கோவா சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.உத்தரப் பிரதசேம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெறுகின்றன. வரும் மார்ச் 10ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இதில் நாட்டிலேயே சிறிய மாநிலமான கோவாவில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடை பெறுகிறது.
கோவாவில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. இருப்பினும், அங்கு பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் உண்மையான போட்டி!
இந்நிலையில், கோவா தேர்தலில் மொத்தம் 5 தம்பதிகள் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றனர். நாட்டிலேயே சிறிய மாநிலமான கோவா மொத்தம் 40 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்டது. இதில் தான் இப்போது 5 தம்பதிகள் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் 10 பேரும் தேர்தலில் வெற்றிபெற்றால் இவர்கள் மட்டும் கோவா சட்டசபையில் 25%ஆக இருப்பார்கள். பா.ஜ.க. சார்பில் 4 தம்பதிகளும் , திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஒரு தம்பதியும் தேர்தலில் களமிறங்குகின்றனர்.
கணவர் பா.ஜ.க. சார்பிலும், மனைவி சுயேச்சை யாகவும் களமிறங்குகின்றனர்.
தற்போது ஆளும் பாஜக அரசில் சுகாதார அமைச்சராக உள்ள விஸ்வஜித் ரானே அம்மாநிலத்தின் வால்போய் தொகுதியில் இருந்தும், அவரது மனைவி தேவியா என்பவர் போரியம் தொகுதியில் இருந்தும் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.
இந்த போரியம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேவியாவின் மாமனார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.அதேபோல பனாஜி சட்டமன்றத் தொகுதியில் அடனாசியோ மான்செராட்டேவும், தலீகாவ் தொகுதியில் இருந்து அவரது மனைவி ஜெனிஃபரும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தனர். கடந்த 2019இல் இந்த தம்பதி உட்பட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படியே காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல கோவா துணை முதலமைச்சர் சந்திரகாந்த் காவ்லேகர் மற்றும் அவரது மனைவி சாவித்ரி காவ்லேகர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இதில் சந்திரகாந்த் காவ்லேகர் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார்.
அவரது மனைவிக்கு பாஜக வாய்ப்பளிக்க மறுத்த நிலையில், அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இருவரும் கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த மைக்கேல் லோபோ மற்றும் அவரது மனைவி டெலிலா ஆகியோரும் இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர். பாஜக வாரிசு அரசியலில் மட்டுமல்ல ஜோடி அரசியலிலும் இறங்கியுள்ளது.
அரசியலைப் பற்றியும் அதன் போக்குகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் கூறப்படுவது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?
அரசியலுக்குக் கொள்கைகள் தேவையில்லை. பதவிதான் முதலும் முடிவும் என்று ஆன நிலையில் இது போன்ற புழுதிக் கூத்துகள் தான் அநாகரிகமாக, நிர்வாணமாக கேவல ஆட்டம் போடும்.
ஒரு கட்சியில் இருந்து அதில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் கட்சி மாறும் கேவலம் சட்டப்படி தடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்சி மாறினால் குற்றம் இல்லை என்பது எல்லாம் மோசடிக்குத் தங்கப் பூண் போடுவதாகும்.
இதற்கோர் முடிவு தேவை!
No comments:
Post a Comment