சென்னை, ஜன.26 ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது அதிகார அத்து மீறலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித் துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம், ரூ.4,600 கோடிமதிப்பில் 2ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்த உடனே இத்திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என கருநாடக அரசு எதிர்ப்பு
தெரிவித்திருந்தது. கருநாடக அரசின் கருத்துக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் புளோரைடு அளவுக்கு மீறிய அடர்த்தியாக இருப்பது கண்டறியப்பட்டது. பல் உதிர்தல், எலும்புகள் பலவீனமாதல், சிறுநீரகப் பாதிப்புகள் என பல பாதிப்புகளுக்கு ஆளாகி வந்த மக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கி சுமார் 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
மக்கள் நல்வாழ்வையும் சுகாதாரத்திலும் அக்கறை காட்டிய, இன்றைய முதலமைச்சர், துணை முதலமைச்சராக உள்ளாட்சி துறை நிர்வாகத்தில் இருந்து போது, அப்போதைய முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர் 2008 பிப்ரவரி 26ஆம் தேதி, அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
ஜப்பான் நாட்டு கூட்டுறவு வங்கி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது முற்றிலும் தமிழ்நாடு எல்லைக்குள் அமைந்திருப்பது பில்லிகுண்டுலுக்கு கீழ் பகுதியில் தமிழ்நாட்டிற்கு சட்டப்பூர்வ உரிமையுள்ள தண்ணீரை ஆதாரமாகக் கொண்டது. இதில் கருநாடக அரசு கருத்துச் சொல்வதற்கு எந்தவித உரிமையும் இல்லை.
மேகதாது அணை கட்டும் பிரச்சினையை திசைதிருப்ப கருநாடக முதலமைச்சர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது அதிகார அத்துமீறலாகும்.
தமிழ்நாடு மக்களின் ஆத்திரத்தை தூண்டும் மலிவான செயலாகும். கருநாடக முதலமைச்சரின் வரம்பு மீறிய செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
குறிப்பிட்ட கால வரம்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment