ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி:   பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங் களுக்குத் தடை, போஸ்டர் - பேனர் தடை உள்ளிட்ட அரசு நடவடிக்கைகள் எல்லாம்  முற்போக்கு இயக்கங் களுக்கு  பாதிப்பாக இருக்கிறதல்லவா?

- முருகேசன், ஆவடி

பதில்: கரோனா கொடுந்தொற்று - கோவிட்-19 முழுமையாகத் தீராத நிலையில், மீண்டும்ஒமைக் கிரான்என்ற ஒரு புதுத் தொற்று மரபணு மாறிய நிலையில், அச்சுறுத்தும் வேளையில் அதனையும் எதிர்கொண்டு, மக்களைப் பீதி அடையச் செய்யாமல், மீட்க வேண்டிய நிலையில், மீண்டும் பெருங்கூட்டம் கூட்டச் சொன்னால் அது சமூக நலத்திற்கு விரோத மானதாகி விடாதா?

சில மாதங்கள் ஆனால் நிலைமை சீர்படும் என்று நம்புகின்றனர். அப்போது முழுக் கதவும் திறக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதே நியாயம்.

கேள்வி: ஆர்.எஸ்.எஸ். தமது நூற்றாண்டில் இந்தியாவையே விழுங்க முனையும் நிலையில் அதே காலகட்டத்தில் நூற்றாண்டைக் கொண்டாடும் சுயமரியாதை இயக்கத்தால் இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லையா?

- சா.அருண்குமார், அரியலூர்

பதில்: நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவும்; சிகிச்சைக்கான மருந்துகளின் பலன் அதே வேகத்தில் பரவாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுவதே இதற்குச் சரியான விடை. நேர்மையான வழியில் கஷ்டப்பட்டு உழைப்பவர்கோடீஸ்வரன்ஆக முடியாது; குறுக்கு வழியாளர்மல்டி-மில்லியனராகஆகிவிடுவர். அவர் முறையை நீங்கள் ஏன் பின்பற்ற வில்லை என்ற கேள்வி நியாயமா தோழரே?

கேள்வி:  விற்கப்பட உள்ள அரசு நிறுவனங்கள் பட்டியலில் திருச்சி விமான நிலையம் உள்ளதாக ஒரு - அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதே - அதனை மாநில அரசே வாங்கினால் என்ன?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: மாநில அரசின் நிதிநிலை குறித்து சில மாதங்கள் முன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி:  காழ்ப்புணர்ச்சியால் சித்திரைக்கு மாற்றப் பட்ட தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் தைக்கு மாற்றக் கூடாது என்று பார்ப்பனர்களும் அடிவருடிகளும் துடிப்பது ஏன்?

- .தமிழ்க்குமரன்,  ஈரோடு

பதில்: உங்கள் கேள்வியிலேயே விடை உள்ளதே. பார்ப்பன அடிவருடிகளாக இருக்கும் போது அவர்கள் பண்பாட்டுப் படையெடுப்பாளர்களுடன் சேர்ந்து பல்லக்குத் தூக்கத்தானே துடிப்பார்கள்?

கேள்வி:  கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 79 பேர் உள்பட இந்தியா  முழுவதும் 5579 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு, ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்துப் பூர்வமான பதில் அளித்துள்ளாரே?

- மன்னை சித்து , மன்னார்குடி - 1.

பதில்: ‘விவசாயிகளின் வாழ்வு - வருமானத்தை இரட்டிப்பாகப் பெருக்குவோம்; வளமாக்குவோம்என்று கதையளந்தவர்களின் ஆட்சியின்  லட்சணத் திற்கு இவை சான்றிதழ்கள்! வேதனை! வேதனை!! வெட்கமும் கூட!!!

கேள்வி:  2011ஆம் ஆண்டு மதுரையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பசுவின் தலையை வீசிச் சென்றதாக கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்திய 6 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது எதைக் காட்டுகிறது?

- கணேசன், மதுரை

பதில்: எப்படியெல்லாம் சிறுபான்மைச் சமூக சகோதரர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் போடப் படுகின்றன என்பதற்கான சரியானசாம்பிள்’ - எடுத்துக்காட்டு இது!

கேள்வி: கீதையைத் தொடர்ந்து பாகவதம் பற்றிய புத்தகம் எழுதுவீர்களா?

-  கலியபெருமாள், (ஓய்வு பெற்ற ஆசிரியர்),

கோரைக்குழி

பதில்: தங்களது யோசனைகளை கருத்தில் கொள் வோம்; ‘உபநிஷத்துக்கள் ஆய்வுபல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அது நூலாக வந்தபிறகு பாகவத ஆய்வும் வரிசைப்படுத்தப்படும். நன்றி!

கேள்வி:  மம்தா காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைப்பது விபரீத அரசியல் விளையாட்டல்லவா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: சரியாகச் சொன்னீர்கள்! விபரீத விளையாட்டு, சு.சாமிகளின், கிஷோர் போன்ற அரசியல் பேரம் செய்பவர்களின் வலையில் அரசியல் தலைவர்கள் வீழ்ந்தால், சூழ்ச்சி வலையில் வேடனுக்கு இரையாக மான்கள் சிக்கும் நிலைதான் இறுதியில் மிஞ்சும்!

கேள்வி:  நாட்டுக்கே முன்னோடியாக பெட்ரோல் விலையை ரூ.3  குறைத்த தமிழ்நாடு அரசை எதிர்த்து, பா... போராடுகிறதே?

- சங்கர் அப்பாசாமி, உடையார்பாளையம்

பதில்: போராட சரக்கு இல்லை பொய்போட்‘ (Boat) மழைக்கால நடிகர்களுக்கு! வேறு என்ன செய்வார்கள்!

கேள்வி:  கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தைக் காரணம் காட்டி கரோனா தடுப்பூசி போட மறுத்து வருகிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே!

- இர. சரஸ்வதி, பெருங்களத்தூர்

பதில்: மதவெறி எப்படி மனித நலத்திற்கு எதிராக செயல்படுகிறது என்பதற்குபளிச்சென்ற உதாரணம் இது!

No comments:

Post a Comment