சென்னை, டிச. 29- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை கண்காணிக்க கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசிகள் வழங் கப்படுவதை கண்காணிப்பதற்காக தனிச் சிறப்பு கைப்பேசி செயலியை பொது சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட தகவல்கள் மட்டுமல்லாமல், விடுபட்டவர்கள் விவரங்களையும் திரட்டி அதுதொடர்பான தரவுகளையும் அந்த செயலி மூலம் தொகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசி திட்டத்தில் பங்கெடுக்கும் அலுவலர்களுக்கு அந்த செயலியைக் கையாளுவது குறித்த பயிலரங்கம் சென்னையில் நேற்று (28.12.2021) நடைபெற்றது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குநர் டாக்டர் வினய் குமார் உள்ளிட்டோர் அதில் பங்கேற்று செயலியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக ஆண்டுதோறும் 10.11 லட்சம் பெண்களுக்கும், 9.23 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரு கிறது. மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மய் யங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் வழங் கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த நடவடிக்கை களை இன்னும் ஆக்கப்பூர்வமாக கைப்பேசி வாயிலாக கண்காணிக்க சிறப்பு செயலி 2.0 உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கமான தடுப்பூசிகள், கரோனா தடுப்பூசி கள், மிஷன் இந்திரதனுஷ் திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த இயலும். தடுப்பூசி முகாம்களை மட்டுமல்லாது வீடுதோறும் தடுப்பூசி வழங்குவதை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் அலைகளை ரசிக்க மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தனிப் பாதை
சென்னை, டிச. 29- சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலைகளை கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக பாதையை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் சுய மரியாதை மற்றும் உரிமைகளை ஊக்குவிப்பதற்கும், சிறந்த வாழ்வாதாரத்தை அளிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திட ஆண்டுதோறும் டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக அய்க்கிய நாடுகள் சபையினால் அனுசரிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக தற்காலிக பாதை அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நடைபாதையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று மாலை திறந்து வைத்தனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன்
ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை
சென்னை, டிச.29- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நேற்று (28.12.2021) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து பேசினார்
நமது கடந்த காலத்தை பற்றி இளைய தலைமுறையினரிடம் பெருமிதம் கொள்ளும் வகையிலும், நமது சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் மிகுந்த மரியாதை அளிக்கும் வகையிலும் கற்பனைத் திறனுடன் 75ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும்.
சுப்பிரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற நமது தேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களின் பெயர்களில் இருக்கைகளை அமைத்து, அவர்களின் நோக்கங்களையும், மகத்தான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கங்களையும் நிறைவேற்ற வேண்டும்.
2047ஆம் ஆண்டில் இந்தியாவின் வரையறைகளை கோடிட்டுக் காட்டும் ஆவணங்களை தயாரிப்பதற்காக அறிஞர்களின் குழுக்களை பல்கலைக்கழகங்களில் அமைக்க வேண்டும். இந்தியாவுக்கு உரிய இடத்தை பெறுவதற்கான மூலோபாய ஆவணங்களில் அவர்கள் பணியாற்ற துணைவேந்தர்கள் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment