டில்லியில் உள்ள ‘கோனார்க் சூரிய கோவில்' என்ற பெயரில் செயல்படும் ஓர் அறக்கட்டளை ஒமைக்கிரானை விரட்டும் சாம்பிராணி ஒன்றை தயாரித்துள்ளதாம்.
அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தி கூறுவது என்ன?
“நமது மண் முனிவர்கள் மற்றும் தலைசிறந்த வேதரிஷி களின் ஆசீர்வாதம் பெற்றமண். இங்கு நமது அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் கலாச்சாரத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் ஆச்சாரம் கெட்டுப் போனாலோ, தவறுதலாக தீண்டப்படாதவைகளை நாம் தீண்ட நேர்ந்தாலோ, முன்னோர்கள் விதித்துள்ள படி வர்ணமுறையில் இல்லாதவர் களைப் பார்க்க நேர்ந்தாலோ, தீண்ட நேர்ந்தாலோ அதனால் ஏற்படும் பாவத்தைப் போக்க யாகங்கள் நடத்தினார்கள்.
எல்லா விதமான யாகங்களையும் அனைவரும் செய்ய முடியாது. ஆகையால் தான் வீடுகளுக்கு வந்த பிறகு தலையில் தண்ணீர் தெளித்து சாம்பிராணிகளைப் புகைத்து தீட்டைக் கழித்துக்கொண்டனர்.
இதனால் தூய்மையில்லாத மக்களை நாம் தீண்டும் போது ஏற்படும் கிருமிகள் மரணித்துவிடும். வீட்டில் யாரும் மரண மடைந்து விட்டால் அவர்களின் உடலை எடுத்துக் கொண்டு சென்று வீடு திரும்பும் வரை பலரை நாம் தொட நேரும். இதனால் நமது உடலில் நோய்க் கிருமிகள் சேர்ந்திருக்கும். ஆகையால் தான் வீடு திரும்பிய உடன் வேப்பிலைகளை சாப்பிடக் கொடுப்பார்கள். அதே போல் கடுகெண்ணையில் தீபம் ஏற்றுவதும் கிருமிகளை ஒழிக்க சிறந்த வழி ஆகும்.
வேதம் கற்றறிந்த பண்டிதர்களின் ஆலோசனையோடு நாங்கள் மத அனுஷ்டானங்களின் படி யாகங்களைச் செய்து சாம்பிராணிகளைத் தயாரிக்கிறோம். கரோனா காலத்தில் மக்கள் பட்ட இன்னல்களைக் கண்டு நாங்கள் வேதனை அடைந்தோம். இதற்கான தீர்வு காண பல அறிஞர்களை ஒருங்கிணைத்தோம். இதில் ரூர்கி அய்.அய்.டி. பொறியியலாளர் முகேஷ் ஜெயின் தன்னுடைய முன்னோர்களின் ஆசீர்வாதத்தோடு கரோனாவோடு ஒமைக்கிரானையும் விரட் டும் சாம்பிராணியைக் கண்டுபிடித்துள்ளார்" என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதில் கரோனா, ஒமைக்கிரானை விரட்டும் சாம்பிராணி யைக் கண்டுபிடித்ததாகச் சொல்லும் முகேஷ் ஜெயின் கூறும் போது “நமது சாஸ்திரங்களில் பெரும் கொடு நோய்களை ஒழிக்க பல சாஸ்திர வழிமுறைகள் உள்ளன.
இன்றைய ஓட்டம் மிகுந்த வாழ்க்கையில் நாம் அந்த சாஸ்திர வழிமுறைகளை மறந்துவிட்டோம். நான் நீண்ட காலமாக இதில் ஆய்வு செய்து பல பல ரசாயனங்களைக் கலந்து சாம்பிராணியாக மாற்றித் தந்துள்ளேன். இதன் மூலம் கரோனா கிருமி அழிவது உறுதி.
கரோனா கிருமியை ஒழிக்கும் மருத்துவத்தை இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதவேதத்தில் உள்ள மருத்துவ அறிவியல் மூலம் கண்டுபிடித்துள்ளோம். இதனை வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு பற்றவைத்தால் வீட்டில் கரோனா கிருமி ஒழிந்துவிடும். மக்கள் நலமாக இருக்கும் போது அரசு சிறப்பாக செயல்படும்.
இன்று அய்போ குளோரைட் திரவத்தை சானிடைசர் களாக்கிக் கைகளில் தெளிக்கின்றனர். இதனால் கை அரிப்பு ஏற்படும், தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.
நாம் கோமூத்திரத்தை வாசனைத் திரவியங்களோடு கலந்து தெளித்தால் கரோனா கிருமி ஒழிந்துவிடும், அதே போல் இந்த சாம்பிராணியைப் பற்ற வைத்தால் வீட்டில் கரோனா கிருமி ஓய்ந்துவிடும்" என்று அந்த அய்.அய்.அடி. பேராசிரியர் கூறினார்.
தலைநகர் டில்லியில் உள்ள இந்த அறக்கட்டளை கரோனா தடுப்புப்பணிகளுக்கான அமைப்புகளில் ஒன்றாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைப்பினால் அங்கீகாரம் கொடுக்கப் பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
2020ஆம் ஆண்டு கரோனா முதல் அலையில் ராஜஸ் தானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கரோனாவை விரட்டும் மருத்துவ குணமுள்ள அப்பளம் என்று கூறி விற்பனை செய்தது. அதை ராஜஸ்தானைச் சேர்ந்த அமைச்சரே வெளியிட்டிருந்தார்.
இப்போது அய்.அய்.டி. பேராசிரியர் மகேஷ் ஜெயின் கரோனாவை விரட்டும் சாம்பிராணியைக் கண்டுபிடித்துள்ள தாகக் கூறுகிறார்.
அதுவும் இந்திய சுகாதாரத்துறையால் கரோனா தடுப்புப் பணிக்காக அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளையே இவ்வாறு கரோனா விரட்டும் சாம்பிராணி என்று கூறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள் கரோனா ஒழிந்துவிடும்" என்று சொல்லும் பிரதமர் ஆட்சி புரியும் நாட்டில் இதுபோன்ற மட சாம்பிராணிகள் தான்தோன்றித்தனமாகத் துள்ளிக் குதிப்ப தில் எப்படி ஆச்சரியம் இருக்க முடியும்?
ஆனால் ஒன்று - உயிரோடு விளையாடும் இத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மத நம்பிக்கையும், பக்தியும் மிகுந்த மக்களை சாவுப் படுகுழிக்குள் தள்ளும் என்று எச்சரிக் கிறோம்!
No comments:
Post a Comment