இலங்கை சிறையில் இருந்து 55 மீனவர்கள் விடுதலை ஓரிரு நாளில் சொந்த ஊர் திரும்புகிறார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 27, 2022

இலங்கை சிறையில் இருந்து 55 மீனவர்கள் விடுதலை ஓரிரு நாளில் சொந்த ஊர் திரும்புகிறார்கள்

ராமேசுவரம், ஜன.27 நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 தமிழ்நாடு மீனவர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓரிரு நாளில் மீனவர்கள் சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் (டிசம்பர்) 18ஆம் தேதி 6 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மீனவர்கள், இலங்கையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் கடந்த மாதம் 20ஆம் தேதி 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் சிறுவர் என்பதால் மற்ற 12 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கை சிறையில் தவிக்கும் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த55 மீனவர்களும் 4ஆவது முறையாக  25.1.2022  அன்று ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்பாக இனி இந்த மீனவர்கள் எல்லை தாண்டி வரக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாது எனவும், படகுகளின் உரிமையாளர்கள் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், அவ்வாறு ஆஜராகவில்லை என்றால் அனைத்து படகுகளும் அரசுட மையாக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதை இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் தனது சுட்டுரைப் பதிவில், தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரையும் விடுதலை செய்ய இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜெய்சங்கர் தனது டுவிட்டரில், தமிழ்நாடு மீனவர்கள் விடுதலைக்கு பாடுபட்ட இலங்கையில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லே குழுவுக்கு பாராட்டு என்று கூறியுள்ளார்.

ஓரிரு நாளில் சொந்த ஊர் திரும்புவார்கள்

இதனிடையே விடுதலை செய்யப்பட்ட 55 மீனவர்கள் மற்றும் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த சிறுவன் உள்ளிட்ட 56 பேரும் இன்னும் ஓரிரு நாளில் விமானம் மூலம் தமிழ்நாடும் அழைத்து வரப்பட்டு சொந்த ஊர் திரும்புவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment