புதுடில்லி: குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 26, 2022

புதுடில்லி: குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிப்பு!

உயிர்த் தியாகம் செய்துகொண்டவர்களின் வரலாற்றை திரிபுவாதம் செய்கிறார்கள்

நிபுணர்கள் என்பவர்களுக்கு வரலாறு தெரியவேண்டாமா?

தமிழ்நாடு சுயமரியாதை மண் - பெரியார் மண்சமூகநீதி மண் - தன்மானத்திற்காகப் போராடிய மண் 

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, ஜன.26 குடியரசு நாள் ஊர்அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிப்பு! தங்களைத் தாங்களே  உயிர்த் தியாகம் செய்து கொண்டவர்களின் வரலாற்றை திரிபுவாதம் செய்கிறார்கள். நிபுணர்கள் என்பவர் களுக்கு வரலாறு தெரியவேண்டாமா? தமிழ்நாடு சுயமரியாதை மண்- பெரியார் மண் - சமூகநீதி மண் - தன்மானத்திற்காகப் போராடிய மண் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஒன்றிய அரசின் சார்பில் புதுடில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு உள்பட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், இன்று (26.1.2022) சென்னை பெரியார் திடல் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிவில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டியளித்தார்.

அவ்விவரம் வருமாறு:

தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுப்பு

இன்றைய குடியரசு நாள் கொண்டாட்டத்தில், அதுவும் 75 ஆம் ஆண்டு சுதந்திர நாள் பவள விழாவினையொட்டி73 ஆம் ஆண்டு குடியரசு நாள் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில், டில்லி தலைநகரில், அனைத்து மாநிலங்களும் இணைந்த அணிவகுப்புகள் அனுமதிக்கப்படும்பொழுது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊர்திகள் அணிவகுப்புக்கு, அதுவும் தியாகச் செம்மல் களையெல்லாம் நினைவூட்டக் கூடிய வகையில், வேலு நாச்சியார் - வெள்ளைக்கார ஆட்சியை எதிர்த்து மிகப்பெரிய அளவிற்குப் போரிட்ட வீரமங்கை, அதுபோலவே, இரட்டை ஆயுள் தண்டனையைப் பெற்று, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ..சிதம்பரனார் - அவருடைய 150 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற இந்த ஆண்டிலே, அவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

அதேபோல, தேசியக்கவி பாரதியாரைப்பற்றிக்கூட அவர்களுக்குக் கவலையில்லை.

தங்களைத் தாங்களே உயிர்த் தியாகம் செய்துகொண்டவர்கள்!

மருது சகோதரர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று சிவகங்கைச் சீமையில், அந்தக் காலத்தில், வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள். அதற்காக தங்களைத் தாங்களே உயிர்த் தியாகம் செய்துகொண்டவர்கள். இந்நாட்டின் தியாக வரலாற்றில் என்றைக்கும் நிலைக்கக் கூடிய வர்கள்; அவர்கள் இந்த நாட்டையோ, சமுதாயத் தையோ எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்துப் பதவிக்கு வந்தவர்கள் அல்ல.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மேற்சொன்னவர் களின் உருவப் படங்களை, அவர்களின் தியாகத்தை, வருகின்ற தலைமுறையினருக்கு, இந்தியா முழுவதும் அவர்களின் வரலாறு தெரியவேண்டும் என்று நினைத்து, தமிழ்நாடு அரசின் சார்பில் புதுடில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பில் அணி வகுக்க அனுமதி கேட்ட நிலையில், மூன்று முறை மறுதலிக்கப்பட்டது - மறுப்பு சொல்லப்பட்டது.

நிபுணர்கள் என்பவர்களுக்கு வரலாறு தெரிய வேண்டாமா?

அந்த ஊர்தியில் உள்ளவர்களின் தியாக வர லாற்றை விளக்கியும் அதற்குரிய குழுவினரிடம் சொல்லப்பட்டது. அக்குழுவினர் அதைப் பொருட் படுத்தவில்லை.  இந்நிலையில், நிபுணர்கள் குழுதான் அதை நிர்ணயிக்கிறது என்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், பிரதமரின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்திற்குப் பதில் எழுதுகிறார். நிபுணர்கள் என்பவர்களுக்கு வரலாறு தெரிய வேண்டாமா?

கப்பலோட்டிய தமிழனைப் பார்த்து, செக்கிழுத்த தியாகச் செம்மல் சிதம்பரனாரைப் பார்த்து, ''அவர் யார்? வெறும் வியாபாரிதானே? என்று கேட்கிறார்கள்.

வீரம் செறிந்த வேலு நாச்சியார், அந்த அம்மையார் ஜான்சிராணி போல  இல்லை - ஆகவே தகுதியில்லை என்று சொல்கிறார்கள்.

இதைவிட நமக்குப் பெரிய அவமானம், தேசிய அவமானம் வேறு இருக்க முடியாது.

வரலாற்றை திரிபுவாதம் செய்கிறார்கள்

எனவேதான், முழுக்க முழுக்க பா... ஆளுகின்ற மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வரலாற்றை திரிபுவாதம் செய்யக்கூடியவர்கள் - இதிலும் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்திற்கு அவர்கள் மரியாதை கொடுத்திருக்கவேண்டும். அதை அவர்கள் அலட்சியப்படுத்தி இருக்கிறார்கள்.

எனவேதான், இது சுயமரியாதை மண் - பெரியார் மண் - சமூகநீதி மண் - தன்மானத்திற்காகப் போராடிய மண்.

அதே ..சிதம்பரனார், கடைசியிலே சமூகநீதிக் காகப் போராடினார். அப்படிப்பட்டவர்களையெல்லாம் புறக்கணிப்பது என்பது, வரலாற்றை திருப்புவது என்று அர்த்தம்.

'இன்க்ளூசிவ் குரோத்' என்று ஆங்கிலத்தில் பிரமாதமாகப் பேசுகிறார்கள். 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்று ஹிந்தியில் சொல்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் பொருள் இதுதானா?

எங்கள் ரத்தம் கொதிக்கிறது!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தியாகம் செய்தவர் களையெல்லாம் புறக்கணித்துவிட்டு - புறக்கணித்ததும் அல்லாமல், வெந்தப் புண்ணிலே வேலை விட்டு ஆட்டுவதைப்போல, ''அவர் யார்? வியாபாரிதானே? என்று ..சி.யைப்பற்றிக் கேட்டால், எங்கள் ரத்தம் கொதிக்கிறது.

எனவேதான், இந்த அமைதியான ஆர்ப்பாட்டத் தின்மூலமாக தமிழ்நாடு தன்னுடைய வருத்தத்தை மட்டுமல்ல, கண்டனத்தை மட்டுமல்ல, அதனுடைய சுயமரியாதை உணர்வையும் வெளிப்படுத்துகிறது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தின் மூலமாக, அமைதியான போராட்டத்தின்மூலமாக  வலியுறுத்தி யுள்ளோம்.

இதுபோலவே, மேற்கு வங்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறுக்கப்பட்டு இருக்கிறார்.

அதுபோலவே, கேரளாவில், சமூகநீதிக்காகவே பாடுபட்ட அரும்பெரும் சமூகநீதித் தலைவரான நாராயண குரு அவர்களின் அலங்கார ஊர்தியும் அனுமதிக்கப்படவில்லை.

அவர்களுக்கு நாராயண குருவைப்பற்றித் தெரிய வில்லை; ஆனால், அதேநேரத்தில், வித்தை காட்டு கிறார்கள், நேதாஜிக்கு நாங்கள் சிலை திறப்போம் என்று.

எனவே இரட்டை வேடம் - இரட்டைப் போக்கு.

இந்தியா ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என்று சொல்கிறார்கள்.

நாங்கள் ஓர் எளிய கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு இதுவரை பதில் இல்லை.

ஒரே ஜாதி என்று ஏன்  நீங்கள் அறிவிக்கக் கூடாது?

என்ன கேள்வி என்றால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்று சொல்லுகின்ற நீங்கள், ஒரே ஜாதி என்று ஏன்  அறிவிக்கக் கூடாது?

மக்களையெல்லாம் ஏன் ஒன்றுபடுத்தக் கூடாது.

'இன்க்ளூசிவ் குரோத்' என்பது என்ன?

மக்களைப் பிரிப்பதா?

மாநிலங்களை வெறுப்பதா?

மாநில உரிமைகளையெல்லாம் பறிப்பதா?

இந்தக் கேள்விகளுக்காகத்தான் இந்தப் போராட்டம் - இப்போராட்டம் இங்கே மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டு கட்சித் தோழர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை இயக்கத்தினரும் கலந்துகொண்டு, ஆங்காங்கே அவரவர் அலுவலக வாயிலில் நடத்துகின்றனர்.

இந்த உணர்வை சுவரெழுத்துகளாகப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு  மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது

எனவேதான், மாநில உரிமைகளை நாளும் பறிக்கின்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு  மீனவர்களின் வாழ்வு ரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம், தமிழ்நாடு மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் தாக்குகின்றனர்; இன்னொரு பக்கம் கடற்கொள்ளையர்கள் தாக்குகின்றனர். நம்முடைய மீனவர்களை 'அனாதைகளாக' ஆக்குகிறார்கள்.

''வெந்த புண்ணில் வேல்'' என்று சொல்வதுபோல, ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள்.

இந்த முள் படுக்கையிலேதான், சாதனைகளை, சிகரச் சாதனைகளாக செய்கிறார் நம்முடைய முதல மைச்சர் அவர்கள்.

ஆகவேதான், இந்த உணர்வுகளை, மக்கள் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்லுகின்றன என்று காட்டுவதற்காகத்தான் இந்தப் போராட்டம்.

அறப்போராட்டத்தில் பங்கேற்ற அத்துணை தோழர்களுக்கும் நன்றி!

எனவே, இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்ற அத்துணை தோழர்களுக்கும் நன்றி!

இது முடிவல்ல -

உணர்வின் தொடக்கம் -

எழுச்சியின் தொடக்கம் -

முழக்கத்தின் தொடக்கம் -

சுயமரியாதையின் தொடக்கமாகும்.

செய்தியாளர்: ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது, தமிழ்நாடு நான்கு முறை நிராகரிக்கப் பட்டு இருக்கிறது; அப்பொழுது இதைப்பற்றி பெரிதாகப் பேசவில்லை. ஆனால், இப்பொழுது இது அரசியல் ஆக்கப்படுகிறது என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: இதுபோன்ற காரணங்களால்தானே, காங்கிரஸ் பதவியை இழந்திருக்கிறது; 60 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்யாத சாதனையை, நான் ஆறு ஆண்டுகளில் செய்வேன் என்று சொன் னாரே, மோடி - அதற்குப் பதில் இதுதானா? இதுதான் எங்களுடைய கேள்வி.

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்புவன்மையான கண்டனத்திற்குரியது

செய்தியாளர்: சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில், இன்று காலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப் பெறும்பொழுது, அங்கிருக்கக்கூடிய உயரதிகாரிகள் எல்லாம் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்; தமிழ்நாட்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு, இன்றைய நாளிலேயே நடைபெற்று இருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: இந்தத் தகவல் எங்களுக்கு இப்பொழுதுதான் உங்கள்மூலம் தெரிய வந்திருக் கிறது. அப்படி இருந்தால் அது வன்மையான கண்டனத் திற்குரியது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் என்பது தமிழ்நாடு அரசால் சட்டப்படி அறிவிக்கப்பட்டு இருக்கின்ற ஒன்றாகும்.

அந்தப் பாடல் பாடப்படும்பொழுது, எழுந்து நிற்கவேண்டும். யாராவது எழுந்து நிற்காவிட்டால், காவல்துறை அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து, வழக்குப் போடவேண்டும்.

வேதனையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது

செய்தியாளர்: எழுந்து நிற்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போடவில்லை என்று அவர்கள் பதில் சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: அவர்களுடைய அறியாமையும் சேர்ந்து இதில் தெரிகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது எழுந்து நிற்கவேண்டும் என்று.

நீதிமன்றம் அப்படி சொன்ன பிறகு வந்ததுதான் தமிழ்நாடு அரசு போட்ட ஆணை - இந்த அறிவுகூட இல்லாதவர்கள் அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்பது வேதனையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.

No comments:

Post a Comment