விழா அல்ல - ஜாதி வேரை வீழ்த்தும் சூளுரை நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

விழா அல்ல - ஜாதி வேரை வீழ்த்தும் சூளுரை நாள்!

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெற்றுள்ளது.

குறிப்பாக தலைநகரமாம் சென்னையில் நடைபெற்ற விழாவை பிறந்த நாள் விழா என்று கூற முடியாது.

மாண்பமை உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் . பொன் முடி அவர்கள் சொன்னதுபோல நூல்கள் வெளியீட்டு விழாவாகத் தான் நடைபெற்றது.

'நூல்'களின் ஆதிக்கத்தை வீழ்த்திட திராவிடர் கழகம் வெளி யிட்டுள்ள நூல்கள் கருத்துப் போர்  ஆயுதங்களாகும்.

கழகத் தலைவரை ஒரு குறியீடாகக் கொண்டு கருத்துப் பிரச்சாரம் பல்வேறு கட்சிகளின் தலைவர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதுதான் உண்மை.

தமிழர் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள்கூட என்ன கூறியிருக்கிறார்?

"பகுத்தறிவு, சுயமரியாதைப் பாடங்களைத் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்" என்றே குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டும் இன்றைய கால கட்டத்தில் எப்படியெல்லாம் தேவைப்படுகின்றன என்பதை நாளும் உணர்கிறோம்.

ஜாதி என்பது மனிதனின் பகுத்தறிவுக்கும் - சுயமரியாதைக்கும் நேர் எதிரானதே.

'சட்ட ரீதியாக அதனை ஒழிக்கும் பணியில் ஈடுபடுவது எம் பணி!' என்று தனது பிறந்த நாள் அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டு இருப்பதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.

இன்னும் ஜாதி ஆணவக் கொலைகள் என்பது வெட்கப்படத் தக்கதாகும். இது குறித்து அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்த கருத்துகளை மிக முக்கியமானதாகக் கருதுகிறார் திராவிடர் கழகத் தலைவர்.

ஜாதி ஒழிப்பு, ஜாதி ஆணவக் கொலைகள் ஒழிப்புக்கு என்னென்னவற்றை எல்லாம் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள பட்டியலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார் தமிழர் தலைவர்.

சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கும் பணி நம்முடையது என்று 'விடுதலை' ஆசிரியர் கூறும் அதே கால கட்டத்தில் உச்சநீதிமன் றத்தின் அமர்வு தெரிவித்துள்ள கருத்துகளும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.

ஜாதியின் பெயரால் மக்கள் பிளவுபடுவதும், கலவரங்களும், சச்சரவுகளும் சமூக வளர்ச்சிக்கும், தனி மனித வளர்ச்சிக்கும், மனித அமைதிக்கும் கூட கேடானவைகளே.

நோபல் பரிசு பெற்ற 'ஆசியன் டிராமா' என்னும் நூலை எழுதிய குன்னர்மிர்தலும் கூட, "இந்திய சமூக அமைப்பில் ஜாதி மிகவும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது. அதனை அறுவைச் சிகிச்சை மூலம்தான் (Drastic Surgery)  ஒழிக்க முடியும்' என்று கூறியுள்ளாரே!

குன்னர் மிர்தல் சொன்னால் நோபல் பரிசு கிடைக்கும் - தந்தை பெரியார் சொன்னால் நோபல் பரிசு கிடைக்கா விட்டாலும் பரவா யில்லை. இந்நாட்டு ஊடகங்கள் (பெரும்பாலும் பார்ப்பனர்களின் கைகளில்தானே) பெரியார் துவேஷத்தை விதைக்கிறார் என்று சொல்லும் போக்கைத்தானே பார்க்கிறோம்.

எந்தவித சித்தாந்தமும் இல்லாதவர்கள் ஒரு கட்சியை உண்டாக்க வேண்டுமானால், அவர்களுக்கு எளிதில் பற்ற வைக்கக் கூடிய நெருப்பு ஜாதி தான்.

ஜாதியை முன்னிறுத்தி அரசியலில் தமிழ்நாட்டில் அறுவடை செய்ய முடியாது என்பது எதார்த்தம் என்பது உண்மையென்றாலும் ஜாதி நச்சு விதை ஊன்றப்படுவதற்கு கிடைக்கக் கூடியது தேர்தல் களமாகி விட்டது.

தந்தை பெரியார் தான் கேட்டார், ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா?என்ற வினாவை எழுப்பினார். தஞ்சை ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டில் (3.11.1957) தந்தை பெரியார்.

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பகுதியைத் திருத்தாவிட்டால், அந்தப் பகுதியைக் கொளுத்துவோம் என்று தீர்மானமே அம்மாநாட்டில்தான் நிறைவேற்றப்பட்டது.

சற்றும் நாண()ம் இல்லாமல், ஜாதியைப் பாதுகாக்கும் அரச மைப்புச் சட்டப் பகுதியைத் திருத்துவதற்குப் பதிலாக, ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவைக் கொளுத்தினால் மூன்றாண்டு தண்டனை என்று அவசர அவசரமாக சட்டம் கொண்டு வரப் பட்டதே! அதை என்ன சொல்ல!

ஆனாலும் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகக் கொளுத்தி அதன் சாம்பலை தமிழ்நாடு உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்தனரே

இத்தகு வீரமும், விவேகமும் நிறைந்த போராட்டம் உலக அளவில் எங்காவது நடைபெற்றதுண்டா?

அந்தப் போராட்டம் நடைபெற்று 64 ஆண்டுகள் ஓடிய பிறகும் - சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லையே!

மாறாக என்ன நடக்கிறது என்றால் இந்து ராஜ்ஜியம், ராமராஜ்ஜியம் உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டார்களே!

ஜாதி ஒழிப்பு என்பது மிகவும் கடுமையான பிரச்சினை - ஆனாலும் எந்த விலை கொடுத்தேனும் ஜாதி ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் - இல்லையெனில் மனித சுயமரியதைக்குப் பொருளே இல்லை - அதனால்தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பிறந்த நாளை சுயமரியாதை நாளாகக் கொண்டாடுகிறோம். சுயமரியாதை இல்லாத நாட்டில் சுயராஜ்ஜியம் என்பது சுத்த மோசடியே! தந்தை பெரியார் காலத்தில் தொடங்கப்பட்ட ஜாதி ஒழிப்புப் பணி, அவரது தலைமை மாணாக்கர் ஆசிரியர் தலைமையில் வெற்றி பெற்றிட உறுதி ஏற்போம் - சலிப்பின்றி உழைப்போம் என்று சூளுரையை மேற்கொள்வோம்! வாழ்க பெரியார்!

No comments:

Post a Comment