புதுடில்லி, ஜன.6 பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பஞ்சாபில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக நேற்று (5.1.2022) காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.
ஆனால், போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறும் போது, “ பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய குளறுபடியை கவனத்தில் எடுத்துள்ளோம். இவ்விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும். மாற்று பயண திட்டமாக சாலை வழியாக செல்ல நேரும் போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், பஞ்சாப் அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குறைபாடு காரணமாக பதிண்டா விமான நிலையத்திற்கே கன்வாய் மீண்டும் செல்ல முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விளக்கம் கேட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (5.1.2022) பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் பிரதமர் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
‘மோடி பேச்சை கேட்க கூட்டம் வராததே காரணம்’ காங்கிரஸ் கருத்து
புதுடில்லி, ஜன.6 பிரதமர் மோடி பஞ்சாப்பில் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி திடீரென ரத்தானது இதற்கு காங்கிரஸ் அரசின் பாதுகாப்பு குளறுபடிதான் காரணம் என்று ஒன்றிய அரசும், பா.ஜ.க.வும் குற்றம் சாட்டியுள்ளன.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,
“கூட்டத்தை ரத்து செய்ததற்கு காரணம், மோடியின் பேச்சை கேட்பதற்கு கூட்டம் இல்லை என்பதுதான். யார் மீது பழிபோடுவது என்று குற்றம்சாட்டுவதை நிறுத்தி விட்டு, பா.ஜ.க. விவசாயிகளுக்கு எதிரான தனது அணுகுமுறை குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும். கூட்டங்களை நடத்துங்கள். ஆனால் விவசாயிகள் சொல்வதை முதலில் கேளுங்கள்” என கூறியுள்ளார்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எது?
ஒன்றிய அரசு அறிவிப்பு
சென்னை, ஜன.6 வரும் 10ஆம் தேதி பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
இந்தியாவில் சுகாதார பணியாளர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும், இணைநோய்களுடன் அவதிப்படும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை தடுப்பூசி என்ற பெயரில் போடப்பட உள்ளது.
வரும் 10ஆம் தேதி இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இந்த முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசியாக எந்த தடுப்பூசியை போடுவது என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.
நேற்று இது குறித்த அறிவிப்பை ஒன்றிய அரசின் சார்பில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினரும், கரோனா தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய நிபுணர்குழுவின் தலைவருமான வி.கே. பால் வெளியிட்டார். அவர், முதல் 2 டோஸ் தடுப்பூசியாக என்ன தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே தடுப்பூசிதான் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசியாகவும் போடப்படும் என தெரிவித்தார். எனவே கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளில் எதை முதலில் பயனாளிகள் செலுத்திக்கொண்டார்களோ, அதே தடுப்பூசியைத்தான் முன்எச்சரிக்கை டோஸ் தடுப்பூசியாகவும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment