தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.,
சென்னை, டிச.3 1957- ஜாதி ஒழிப்பு - அரசமைப்பு சட்ட எரிப்புப் போராட்டம் பள்ளிப் பாடத் திட்டத்தில் வைக்கப்படவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.
ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம்
ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்ட நாள்
26.11.2021 அன்று காணொலிமூலம் நடைபெற்ற ‘‘ஜாதி - தீண்டாமை ஒழிப்பு- ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்ட நாள்’’ கருத்தரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக் கக்கூடிய வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கின்ற ஆசிரியர் அவர்களே,
எனக்குமுன் உரையாற்றிய அன்புச் சகோதரர் சுப.வீ. அவர்களே,
மற்றும் திரளாக காணொலி கூட்டத்தில் பங்கேற்றுள்ள திராவிடர் கழக மற்றும் திராவிட இயக்கத் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சட்டத்தை எரிப்பது என்றால், அந்த சட்டம் ‘புனிதத்’ தன்மை இல்லாத - அந்தச் சட்டத்தைக் காப் பாற்றவேண்டிய அவசியமில்லாத சட்டமாக இருக்க வேண்டும்.
அறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு சட்டம் இயற்றப்பட்ட நேரத்தில், பத்து முறை மாற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை, தந்தை பெரியார் அவர்கள் எரிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டதாக நான் ஒரு குறிப்பைப் படிக்கும்போது தெரிந்துகொண்டேன்.
தன்னுடைய தோழர்களின்மீது
தந்தை பெரியார் வைத்த நம்பிக்கை
எந்தச் சட்டமும் மக்களை மதிக்காத சட்டமாக இருக்கக்கூடாது என்ற கருத்திலேதான், தந்தை பெரியார் அவர்கள், அரசமைப்புச் சட்டத்தை எரிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
ஏன் அதை எரிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்?
எது நடந்தாலும் பரவாயில்லை என்று சொன்னார்.
உங்களை கைது செய்வோம் என்று சொன்னார்கள்.
எனக்கு 79 வயதாகிவிட்டது. இதுவரையிலும், இனி மேலும் நான் கைதுக்குப் பயப்படக் கூடியவன் அல்ல.
எதிர்காலத்தில் இந்த சட்டத்தை நீங்கள் மாற்றினால் எனக்கு மகிழ்ச்சி; அப்படி இல்லையென்றால், எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும் நான் சிறையில் இருப்பேன். நான் சிறையிலேயே மறைந்தாலும், என்னு டைய தோழர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பார்கள் என்று சொன்னார், தன்னுடைய தோழர்களின்மீதுள்ள நம்பிக்கையால்.
அந்த நம்பிக்கையைத்தான் இன்றைக்கு நாம் மக்கள் மனதில் விதைக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம்.
எனக்கு ஒரு பெரிய கேள்வி உண்டு -
1950 ஆம் ஆண்டுமுதல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டம் நடை முறைக்கு வருவதற்கு முன்பு, வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்த சட்டங்கள் எல்லாம் செல்லாது. நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட சட்டங்கள் மட்டுமே செல்லும் என்று இருந்தது. இந்த விவரமும், அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மனுதர்மத்தை மட்டும் இவர்கள்
ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள்?
இந்தியா என்பது ஒரு நாடு என்பது 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அதற்கு முன்பு, ஏதோ ஒரு மன்னன், தன்னுடைய ஆட்சியில், ஒரு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகக் உருவாக்கப் பட்டதுதான் மனுதர்மம்.
அந்த மனுதர்மம் மட்டும் ஏன் இன்னும் செல்லு படியாகவேண்டும்; அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, பழைய சட்டங்கள் எல்லாம் காலாவதியாகி விட்டன என்ற நிலையில், மனுதர்மத்தை மட்டும் இவர்கள் ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள்? அந்த மனுதர் மத்திற்கு ஏதாவது திருத்தத்தை இந்த நாடாளுமன்றத்தால் கொண்டு வர முடியுமா? என்கிற கேள்வியை நான் எழுப்பக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
ஒரு கூட்டமே மனுதர்மத்தை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறது
ஆனால், அது முடியாது.
காரணம், அதை வைத்துத்தான் இவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரு கூட்டமே இந்த மனுதர்மத்தை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறது.
நான் செல்லுகின்ற இடமெல்லாம் சொல்வது ஒன்றுதான் - மனுதர்மத்திற்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லை.
தமிழனுடைய மொழியிலே, தமிழிலே சொல்லப் படாதது மனுதர்மம் - வடமொழியில் சொல்லப்பட்டது. அதை வைத்துக்கொண்டு, இன்றைக்கு நம்மையெல்லாம் அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த அடிமைத்தனத்தை நீக்கவேண்டும்; அந்த மனுதர்மத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்கின்ற வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில பிரிவுகள் இருக்கின்றன. ஆகவேதான் அந்த அரசமைப்புச் சட்டத்தை எரிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
எவ்வளவு நியாயமான கருத்து,
எவ்வளவு மனிதாபிமானம் மிக்க கருத்து
எந்த அளவிற்கு மனிதர்களை மதிக்கின்ற ஒரு கருத்து
அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள் - அரசமைப்புச் சட்டத்தை எரிப்பதா என்று கேட்டார்களே தவிர,
அந்தச் சட்டத்திலுள்ள அழுக்கை நீக்கச் சொல்கிறார் - அதனை நாங்கள் நீக்குகிறோம் என்று முன்வராத காரணத்தினால், அரசமைப்புச் சட்டத்தை எரிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தந்தை பெரியார் வந்தார் - அந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்தார்.
எந்த அரசமைப்புச் சட்டமும்
‘புனிதமான’ சட்டமல்ல
அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்ட காரணத்தினா லேயே எல்லாம் ‘புனிதம்‘ அடைந்துவிடுவதில்லை. எந்த அரசமைப்புச் சட்டமும் ‘புனிதமான’ சட்டமல்ல.
இன்றைக்கு மத்தியில் உள்ள ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது
இன்றைக்கு மத்தியில் உள்ள ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பல பிரிவுகளை மாற்றியிருக்கிறது; மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது.
ஒரு சட்டமன்றத்திற்கு இருக்கவேண்டிய அதி காரத்தைப் பிடுங்கி, அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் கைகளில் கொடுக்கிறது.
அப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத் துவது - அதனுடைய மரியாதையைக் காப்பாற்றாமல் போய்விடும், அதனைப் பாதுகாக்கவேண்டும் என்று சொல்வதே வேடிக்கையானது; ஆனால், அதைத்தான் அவர்கள் சொன்னார்கள்.
இதைத்தான் பெரியார் அவர்கள் கேள்வியாகக் கேட்டார்.
அந்தச் சட்டத்திலுள்ள தீமைகள் ஒழிந்திட - ஜாதியை ஒழிப்பதற்காக, மனிதனை மனிதனாக மதிப்பதற்காக - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒன்றுமே இல்லாத நிலையில், அதனை எரிப்பது தவறு என்று நீங்கள் சட்டம் கொண்டு வருகிறீர்கள். எரிப்பதைக் குற்றம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இது எப்படி சரியானது என்று கேட்டார்.
சிறையிலேயே உயிர் நீத்த தியாகிகள்
அரசமைப்புச் சட்டத்தை எரித்து சிறைச்சாலைக்குச் சென்ற ஒரு தோழரின் குழந்தை இறந்துவிட்டது; ஆனால், என்ன சொன்னார் தெரியுமா?
‘‘இந்த நேரத்தில் நான் வெளியே சென்று என்ன செய்யப் போகிறேன்? சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறேன்!’’ என்று சொன்னார்.
மனைவியும், குழந்தையும் இறந்த நேரத்தில்கூட, நாங்கள் சிறைச்சாலையிலேயே இருக்கிறோம் என்று சொன்ன தியாகிகள் இருக்கிறார்கள். சிறையிலேயே உயிர் நீத்த தியாகிகளும் இருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு இந்தப் போராட்டத்தில் முழு மையாக - தந்தை பெரியாரின் கருத்தில் உண்மை, நேர்மை இருக்கிறது என்ற ஒற்றைக் காரணத்திற்காக, ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறை சென்றார்கள் என்றால், தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள அதனைச் செய்தார்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில், சுயமரியாதை முக்கியம். தந்தை பெரியார் அவர்கள், அதனைத்தான் போதித்தார்.
மனிதனாக நான் இருக்கிறேன்; நான் ஏன் சூத்திரனாக இருக்கவேண்டும்?
மனிதனாக நான் பிறந்தேன்- நான் ஏன் இன்னொருவனுக்குப் பணியாற்றுவதற்காகத் பிறந்தேன் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில்.
நானும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடியவன் - சூத்திரர்களும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிய வர்கள். ஏதோ ஒரு கூட்டம் அந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தரவில்லை.
லட்சக்கணக்கான மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லோரும் இணைந்து பெற்ற சுதந்திரம்.
தந்தை பெரியாரின் கேள்வி
சுதந்திரம் பெற்ற பிறகும், நான் சூத்திரனாகவும், அவர்ணஸ்தராகவும் இருக்கவேண்டிய நிலை இருக்கும் என்றால், எதற்காக இந்த அரசமைப்புச் சட்டம்?
இதுதான் தந்தை பெரியார் அவர்களின் கேள்வி.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு யாரும் இல்லை.
அந்தப் பதில் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், ஒரு ஆதிக்க சக்தியினால் ஏற்பட்ட அந்த பாதிப்பைப் பாதுகாக்கவேண்டும் - அதிலே குளிர்காயவேண்டும் என்று எண்ணிய ஒரு சிலரின் ஆதிக்கத்தில் ஆட்சி அமைந்தது.
அரசமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் அவர்களே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசமைப் புச் சட்டத்தை வரையறுக்கும்பொழுது, பல விவாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், பெரும்பான்மை என்ற ஒற்றை வார்த்தையால் நிறைவேற்றப்பட்டது.
இன்றைக்கு நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை என்ற அந்த ஒற்றை கருத்தாக்கத்தால், மக்கள் விரோத சட்டங்கள் எப்படி இயற்றப்பட்டு வருகின்றனவோ - அன்றைக்கும் அரசமைப்புச் சட்ட அவையில் நடந்தது. இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் கண்டித்தார்.
அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவது, ஒரு நாட்டிற்குக் கேடு, அவமானத்திற்குரியது என்று சொல் வது எந்த வகையில் நியாயம்?
என்னை அவமானப்படுத்திவிட்டு, அந்தக் காகிதத் தைக் காப்பாற்றியவர்கள் அன்றைக்கு இருந்தார்கள் என்பதுதானே உண்மை.
அதைத்தான் தந்தை பெரியார் எதிர்த்தார்.
ஜாதி என்பது அவமானத்திற்குரிய
ஒன்றாக இருக்கிறது.
மனிதனை அவமானப்படுத்துகின்ற ஒரு சட்டத்தை நீக்கு - சில பிரிவுகள் மனிதர்களை அவமானப்படுத்துகின்ற பிரிவுகளாக இருக்கின்றன.
ஜாதி என்பது அவமானத்திற்குரிய ஒன்றாக இருக் கிறது. ஒருவனை கீழ்ஜாதி, இன்னொருவன் மேல்ஜாதி என்கிற நிலையில், அடுக்காக இந்த ஜாதியை வைத் திருப்பது என்பது, மனித குலத்தையே அவமானப் படுத்தும் செயல் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே தந்தை பெரியார் அவர்கள் அந்த அரசமைப்புச் சட் டத்தை எரித்தார்.
அன்றைக்குப் பலர் அதை ஒப்புக்கொண்டிருந்தால், இன்றைக்குப் பல பேர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டிருக்காது.
மனிதர்களை மனிதனாக
மதிக்கும் போராட்டம்
எனவே, ஒரு மாபெரும் மனிதநேயப்
போராட்டம் -
மனிதர்களை மனிதனாக மதிக்கும் போராட்டம்
அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்னுடைய 80 ஆம் வயதில் சிறைவாசம் ஏகிய தந்தை பெரியார், உலகின் தனிப்பெரும் தலை வராக மதிக்கப்படுவார்.
மானுடம் போற்றுதல் என்று சொல்வார்கள் - உண்மையிலேயே மானுடம் போற்றிய ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
மற்றவர்கள் எல்லாம் மனிதர்களைத் தங்களுடைய சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
தந்தை பெரியார் வழி வந்தவர்கள் மட்டும்தான், உண்மையிலேயே மனிதர்களை மதிப்பவர்கள், மானு டம் போற்றுபவர்கள்.
மனித இழிவை நீக்கவேண்டும் என்கின்ற காரணத்திற்காக...
அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தை, தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி கவலைப்படாமல், தன்னுடைய வயதைப்பற்றி கவலைப் படாமல், மனித இழிவை நீக்கவேண்டும் என்கின்ற ஒற்றை காரணத்திற்காக அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அச்சுறுத்தினார்கள், சட்டம் கொண்டு வந்தார்கள் - ஒரு போராட்டம் நடத்தப் போகிறேன் என்கிற அறிவிப்பு வந்தவுடன், ஏன் அந்தப் போராட்டம்? அதற்கான தீர்வு என்ன? என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதனைத் தடுப்பதற்கும், முடக்கு வதற்கும் சட்டம் கொண்டு வரும் அளவிற்கு அன்றைக்கு அவர்கள் இருந்தார்கள்.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தந்தை பெரியார் அவர்கள் போராடினார். அவரோடு பலர் சிறையேகினார்கள்; பலர் உயிர்த் தியாகம் செய்தார்கள்; தங்கள் மனைவியை, குழந்தையை, குடும்பத்தை இழந்தவர்கள் பலர்.
இவை எல்லாவற்றையும் தாண்டி, மனிதப் மாண்பு காப்பாற்றப்பட வேண்டும் என்கின்ற ஒற்றை சிந்தனை யில் தந்தை பெரியார் அவர்கள் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.
பாடத் திட்டத்தில்
ஓர் அங்கமாக...
அதை நாம் இன்றைக்கு நினைவு கூர்கிறோம். இந்தக் கருத்தரங்கில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது - 1957 - ஜாதி ஒழிப்பு - அரசமைப்பு சட்ட எரிப்புப் போராட் டத்தை பாடத் திட்டத்தில் ஓர் அங்கமாக சேர்த்தால், எதிர்கால சந்ததியினருக்குத் தந்தை பெரியார் நமக்காகப் போராடினார் என்கின்ற உணர்வினைப் பெறுவார்கள்.
இந்த வரலாறு எல்லோருக்கும் தெரியும் என்று சொன்னார்கள். இதையும் உரிய இடத்தில் சேர்க்க வேண்டிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு, இந்த நல்லவாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment