பெரியாருக்கு நன்றி சொல்வது என்றால், எது எதற்கெல்லாம் நன்றி சொல்வது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

பெரியாருக்கு நன்றி சொல்வது என்றால், எது எதற்கெல்லாம் நன்றி சொல்வது?

பெண் விடுதலையை முன்னெடுத்துச் சென்றுள்ளார் தந்தை பெரியார்!

தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் - கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் ராதிகா சுதாகர் பெருமிதம்

சென்னை, ஜன.7 பெரியாருக்கு நன்றி சொல்வது என்றால், எது எதற்கெல்லாம் நன்றி சொல்வது? பெண் விடுதலையை முன்னெடுத்துச் சென்றுள்ளார் தந்தை பெரியார்! என்று மூத்த பத்திரிகையாளர் ராதிகா சுதாகர் அவர்கள் உரையாற்றினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்

கடந்த 23.12.2021 அன்று சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் ராதிகா சுதாகர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது  உரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்.

ஆசிரியர் வீரமணி அவர்களே, கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களே, பொருளாளர் வீ.குமரேசன் அவர் களே, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், முகநூலினால் அறி முகமான இளைய திராவிடர் கழகத்தினர் மதிவதனி, பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் அனைத்து நிர் வாகிகளே,

முதலில் திராவிடர் கழகத்திற்கு நன்றி!

அழைப்பிற்காக மட்டுமல்ல - தொடர்ந்து பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும், பார்ப்பனரல்லாதார் அரசியலுக்காக வும் இந்த இயக்கத்தை நம் அனைவருக்காக நடத்து வதற்காகவும், இயங்குவதற்காகவும் முதலில் திராவிடர் கழகத்திற்கு நன்றி!

பார்ப்பனரல்லாதார் சிந்தனையை ஆங்கிலத்தில் பதிந்ததற்காக நன்றி!

அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களே, பல்வேறு தளத்தில் பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்; என்றாலும்,  Tamil Brahmin emigration was driven by opportunity,not socialism or identity politics என்ற உங்கள் எதிர்வினை கட்டுரை என் போன்ற ஆங்கில ஊடகவியலாளர்களை மிகவும் ரசிக்க வைத்த ஒன்று.

பல காலமாக நாங்கள் கேட்டு வந்த ஒரு பிரச் சாரத்திற்கு சரியான பதில் கொடுத்த அந்த கட்டுரைக்காக நன்றி.

பார்ப்பனரல்லாதார், முற்போக்காளர்களை, ஜாதி எதிர்ப்பு மக்களைக் கவர்ந்த கட்டுரை என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். பார்ப்பனரல்லாதார் சிந்தனையை ஆங்கிலத்தில் பதிந்ததற்காக நன்றி!

இந்தியாவில் ஆங்கிலம் பார்ப்பனர்களுக்கான மொழி அல்ல என்பதை தற்காலத்தில் மீண்டும் பதிவு செய்ததற்கும் நன்றி!

தகவல் பெறும் சுவாரசியமான நேரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் உரையை வலையொளிகளிலும், நேரிலும் நான் கேட்டிருக்கிறேன். அவருடைய உரையைக் கேட்பது மகிழ்ச்சி மட்டுமல்ல, தகவல் பெறும் சுவாரசியமான நேரமாகவும் இருக்கும்.

இங்கே கூடியிருப்பது நாம் பெரியாரைப்பற்றி நினைவு கூர்வதற்கு.

பெரியாரைப்பற்றி நினைவுகூர வேண்டும் என்றால், முதலில் நன்றி கூறவேண்டும்.

இன்றைக்கு நடைபெறும் பிரச்சினைகளுக்கு வழி தேடலாம் என்று பெரியாரைப்பற்றி படித்தால், பெரும் பாலும் அவர் காலத்தில், இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாண்டிருப்பதாகவே நமக்குத் தகவல் கிடைக்கும்.

சில பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன; மாறுபாடுகளுடன்...

பெரியார் காலத்திலும், அதற்குப் பின்பும் எதுவுமே மாறவில்லை என்ற பொருளில் இதை நான் சொல்ல வில்லை. ஆனால், சில பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன; மாறுபாடுகளுடன் என்ற பொருளில் சொல்லுகிறேன்.

பிரச்சினைகள் என்று நான் குறிப்பிடுவது ஜாதி யைத்தான். ஜாதி இருக்கின்றது; மாறுபாடுகளுடன் இருக்கின்றது. ஜாதியம் வேறு வடிவம் பெறும் என்று பெரியாரே குறிப்பிட்டதுபோலத்தான்.

அதாவது நீங்கள் சட்டம் படித்து வரும்பொழுது, அவன் நீதிபதியாகவே இருப்பான் என்றார், அதுவும் நடக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனிய காலனிய ஆதிக்கத் திற்குத்தான் செல்வோம் என்றார்; அதுவும் நடக்கிறது.

ஜாதியத்திற்கு எதிரான போர் என்பது ஒரு நூறாண்டுகளுக்குள் முடியும் போர் அல்ல; அது ஒரு தொடர்ச்சியான போர்; பார்ப்பனீயம் முடியும்வரை அது ஒரு தொடர்ச்சியான போர்.

பெண் விடுதலையை முன்னெடுத்துச் சென்றுள்ளார் பெரியார்!

பெரியாரே ஒரு பெரும் போரை நடத்தி, முன்நகர்த்தி, செயல்பாடுகளை செயல்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். அங்கிருந்து நாம் செயல்படவேண்டிய தேவை இருக்கிறது.

பெரியார் செயல்படுத்திவிட்டுச் சென்றது என்று பார்க்கும்பொழுது, அதில் மிகவும் தேவையான கல்வி, வேலை வாய்ப்பில் பிரதிநிதித்துவம், குறிப்பாக பெண் கல்வி மற்றும் பெண் விடுதலையை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால், சமூக சீர்திருத்தம்தான் அனைத்தின் நோக்கம்.

எது எதற்கெல்லாம் நன்றி சொல்வது?

பெரியாருக்கு நன்றி சொல்வது என்றால், எது எதற்கெல்லாம் நன்றி சொல்வது?

நடத்திய அரசியல் போர்களுக்கா -

தமிழ் மொழி காத்ததற்கா -

சுயமரியாதை என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்ததற்கா-

இன்றைய தமிழ்நாடு நவீன மயமானதற்கு பெரியா ருக்கும், அவரின் வழி வந்த அரசியலுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும்.

மற்றபடி நான் இங்கே நிற்பதற்கும்கூட பெரியார் ஒரு காரணம்.

ஆனால், நாம் பார்க்கவேண்டிய இன்றைய சிக்கல் கள் எல்லாம் இல்லாமல் இல்லை.

என்னுடைய அனுபவத்தில் இருந்து - நான் ஊடகத் துறையில் இருந்தேன் - ஆகவே, அந்தத் துறையில் என்ன இருக்கிறது என்பதைப்பற்றியும் நான் பேசாமல் இருக்க முடியாது.

என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம்!

என்னைப்பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை உங்களிடம் கூறிக்கொள்கிறேன்.

90-களின் தொடக்கத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அன்றைக்கு ஜர்னலிசம் என்ற படிப்புதான் இருந்தது. நான் ஆங்கில இலக்கியம்தான் படித்தேன். என்னுடைய கல்லூரியில் ஜர்னலிசம் என்பது ஒரு ஆப்சனாக இருந்தது; அதைத் தேர்ந்தெடுக்காதவர்கள் ஆசிரியர் பணிக்குச் செல்வார்கள்.

ஜாதியம் என்ற சிக்கல்

வேறு பரிணாமங்களில் இருக்கின்றன

இன்றைக்கு இருப்பதுபோன்று அன்றைக்கு இன்டன்ஷிப் எல்லாம் கிடையாது. நான் படித்த கல்லூரியில், ஜர்னலிசத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் கிடையாது. அப்படிப்பட்ட கால கட்டத்தில் நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்தபொழுது, இரண்டே இரண்டு ஆங்கில நாளிதழ்கள்தான் இருந்தன.

நான் படிப்பை முடித்தவுடன், அந்த இரண்டு நாளி தழ்களின் கதவை எப்படி தட்டுவது என்று தெரியாது.

இன்றைக்கு சென்னையில் அய்ந்து ஆங்கில நாளி தழ்கள்  இருக்கின்றன. மாலையில் ஆறு நாளிதழ்கள் வருகின்றன.

இப்பொழுதும் அதே நிலைதான் நீடிக்கிறது. ஆரம்ப காலத்தில் நான் என்ன சிக்கல்களைச் சந்தித்தேனோ, அதே சிக்கல்கள்தான் நீடிக்கின்றன.

இதை நான் சொல்வதற்குக் காரணம், பெரியார் சண்டையிட்ட ஜாதியம் என்ற சிக்கல் வேறு பரி ணாமங்களில் இருக்கின்றது என்று சொல்வதற் காகத்தான்.

எல்லாவற்றையும் அலசுவதாகச் சொல்லும் ஊடகத்தை, யார் அலசுவது?

எல்லாவற்றையும் அலசுவதாகச் சொல்லும் ஊட கத்தை, யார் அலசுவது என்கின்ற கேள்வியில் நாம் இன்றைக்கு நின்று கொண்டிருக்கின்றோம்.

காரணம், பார்ப்பனரல்லாதார் அரசில், பார்ப்பனர் களைப் பெரிதும் அச்சுறுத்துவதாகவே அவர்கள் இன்றைக்கும் பார்க்கிறார்கள்.

எதை எழுதவேண்டும் -

எதை எழுதக் கூடாது -

யார் சொல்லவேண்டும் என்பதெல்லாம் இருக் கின்றது. இதுதான் ஊடகத்தின் ஜாதியம்.

தவிர, ஆங்கிலத்தை ஏதோ ஒரு மேல்ஜாதியினரின் மொழி போலவும் அவர்கள் நடத்துகிறார்கள்.

ஆங்கில மொழி இந்திய தேசியத்தின் மொழியா?

ஜாதியவாதிகளின் மொழியா?

என்ற கேள்வியை எழுப்பவேண்டி உள்ளது.

தமிழ் தெரியாதவர்களின் தலைமைப் பொறுப்பில் நடைபெறுகின்றது!

காரணம், அத்தனை ஆங்கில ஊடகங்களும் தமிழ் தெரியாதவர்களின் தலைமைப் பொறுப்பில் நடைபெறுகின்றது. இது இரண்டு நாளிதழ்களாக இருந்து, மூன்று நாளிதழாகத் தொடங்கப்பட்ட (டைம்ஸ் ஆஃப் இந்தியா) காலத்திலிருந்து ஆங்கிலம் என்பது இந்திய தேசிய மொழி போன்று தோற்றப்பாடு வருகிறது.

முன்பும் அந்தத் தோற்றப்பாடுதான் இருந்தது. இருந்தாலும், அதையே வலியுறுத்துவதாகவே அமைந்துவிட்டது புதிய நாளிதழ்களின் வரிகளும்.

அதன் அர்த்தம் தமிழ்நாட்டின் செய்திகள் ஒரு பொருட்டல்ல என்பது.

அதனாலேயே, தந்தி நிர்வாகத்தின் ஆங்கில நாளிதழும்கூட நிர்வாக ரீதியாக, அதையே ஒரு பேட்டனாக பின்பற்றுகிறார்கள் என்பதுதான் என் போன்றோருக்கு வருத்தமும், வேதனையும். இதைத்தான் தவறான பார்வை என்று என் போன் றோர் பார்க்கின்றோம்.

தமிழ், தமிழர் என்று பேசுவது தேவையற்றது அல்லது குற்றமானதாம்!

இது ஜாதிய பார்வை - ஆங்கிலத்தில் இந்தி கலந்து, தமிழ் மக்களுக்கு அளிப்பது எப்படி ஒரு ஜாதியப் பார்வையோ - அதுபோன்றது.

தமிழ், தமிழர் என்று பேசுவது தேவையற்றது அல்லது குற்றமானது என்று பார்க்கும் பார்வைதான், இங்கே ஆங்கில ஊடகத்தில் இருக்கிறது.

அந்தப் பார்வையை இன்னமும் அவர்கள் அதிகப்படுத்தப் பார்க்கிறார்கள்.

பெரியார் காலத்தில், அவர் சந்தித்த ஊடகங்களில் உள்ள பிரச்சினைகள் - கொஞ்சம் மாற்றங்களுடன் இன்னமும் தொடர்கின்றன என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும்.

கவனித்தவர்களுக்கு ஒன்று நன்றாகத் தெரியும் - நாம் பார்ப்பனர்களோடு இன்றும் ஓர் உரையாடலில் இல்லை. பார்ப்பனர் நம் தோளின்மீது கை போட்டுக் கொண்டு வரலாம்; ஏன், நம்மோடு சிக்கன் கடைக்குக்கூட வரலாம்; அவர்கள் சாப்பிடவில்லை என்றாலும், நம்மோடு வருவார்கள்; அல்லது சாப்பிடக் கூடச் செய்வார்கள். ஆனால், அதனால், ஜாதியம் இன்று இல்லை என்று பொருள் இல்லை.

முற்போக்காளராகத் தோற்றமளிக்கக்கூடிய பார்ப் பனர்கள்கூட சில சமயத்தில், கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மாறிவிடுவார்கள் என்று பொது சமூகத்தில் ஓர் எண்ணம் நிலவுகின்றது.

ஆனால், உண்மையில் பார்ப்போம் என்றால், உண் மையான உரையாடல் பார்ப்பனர்களுடன் நமக்கு இல்லை. அதில், முற்போக்குப் பார்ப்பனர் - பிற்போக்குப் பார்ப்பனர் என்பதெல்லாம் இல்லை.

பார்ப்பனர்களை எதிர்ப்பது நமது வேலையல்ல!

இதைப்பற்றி யார் சிந்திக்கவேண்டும் என்றால், பார்ப் பனர்கள்தான் சிந்திக்கவேண்டும். அவர்களுக்குத்தான் நான் சொல்கிறேன். அவர்களை எதிர்ப்பது நமது வேலையல்ல.

முற்போக்குப் பார்ப்பனர்களிடம் பேசினால்கூட, என்ன சொல்வார்கள், ‘‘தீர்வு உங்களிடம்தான் இருக் கிறது; முதலில் ஜாதீயத்தை விட்டொழியுங்கள்’’ என்றால், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை.

அவர்கள் விரும்புவது ஒற்றை வழியைத்தான் விரும்புகிறார்கள். தவிர டயலாக்கை விரும்புவது கிடையாது. அதுதான் இன்றைக்கு மாறிய ஜாதியம் என்று  நாம் அவர்களுக்கே எடுத்துக் கூறவேண்டிய நிலை உள்ளது.

சங்கிகளைப் பார்ப்பனர்கள்தான் தோற்றுவித்தார்கள்

நமக்குத் தெரியும், சங்கிகள் என்போரை யார் தோற்று வித்தார்கள் - பார்ப்பனர்கள்தான் தோற்றுவித்தார்கள்.

சங்கி என்றால், பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள்தான்.

சங்கிகளின் பிரச்சாரம் என்பது, பொது மய்ய நீரோட்ட ஊடகத்தின்மூலம் இன்றும் நடைபெறுகிறது. சில பிரச்சினைகளைப் பேசாமல் விடுவதும்கூட அதில் அடங்கும்.

இதனால் நமக்கு என்ன சிக்கல் என்றால், இந்தப் பிரச்சாரங்கள் எங்கே போகின்றன? என்பதுதான்.

நம் எல்லோருக்கும் தெரியும் - அடிப்படையில் எழுத்து என்பது ஓர் அரசியல். இன்றைக்கு நாம் நினைவுகூரும் பெரியார் என்ற எழுத்தாளர், பேச்சாளர், ஊடகவியலாளர் என்பவரே அரசியல்தான்.

பார்ப்பனரல்லாதார் என்ற அரசியலுடன், அறிதலுடன் பொது ஊடக வெளி என்று நாம் நம்பும் வெளிகளில் உய்த்திருப்பது ஒரு பெரிய சவால் என்பது, எது உணர்த்தாவிட்டாலும், தமிழ் நியூஸ் 18 விவகாரம் சமீபத்தில் நமக்கு உணர்த்தியிருக்கும்.

ஊடகத்தில் ஜாதீயம்

ஊடகத்தில் ஜாதியம் என்பது 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகான குறியீடு என்று குறிக்கக்கூடிய அளவில், தமிழ் நியூஸ் 18 விவகாரம் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.

தமிழ் நியூஸ் 18 நிறுவனம் ஊடகவியலாளரை நடத்திய விதம், விசாரணையில்லாமல் செயல்பட்டது என்பவை நம் கண் முன் நடந்தவை. அது டிப் ஆஃப் அய்ஸ்பெர்க் மாதிரி.

அதாவது வெளியே தெரிவது பனிமலை மட்டுமே - உள்ளே இதுபோன்று கட்டமைப்பை - பார்ப்பனீயத்தின் பொய்ப் புகாரை நம்பும், தமிழ்நாட்டைப்பற்றி தெரியாத நிர்வாகிகள் என்பது மிக இயல்பான ஒன்றாக இருக்கிறது. இதுவும் ஓர் ஆபத்தும் கூட.

இன்று இருக்கும் அய்ந்து ஆங்கில ஊடகங்களில், நான்கு ஊடகங்களில் வெளியில் இருந்து வந்தவர்கள்தான் உள்ளார்கள். ஏனென்றால், நான் மற்ற ஊடகவியலாளர்களிடம் என்ன நடக்கிறது என்பதைப்பற்றிப் பேசுவேன்.

சமூகநீதிப் பார்வை என்றால் என்ன என்பதைப்பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்

அந்த நான்கிலும் மேல்ஜாதியினர்தான் உள் ளனர். வெளி மாநிலத்திலிருந்து வருவதுபற்றிகூட கவலையில்லை. ஆனால், அவர்களின் பார்வை தவறு என்பதைத்தான் குறையாக சொல்கிறேன்.

சமூகநீதிப் பார்வை என்றால் என்ன என்ப தைப்பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதை நினைத்தால்தான் நமக்கு வேதனையாக இருக்கிறது.

ஆங்கில ஊடகம் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவர்கள் சொல்லி நடத்துவது என்பது தவறு என்று நான் சொல்கிறேன்.

தொடர்ந்து இந்த  ஊடகங்களில் நடப்பவை களையும், அங்கே எழுதப்பட்டு வருபவைகளையும் நோக்கினால், நமக்குப் பெரியார் சந்தித்த சவால் களையும், அவரின் செயல்பாடுகளையும் மீண்டும் நினைவூட்டுகின்றன. அதிலேயும் பெரியாரைப் பற்றியும் வியக்க வைக்கின்றன.

ஒன்றிய அரசாங்கத்தில் உட்கார்ந்திருப்பது சனாதன விருப்பு கொண்ட கட்சி

இன்று, ஒன்றியத்தில் நடக்கும் ஆட்சியைப் பார்க்கும் பொழுது, உண்மையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின் றனவா? அல்லது புரட்சிதான் எது? பிற்போக்கு என்று தெற்காசிய துணைக் கண்ட வரலாற்றில் இருந்த இந்து மதம்தான் புரட்சி என்ற அதே புரட்சியில் சிக்கிக்கொண் டுள்ளோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

காரணம், ஒன்றிய அரசாங்கத்தில் உட்கார்ந்திருப்பது சனாதன விருப்புக் கொண்ட கட்சியான பா...

(தொடரும்)

No comments:

Post a Comment