பிரான்சின் புரட்சிக்கு வித்திட்ட அறிஞர் வால்டேர் “நான் என்ன நினைக்கிறேனோ அதைச் சொல்வதுதான் எனது தொழில்” என்று கூறினார். மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற சமூகத்தை அவர் மூர்க் கத்தனமாக எதிர்த்தார். “நான் தாக்கப்படும் போதெல்லாம் அதை ஒரு ‘பிசாசாக’ நின்று எதிர்த்தேன். முடிவில் நல்ல ஒரு ‘பிசாசாக’வே என் சிரிப்பை முடித்தேன்” என்று கூறி தன் மூச்சை நிறுத்திய அந்த வீரரின் நடு கல்லிற்கு (Tomb Stone) “இங்கே படுத்திருக்கிறார் வால்டேர் ((Here lies Voltaire)” என்ற மூன்று வார்த்தைகள் மட்டும் தேவைப்பட்டன. ஒரு மாபெரும் இயக்க சக்தியை மக்களுக்கு அளித்து மக்களை சுதந்திரத்திற்கு தயார் படுத்திய அந்த மேதையின் மரணம் பிரான்சின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக மாறிற்று.
அதே நிலையைத்தான் ஈரோட்டு பூகம்பம் தந்தை பெரியார் இந்த தமிழ் நாட்டிற்கு ஆற்றிய அயராத தொண்டும் தமிழ்நாட்டையே மாற்றிக் காட்டியது. ஆம்! தமிழ்நாடு தந்த இந்த அதிசய மனிதர் ஒரு பிறவிப் போராளி. அவர் ஒரு தனி மனிதர் அல்ல. அவரே ஒரு நிறுவனம் (Institution). “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்று பறைசாற்றிய வள்ளுவப் பெருந்தகையின் உரிமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற உன்னதக்கோட்பாட்டுக்கு உயிர் கொடுத்து அதை செயல்படுத்திக் காட்டிய ஓர் ஒப்பற்றத் தலைவர் தந்தை பெரியார். நால்வகை ஜாதியை இந்த நாட்டினில் நாட்டி மக்களை என்றுமே ஒன்று சேர முடியாமல் உருக்குலைத்த வேதம் - புராணம் - இதிகாசம் ஆகியவை அவிழ்த்து விட்ட கண்மூடித்தனங்களையும், குருட்டு சிந்தனைகளையும், பொய் மூட்டைகளை யும் ஒழித்துக்கட்டி ஜாதியும், புரோகித ஆட்சியும் ஆதிக்கம் செலுத்திய இருண்ட காலத்தை தனது பகுத்தறிவு தீப்பந்தத்தால் எரித்தவர் தந்தை பெரியார். அரசியல்வாதி யாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் தன் பரிமாணங்களை பிரதிபலித்து தான் கொண்ட கொள்கையில் எந்தவித சமர சமும் எப்போதும் செய்துகொள்ளாத ஒரு சாதனைப் போராளி அவர்.
மனிதன் ஒரு வரலாற்று அடிமை என்றார் லியோ டால்ஸ்டாய். ஆனால் பெரியார் வரலாற்றைத் தனது அடிமை யாக்கி தமிழ்நாட்டு மறுமலர்ச்சியின் விடி வெள்ளியாக என்றும் திகழ்பவர். ஆதிக்கப் பரம்பரையினரின் வேரை அறுத்து ஜாதிய மேலாண்மையைத் தகர்த்தவர். “உன்னை அறி” என்றார் கிரேக்கத்தின் தத்துவஞானி சாக்ரட்டீஸ். ஒருவன் திறன் மிக்கவனாக லட்சிய நோக்குடன் சமூகத்தில் வாழ்வதற்கு கற்றலின் மூலமே முடியும். அதுதான் அவன் பிறந்ததற்கு எடுத்துக்கொண்ட வேதனைக்கான பலன் என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த ஞானஒளி சாக்ரட்டீஸ். இந்த மகத்தான உண்மையைத்தான் “கட வுளை மற மனிதனை நினை” என்றதன் கதிர்வீச்சு சொற்றொடரால் (Catch word) ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று கூறி அலையும் அறிவிலிகளின் சிந்தனையைத் தான் கொளுத்திய வெந்தழல் மூலம் விளக் கினார் பெரியார். அந்த சுயமரியாதைச் சூரியன் பாய்ச்சிய பகுத்தறிவு ஒளி வீச்சில் கண்மூடித்தனமாக மண்மூடிப் போன - உண்மையான விஞ்ஞான வளர்ச்சிக்குத் தடையாக உருவாக்கப்பட்ட மூட நம்பிக் கைகளிலிருந்து அறிவைப் பிரித்தெடுத்த ஓர் இணையற்ற 20ஆம் நூற்றாண்டின் சமூக விஞ்ஞானி தந்தை பெரியார். அவர் மறைவை நிறைவு செய்த இந்த 48ஆவது ஆண்டு நினைவு நாளில் அவர் வழி நிற்க நாம் உறுதியேற்போம்! வாழ்க பெரியார் எனும் போராளி!
- ஆர்.கனக சபாபதி
No comments:
Post a Comment