துணிப்பை தைத்து வருமானம் ஈட்டும் கவுரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

துணிப்பை தைத்து வருமானம் ஈட்டும் கவுரி

ஆறு ஆண்டுகளுக்கு முன்பேமஞ்சள் பைஇயக்கத்தைத் தொடங்கியவர் மதுரையைச் சேர்ந்த கவுரி. இவரும் இவருடைய கணவர் கிருஷ்ணனும் சேர்ந்து இதைச் செயல்படுத்திவருகிறார்கள்.

கவுரி, கிருஷ்ணன் இருவரும் சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர்கள். 2014இல் இவர்களுடைய மகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சில நேரம் மூச்சிரைப்பு அதிகமானது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது நெகிழியை எரிப்பதால் உருவாகும் நச்சு காற்றில் கலப்பது தெரியவந்தது. காற்று மாசு குழந்தைகளை மட்டுமல்லாமல், பெரியோரையும் பாலூட்டும் தாய்மார்களையும் அதிகமாகப் பாதிப்பதாகத் தெரிந்துகொண்டார்கள். அதன் பின் நெகிழியின் சீர்கேடுகள் குறித்த தேடலில் இறங்கினார்கள்.

அதிக நெகிழி பயன்பாட்டால் காற்று மட்டுமல்ல, மண்ணும் மலடாகிறது; அவை மக்குவதும் இல்லை என்பது புரிய, முதல்கட்டமாக நெகிழிப் பை பயன்பாட்டைக் குறைப்பது என முடிவெடுத்தனர். அவற்றுக்கு மாற்றாகத் துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க நினைத்தவர்கள், சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றஅய்ந்திணை விழா'வில் நெகிழிப் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பிறகு முதல்கட்டமாக 200 துணிப்பைகளைத் தைத்து வாங்கி விற்பனை செய்தனர்.

இதற்காகவே என் வேலையை விட்டுவிட்டேன். 2014 இறுதியில் இந்தத் துணிப்பை திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினோம். மதுரையில் துணிப்பை உற்பத்தியாளர்கள் அதிகம் என்பதால் சென்னையிலிருந்து மதுரைக்குக் குடியேறினோம். துணிப்பைகள் நீடித்து உழைக்கும், அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், எல்லாவற்றுக்கும் மேலாக மக்கும் தன்மை கொண்டவை என்பதைத்தான் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்என்று சொல்லும் கவுரி, ‘யெல்லோ பேக்’ (theyellowbag.org)  அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.

பெண்களுக்கு வேலை வாய்ப்பு

ஆரம்பத்தில் மற்றவர்களிடம் துணிப்பைகளைத் தைத்து வாங்கியவர்கள், பிறகு தைப்பதற்கு ஆள் வைத்துத் தொழிலைத் தொடர்ந்தனர்.

நான் வேலையை விட்டதால் துணிப்பை விற்பனையையே என் வருமானத்துக்கான தொழிலாகவும் மாற்ற நினைத்தேன். சில பெண்களுக்காவது நிலையான வருமானத்தைத் தருவதாக இந்தத் தொழில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். வீட்டில் சிறிய அளவில் தொடங்கிய தொழில், செல்லமுத்து அறக்கட்டளையின் அலுவலகக் கட்டடத்தில் சில காலம் இயங்கியது. பிறகு இடப்பற்றாக்குறையால் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் தனி அலுவலகம் அமைத்துவிட்டோம்என்கிறார் கவுரி. இங்கே முதலில் இரண்டு தையல் இயந்திரங்களை வைத்து வேலையைத் தொடங்கினர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தினர். தைக்கத் தெரியாத பெண் களுக்குத் தையல் பயிற்சியளித்து வேலையைத் தொடங்கினர். இப்போது இவர்களிடம் 12 பெண்கள் முழுநேரமாகப் பணிபுரிகிறார்கள்.

தொடக்கத்தில் மதுரையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள ஊர்களுக்குச் சென்று துணிப்பை தைக்க ஆர்டர் கொடுத்தோம். சிலர் பிளாஸ்டிக் நரம்பு களைப் பயன்படுத்தித் தைத்தனர். ஆனால், நூலில் தைப்பதுதான் எங்கள் நோக்கம். மற்றவர்களிடம் ஆர்டர் கொடுப்பதால் நேரமும் தரமும் பெரும் சவாலாக இருந்தன. அதனால், நாமே தைக்கலாம் என முடிவெடுத்தோம். நாங்கள் தொடங்கும் தொழில், பெண்களுக்கு நீடித்த, நிலைத்த வருமானத்தைத் தருவதாக அமைந்தால் இரட்டிப்பு நன்மை என்பதால் பெண்களையே வேலைக்கு அமர்த்தினோம். இது திட்டவட்டமான அலுவலகம் போல இருக்காது. எங்களிடம் பணி புரிகிறவர்கள், குடும்பம் போலத்தான் உணர்வார்கள்என்று சொல்கிறார் கவுரி.

 

No comments:

Post a Comment