டில்லியில் கட்டப்படவுள்ள 'சென்ட்ரல் விஸ்டா' என்னும் புதிய நாடாளுமன்ற கட்டடச் செலவு 29% உயர்ந்து மொத்தம் ரூ.1,260 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.
டில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதாகும். தற்போது இந்த கட்டடம் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கு உகந்ததாக இல்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கான அலுவலகங்கள் போன்றவற்றுக்கு இடவசதி இல்லை எனவும் கூறி இதையொட்டி புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
'சென்ட்ரல் விஸ்டா' என்னும் இந்த கட்டடப் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டப் பட்டுத் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தைச் செயல் படுத்தும் பணிகள் டாடா பிராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பல திட்டங்களுக்குக் கரோனா பரவல் காரணமாகத் தடை விதிக்கப்பட்ட போதிலும் இதற்குத் தடை விதிக்கப்படவில்லை. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானம் என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளது. இந்த கட்டடம் வரும் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்படும் எனக் கூறப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் 40% பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.
இந்த திட்டம் தொடங்கும் போது இதற்கான செலவு ரூ.977 கோடி என மதிப்பிடப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிறது. இந் நிலையில் அரசு தரப்பில் இந்த கட்டடச் செலவுகள் மேலும் 29% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.282 கோடி அதிகரித்து மொத்த செலவு ரூ.1260 கோடியைத் தொடும் என கூறப்படுகிறது.
மோடி தான் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இனி வருங்காலங்களில் இந்தியாமுழுவதும் தனது பெயரை மட்டுமே கூறவேண்டும் என்ற எண்ணத்தில் பண மதிப்பிழப்பு, அரசின் திட்டங்களில் பெயரை மாற்றுதல், திட்டக் குழுவை மாற்றுதல் உள்ளிட்ட அனைத்தையும் செய்து வந்துள்ளார்.
அதே போல் நேரு அருங்காட்சியகம், காந்தியின் அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் என அனைத்தையுமே இழுத்து மூடும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்துக் கேள்வி கேட்டால் நவீனப்படுத்தப் போகிறோம் என்று பதில் கூறுகிறார்.
விடுதலைப் போராட்டம், இரண்டாம் உலகப் போர், பாகிஸ்தான் - சீனா உடனான போர் போன்றவற்றில் இறந்தவர்களின் நினைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பு புதுடில்லி இந்தியா கேட்டில் ஜோதி ஏற்றப்பட்டது.
அந்த ஜோதிக்கு முன்பு தான் வணங்குவதா என்ற மன நிலையில், அந்த ஜோதியையே அணைத்து விட்டு, தான் கட்டிய போர் நினைவுச் சின்னத்தில் புதிய ஜோதியை ஏற்றி வைத்துள்ளார்.
தற்போது புதிய நாடாளுமன்றக் கட்டடம்... கரோனா முதல் அலையின் போது நாடே பொருளாதார சிக்கலில் சிக்கி சீரழிந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் குறித்து திட்டமிட்டு, இரண்டாம் அலையின் உச்சத்தில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்துகொண்டு இருக்கும் போது கட்டடம் கட்டும் பணியை மேற்பார்வையிட்டார்.
அந்தக் கட்டடத்தின் செலவுதான் தற்போது மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து எல்லாம் பிரதமர் மோடி கவலைப்படுவ தாகத் தெரியவில்லை. அவரிடம் இனி "இந்தியா என்றால் மோடி, மோடி என்றால் இந்தியா" என்று இருக்க வேண்டும் என்ற நினைப்புத்தான் மேலோங்கி உள்ளது.
இந்தியா இதுவரை கண்டிராத பிரதமர் இவர்தான். தாம்அணியும் உடையின் மதிப்புரூ.10 லட்சம் என்பதில் பெருமை காணக் கூடிய பிரதமர்.
ஒன்றிய அமைச்சரவை என்பது பெயர் அளவில்தான். யார் எந்தத் துறை அமைச்சர் என்று கூறிடப் பத்திரிகை யாளர்களே திணறும் நிலை. எல்லாம் அவர்தான்; அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாதான். இரண்டு 'அ'-கள் கையில் பொருளாதாரம். ஒருவர் அதானி, இன்னொருவர் அம்பானி.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள 'சோசலிஸ்ட்' என்ற சொல் மோடியைப் பார்த்துச் சிரிக்கிறது - மோடியோ அந்தச் சொல்லைப் பார்த்துச் சிரிக்கிறார்.
நாட்டின் பொருளாதாரமோ சிரிப்பாய்ச் சிரிக்கிறது.
No comments:
Post a Comment