இந்தியாவில் முக்கிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான காரக்பூர் அய்.அய்.டி. தனது நாட்காட்டியில் பிப்ரவரி மாதப்பகுதியில் - ஆரியர்கள் குறித்து, சான்றுகளே இல்லாத கற்பனைத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் "சுவஸ்திக்” என்ற சின்னம் வேதகாலத்தில் வாழ்ந்த முனிவர்களால் உருவாக்கப்பட்டது என்றும், சிந்துவெளி நாகரிகத்தில் மிகவும் முக்கியமான முத்திரையாக இதை அங்குவாழ்ந்த மக்கள் பயன்படுத்தி னார்கள் என்றும் உண்மைக்குப் புறம்பாக கூறப்பட்டுள்ளது
இது குறித்து கேள்விப்பட்ட அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்
ஆரியர்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெபி புல்வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது அறிவியல் சான்றுகளோடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிந்து பகுதி மக்களுக்கும் ஆரியர்களின் எந்த ஒரு பழக்க வழக்கங்களுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் போது ஆரியர்களின் வருகை இல்லை. சுமார் 200 ஆண்டுகளாக நடந்த ஹரப்பா, மொகஞ்சாதரா(பாகிஸ்தான்), ராகிகாடி, தொலவீரா(இந்தியா) உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த ஆய்வில் ஆரியர்களுக்கும் - சிந்துவெளிமக்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.
இன்னும் சொல்லப் போனால் வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்து சமவெளிப் பகுதிகளில் இருந்த அணை களை உடைத்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
ஆனால் அறிவியல் பூர்வமாக செயல்படவேண்டிய அய்.அய்.டி-யின் காலண்டரில் "இழந்துபோன இந்திய அறிவுத்தளத்தை மீட்கும் தொழில் நுட்பம்” என்ற தலைப்பில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருட்களை ஆரிய நாகரிகத்தோடு சேர்த்து "பெருவெளி மற்றும் காலம், அண் டத்தின் ஒளி மற்றும் யுகங்கள், பெருவெளியின் காலத் திற்கான விதிகள்” என பல முட்டாள் தனமான தலைப்புகளில் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருட்களோடு ஒப்பிட்டு, தலைப்பிட்டு காலண்டரில் எழுதியுள்ளனர்.
மேலும் சிந்துவெளியில் வேதத்தின் 12 ரகசிய அடை யாளம், சிந்து சமவெளி நாகரிகத்தின் சின்னங்களின் உண்மையான அடையாளம், ஆரியப் படையெடுப்பு என்பது கட்டுக்கதை, சிந்து வெளி மக்கள் மூலம் ஆரியர்கள் என்பவர்கள் இந்த மண்ணின் மக்களே போன்ற தலைப்புகளில் காலண்டர் முழுவதும் கற்பனைக் கதைகளை கட்ட விழ்த்து விட்டுள்ளனர்.
மேலும் சில முத்திரைகளைக் காட்டி ஆரியர்கள் தான் இந்தியாவை அறிவின் ஆற்றல் தளமாக மாற்றிக் காண்பித்தனர் என்றும், தற்போது சமூகவலைதளங்களில் எழுதிவரும் கற்பனைக் கதைகளை - அப்படியே ஒரு பெரிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் காலண்டரில் கொண்டுவந்து அனைவரையும் படிக்கவைப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அய்.அய்.டி. பேராசிரியர் ஜாய் சென் கூறும் போது, நாம் மறைக்கப்பட்ட வரலாற்றை இதுவரை படித்துவந்தோம், தற்போது உண்மைகளை அறியும் நேரம் வந்துவிட்டது, இந்த காலண்டர் உண்மைகளை அறிவதற்கான ஒரு ஆரம்பப்புள்ளி என்று கூறினார். மேலும் ஆரியர்களின் வருகை என்பது கற்பனைக் கதை, ஆரியர்கள் இந்த மண்ணிற்கானவர்களே என்பது குறித்த நீண்ட ஆய்வை இந்த காலண்டரின் மூலம் துவக்கி உள்ளோம் என்றும் கூறினார்.
இது தொடர்பாக மும்பை ஹோமிபாபா அறிவியல் வரலாற்று நிறுவனப் பேராசிரியர் சுலே கூறும் போது, அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்கள் இது போன்ற கற்பனைக்கதைகளை அறிவியல் வரலாறு என்ற பெயரில் வெளியிடும் போது அதன் தாக்கம் மக்களிடையே வெளிப்படும். உண்மைகளை என்றுமே மறைக்க முடியாது. ஆனால் இவர்கள் உண்மைக்குப் புறம்பானவைகளை ஆவணப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது என்று ஊடகம் ஒன்றில் காலண்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
ஆரியராவது - திராவிடராவது எல்லாம் கட்டுக்கதை என்று ஓரிடத்தில் சொல்லுவார்கள். இன்னொரு இடத்தில் ஆரியர்கள் தாம் இந்தியாவின் பூர்வீகக்குடிகள் என்று கதைப்பார்கள்.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி, சிந்து சமவெளி நாகரிக சின்னங்களில் காளையைக் குதிரையாகக் கிராபிக் முறையில் காட்டி, அது ஆரிய நாகரிகம் என்று சாதிக்க முற்பட்டதுண்டே! அடப்பித்த லாட்டமே, உன் பெயர்தான் ஆரியமா?
No comments:
Post a Comment