதன்முறையாக வாக்களித்த, சுந்தர்நகரில் உள்ள இளைஞர்கள் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் செயல்பாடுகள் தங்களை ஈர்க்கவில்லை என்றனர்.

 மண்டி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட  ஜுப்பல்-கோத்காய் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா சிங்  பாஜக வேட்பாளர் நீலம் சாரை டெபாசிட்டை இழக்கச் செய்துள்ளார். 2644 ஓட்டுகளை மட்டுமே அவர் பெற்றார். ஆளும் கட்சியாக பாஜக இருந்தும் அதன் வேட்பாளர் டெபாசிட்டை இழந்துள்ளார்.

ஜுப்பல் கோத்காயில், பாஜக - வேட்பாளர் தேர்வில் தப்பு செய்துவிட்டோம் எனக் கூறி வருகிறது.  இமாச்சலப் பிரதேசத் தில் முந்தைய தேர்தல்களில் இருந்தது போல் இப்போது மோடி அலை இல்லை. மறைந்த ராம் ஸ்வரூப் சர்மா (பா...) இரண்டு முறை மோடி அலையால் மண்டி தொகுதியில் வென்றார்.

2019 இல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது அந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி யுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருந்த போதிலும், மக்களவைத்  தேர்தலில் மக்கள் காங்கிரசை தேர்ந் தெடுத்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரக் காலத்தில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து வாக்காளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதை பல காட்சிப் பதிவுகளில் பார்க்க முடிந்தது.

இமாச்சலப்பிரதேசம் மலைகள் சூழ்ந்த மாநிலம். எனவே அனைத்துப் பொருட்களும் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட வேண்டும். நாளுக்கு நாள் உயர்ந்து வரும், டீசல் விலை சாமானியர்களின் நிதி நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு எதிரான அலை - இமாச்சலப் பிரதேசத் தில் அடுத்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் மாநிலத்தில் பாஜக அரசு பற்றிய மதிப்பீடாக பார்க்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜ் தொகுதியிலிருந்து எம்எல்ஏவானவர். ஆனால், அங்கு மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றுள்ளது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதை இது உறுதி செய்துள்ளது. மணாலி நகருக்கு நான்கு வழிச் சாலை அமைத்தபோது நிலங்களை இழந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காற்றில் பறக்க விடப்பட்டது. இதுவும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  டில்லி எல்லையில் ஓராண் டாக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மோடி அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த விடயத்தை பிரதீபா சிங் தனது பிரச்சாரத்தில் தீவிரமாக கையில் எடுத்தார். இதே நிலைதான் ராஜஸ்தான் மற்றும் மகராட்டிராவிலும் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது,

அதீதமான விளம்பரம் என்னும் பலூனை ஊதிக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறி விடும் என்பதை மறக்க வேண்டாம்.

No comments:

Post a Comment