தமிழர் தலைவர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற
அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றது
சென்னை, ஜன.26 புதுடில்லியில் நடைபெற்ற குடியரசுநாள் விழா அலங்கார அணி வகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (26.1.2022) தமிழ் நாடெங்கும் தமிழர் தலைவர் அறிவித்தபடி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
கடந்த 19.1.2022 அன்றே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ஜனவரி 26ஆம் தேதியன்று புதுடில்லியில் நடக்கவிருக்கும் குடியரசு நாள் அணி வகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்துள்ளதைக் கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள், சமூக அமைப்புகளின் அலுவலக வாயிலில் அணிவகுத்து நின்று தமிழ்நாட்டு மக்களின் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் வாரீர் என்று அறிக்கை விடுத்திருந்தார்.
டில்லி தலைநகரில் குடியரசு நாளில் (26.1.2022) நடைபெறும் அலங்கார ஊர்தி அணி வகுப்பில் மாநிலங்கள் அத்தனைக்கும் பங்கு பெற உரிமை இல்லையா?
இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்த கூட்டரசு அல்லவா?
மூன்று முறை தமிழ்நாடு அரசின் சார்பில் அக்குழுவிடம் (அலங் கார ஊர்தி அணி வகுப்புத் தேர்வுக்குழுவுக்கு) விளக்கம் அளித்தும், மும்முறையும் - இரட்டை ஆயுள் தண்டனை பெற்று,சிறையில் செக்கிழுத்த ஒப்பற்ற தியாகச் சீலர் வ.உ. சிதம்பரனாருக்கும், தனியே வெள்ளையர்களை எதிர்த்து, தனது அரசை இழந்தாலும் பரவாயில்லை என்றுபோரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், தேசியக் கவி பாரதியார், வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மருது பாண்டியர்கள் - சின்னமருது, பெரிய மருது ஆகியோரின் தியாகத்தை சித்தரிக்கும் ஊர்திகளைப் புறக்கணித்தது 75ஆம் ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் பெருமைக்கு இழுக்கு அல்லவா?
வ.உ.சி. வெறும் வியாபாரிதானே என்று நிபுணர் குழுவில் கேட்டதாகத் தகவல். இது வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போன்ற வேதனை அல்லவா?
தமிழ்நாடு முதலமைச்சர் - பிரதமருக்குக் கடிதம் எழுதியும் பிரதமர் தலையிட மறுப்பது அதைவிடக் கொடுமை அல்லவா?
தமிழ்நாடும், தமிழ் மண்ணின் தியாகமும் கேவலமாக மதிக்கப்படுவதை எதிர்த்து குமுறும் நம் நெஞ்சங்களின் உணர்வுகளை அற வழியில், ஜனநாயக முறையில் காட்டவே 26.1.2022 இன்று காலை வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் அனைவரின் பங்கேற்புடன் கரோனா விதிமுறைப்படி கட்டுப்பாட்டுடன் நடைபெற்றன.
தமிழ் நாடெங்கும் இன்று (26.1.2022) மிகுந்த எழுச்சியுடன் இவ்வகை அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திடலில் - திராவிடர் கழகத் தலைமை அலுவலக வாயிலில் இவ்வார்ப்பாட்டம் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, உரிய அளவு தனி மனித இடைவெளியுடனும், முகக்கவசத்துடனும் தோழர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ. கருணாநிதி, வழக்குரைஞர் மு.சென்னியப்பன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ. சுரேசு, வட சென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம், துணைச் செயலாளர் கெடார்
சு. மும்மூர்த்தி, இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், வ. கலைச்செல்வன், சி. அன்புச்செல்வன், சி.காமராஜ்,
ச. பாஸ்கர், ப. ஆனந்தன், வை. கலையரசன், க.கலைமணி, கா.காரல்மார்க்சு, தமிழ்ச்செல்வன் (சட்டக் கல்லூரி), இசைஇன்பன், பொறியாளர் குமார், நா.பார்த்திபன், லாரன்ஸ் இந்திரஜித், செந்தமிழ்ச்சேரன் (ஆத்தூர்) செல்லப்பன், ஓவியர் பெரு. இளங்கோ, சேத்துப்பட்டு நாகராஜன், வழக்கு ரைஞர் நேதாஜி, பூ. இராமலிங்கம், வெ. நல்லதம்பி, ஓட்டுநர் ஆனந்த், கீதை கண்ணன், க.வெண்ணிலா, மோகனப் பிரியா, த.மரகதமணி, க.சுமதி, அ. உமாமகேசுவரி, மு. செல்வி, முத்துலட்சுமி (வலைக்காட்சி) உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!
* வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
* வெல்க வெல்க வெல்கவே
திராவிடக் கொள்கைகள் வெல்கவே!
* குடியரசு தின விழாவிலே
புறக்கணிப்பா, புறக்கணிப்பா?
தமிழ்நாடு புறக்கணிப்பா!
* கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம்!
* ஒன்றிய அரசின் கண்ணோட்டத்தில்
தமிழ்நாடு இல்லையா, இல்லையா?
கிடையாதா - கிடையாதா?
* அலங்கார அணிவகுப்பா, அணிவகுப்பா?
ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் முன்னெடுப்பா?
* ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே,
கொச்சைப்படுத்தாதே, கொச்சைப்படுத்தாதே!
செக்கிழுத்த செக்கிழுத்த
சிதம்பரனாரின் சிதம்பரனாரின்
தியாகத்தை, தியாகத்தை
கொச்சைப்படுத்தாதே, கொச்சைப்படுத்தாதே!
* தியாகச் செம்மல் சிதம்பரனார்
வியாபாரியாம்,
காட்டிக் கொடுத்த
காவிகள் எல்லாம் தியாகிகளா?
* வேலு நாச்சியார் வீராங்கனை இல்லையா?
ஜான்சிராணிதான் வீராங்கனையா?
வேறுபடுத்திப் பார்ப்பது ஏன்?
வேறுபடுத்திப் பார்ப்பது ஏன்?
* தெரியாதா தெரியாதா?
மருது சகோதரர்களை,
தெரியாதா, தெரியாதா?
சரித்திரம் தெரியாத,
பேர்வழிகள் எல்லாம்,
நிபுணர்களா, நிபுணர்களா?
* தேசிய கவி பாரதியார் என்று
நித்தம் பேசும் பார்ப்பனர்களே!
கண்டனக் குரலை,
எழுப்பாதது ஏன், எழுப்பாதது ஏன்?
* ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே
பறிக்காதே, பறிக்காதே
மாநில உரிமைகளைப்
பறிக்காதே, பறிக்காதே!
ஒரே நாடு இந்தியா என்னும்
ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் திணிக்காதே!
* ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே
புதைக்காதே, புதைக்காதே
கூட்டாட்சித் தத்துவத்தை,
கூட்டாட்சித் தத்துவத்தை
புதைக்காதே, புதைக்காதே!
* குடியரசு நாளில் அணிவகுப்பாம், அணிவகுப்பாம்!
பா.ஜ.க. ஆளுகின்ற, மாநிலங்களின்,
அணிவகுப்பாம், அணிவகுப்பாம்!
* தேசியம் பேசும் அண்ணாச்சி
தேசியம் பேசும் அண்ணாச்சி
பிரித்துப் பிரித்துப் பார்க்கலாமா?
பேத உணர்ச்சியைக்
காட்டலாமா? காட்டலாமா?
* தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு
தன்மான உணர்வின் பூக்காடு!
சகிக்க மாட்டோம், சகிக்க மாட்டோம்
சுயமரியாதையை தீண்டினால்,
சகிக்கமாட்டோம், சகிக்கமாட்டோம்!
* விட்டுக் கொடுக்கமாட்டோம்,
விட்டுக் கொடுக்கமாட்டோம்!
மாநில உரிமைகளை, மாநில உரிமைகளை
விட்டுக் கொடுக்கமாட்டோம்!
* போராடுவோம், வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!
என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment