நேற்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் உரையில், தமிழ்நாடு அரசின் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் அணி வகுத்து நின்றன.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் தந்தை பெரியார், காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் தமிழ்நாடு ஆட்சி நடைபோடும் என்ற அறிவிப்பு முக்கியமானது.
இவை ஏதோ நால்வருடைய வெறும் பெயர்கள் அல்ல- கொள்கைகளின் வடிவம்!
சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பாலியல் நீதி, சோசலிசம், மதச் சார்பின்மை இவற்றின் வழி நடையே அது.
சமூகநீதி என்று சொல்லும்போது இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு. 1921ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சி ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு 1928ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த ஒன்றாகும்.
1950 - இந்திய அரசமைப்புச் சட்டப்படி குடியரசு ஆன நிலையில் முதல் காவு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடே!
பார்ப்பனர்களின் கூட்டுச் சதியே இதன் பின்னணியாகும். இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கக் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடினார் என்றால் இதன் தன்மை எத்தகையது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
ஆயினும் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி தந்தை பெரியார் தலைமையில் நாடே பொங்கி எழுந்து மக்கள் மன்றத்தின் மூலம் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது. இதில் அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் அது என்ற பெருமைக்குரியதாகும்.
இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு தலை நிமிர்ந்து நிற்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அண்ணா, கலைஞர் தலைமையிலான திராவிட இயக்க ஆட்சியிலும் சரி, அதற்கு முன்னர் பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சியிலும் சரி சமூக நீதியைப் பொறுத்த வரை கொடிகட்டி ஆண்ட மாநிலம் தமிழ்நாடு.
கல்வி வள்ளல் என்றும், கர்ம வீரர் என்றும், தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட பெருமை காமராசர் அவர்களுக்கு உண்டு. காமராசரின் கல்விப் புரட்சி என்பது காலா காலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சில் நிறம் மாறாத பசுமையாக செழித்திருக்கும்.
காமராசரின் கல்விச் சிந்தனையும், செயல்பாடும் பார்ப்பனர்களைப் பதறச் செய்தது. 'கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை' என்று 'கல்கி'கள் கார்ட்டூன் போட்டதும் உண்டு.
காமராசரும் சளைக்கவில்லை. தகுதி - திறமை பேசியவர்களின் தோலை உரித்து உப்புக் கண்டம் போட்ட போராளியாகக் களத்தில் நின்றார்.
"பறையனைப் படிக்க வைத்தேன், டாக்டர் ஆனான்; அவன் ஊசி போட்டதால் எந்தப் பிள்ளைகள் செத்தது சொல்லு. இன்ஜினியர் ஆனான் - அவன் கட்டியதால் எந்தப் பாலம் இடிந்தது சொல்லு!
'தகுதி' 'திறமை' பேசுபவன் யார்? அவன் தகுதியும் தெரியும், அவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன் தகுதியும் திறமையும் எனக்குத் தெரியும். என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தையே அழித்து விடுவேன்! எச்சரிக்கை!" என்று சொன்னவர்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டையாக முழங்கிய மாமனிதர் காமராசர்.
அண்ணா அவர்கள் குறைந்த காலம் ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டப் பேரவையில் அறிவித்தாரே, அதற்குள் எல்லாமே அடக்கம்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் காலத்தில்தான் அதுவரை 41 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீடு 49 விழுக்கடாக உயர்த்தப்பட்டது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக ஜஸ்டீஸ் திரு. ஏ. வரதராசன் நியமனத்துக்குக் காரணமாக இருந்தவர். அதன் வழி உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் அவரேதான்.
பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்கள் முன்னேற்றத்திற்காக அலை அலையான திட்டங்கள், சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவற்றை எல்லாம் உள்ளடக்கித்தான். தந்தை பெரியார், காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர் வழிதான் இந்த அரசு என்று சட்டப் பேரவையில் தி.மு.க. அரசின் கொள்கையை ஆளுநர் வாயால் மொழியப்பட்டது. 'நீட்' எதிர்ப்பையும் ஆளுநர் பதிவு செய்தார். (அந்த ஆளுநரிடம்தான் அந்தக் கோப்பு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்)
திராவிட இயக்கம் வெல்லும் - நாளைய வரலாறு அதனைச் சொல்லும்!
No comments:
Post a Comment