இந்தியத் துணைக் கண்டத்தில் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 10.2.2022 தொடங்கி 8.3.2022 வரை ஏழு கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 5 ஆண்டு காலமாக சாமியார் ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றுள்ளது.
இந்தக் கால கட்டத்தில் ஆட்சியின் சாதனை என்ன என்று சொல்லுவதற்கு விரலை மடக்க முடியாத கையறு நிலையில் - நடக்கவிருக்கும் தேர்தல் 80க்கும் 20க்கும் இடையிலானது என்று பூடகமாகக் கூறி இருக்கிறார்.
சமூகம் மற்றும் அரசியல் தெரிந்தவர்கள் இதற்குள் மத ரீதியான பகைமை பெரு நெருப்பு பதுங்கி குடிகொண்டு இருப்பதை எளிதில் அறிந்து கொள்வர்.
2017 உ.பி. தேர்தல் முடிவில் பா.ஜ.க. வெற்றி பெற்ற போது யோகி ஆதித்யநாத் என்பவர் முதல் அமைச்சர் என்ற பேச்சே எழவில்லை. ஆனால் அவர் செய்த ரகளை - உள்கட்சிப் போராட்டம் காரணமாக வேறு வழியின்றி முதல் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
2022 தேர்தலில் மீண்டும் அவர் முதல் அமைச்சருக்கான வேட்பாளர் இல்லை - அவர்மீது கடும் அதிருப்தி சூடு பிடித்துக் காணப்படுகிறது என்ற ஒரு நிலையில், உடனடியாக பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து, சாம, பேத, தான, தண்ட யுக்திகளைப் பயன்படுத்தி, அவர்தான் பா.ஜ.க.வின் வேட்பாளர் என்று அனேகமாக முடிவாகியுள்ளது.
இந்திய அளவில் எல்லாத் துறைகளிலும் கடைசி இடத்தில் இருப்பது உ.பி.தான், எதை எடுத்தாலும் அதற்கு அப்பட்டமான மதப் பார்வைதான் - மாட்டு அரசியல்தான். சாலைகளில் திரியும் மாடுகளுக்கு புகலிடம் பள்ளி வளாகங்கள்தான்.
உ.பி.யில் பார்ப்பனர்கள் 12 விழுக்காட்டினர் என்ன காரணத்தாலோ பா.ஜ.க.விடம் கொஞ்சம் முரண்டு பிடித்துள்ளனர். அவர்களைச் சரிக்கட்ட தனியே ஒரு குழுவையே அமைத்துள்ளனர் - இதில் அவர்கள் வெற்றி பெறக்கூடும்.
முசுலிம்கள் உ.பி.யில் 19.2 விழுக்காட்டினர். இதனைத் தான் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் மறை முகமாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். இதன் பொருள் 80 விழுக்காடு இந்துக்களுக்கும், 20 விழுக்காடு முசுலிம் களுக்கும் இடையிலான தேர்தல் என்கிறார்.
ஓர் ஆட்சி என்றால் அது தன் சாதனைகளை முன்னிறுத்தவேண்டும் - எதிர்காலத் திட்டங்களை எடுத்து வைக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாத பரிதாப நிலையில் மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு 80க்கும் 20க்கும் இடையிலான தேர்தல் என்று ஒரு முதல் அமைச்சர் கூறுவது எத்தகைய பிற்போக்குத் தனமான கழிசடைத்தனம்!
இதே முறையைத் தமிழ் நாட்டில் எவராலும் பின்பற்ற முடியாது என்ற உறுதிப்படுத்தப்பட்ட நிலையால் தான் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமரைப் பார்த்து நாடாளுமன்றத்திலேயே நேருக்கு நேர் "உங்களால் ஒரு காலத்திலும் தமிழ்நாட்டை ஆட்சி புரிய முடியாது- முடியவே முடியாது!" என்றுகோடை இடிபோல முழங்கி இருக்கிறார்.
இதன் மூலம் இந்தியா முழுவதும் இருக்கும் சமூக - அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கெட்டியாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு சித்தாந்த ரீதியாக மக்கள் பக்குவப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அது!
அது பகுத்தறிவு அடிப்படையில், சுயமரியாதை அடிப்படையில், சமூகநீதி அடிப்படையில், சமநிலை, சமதர்ம அடிப்படையில் இருக்க வேண்டும்.
80க்கும் 20க்கும் இடையிலான தேர்தல் என்று ஆதித்யநாத் கூறினாலும் உண்மை என்ன? கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் 41.4 விழுக்காடு. 59விழுக்காடு வாக்குகள் எதிர்ப்பு வாக்குகள். எதிர்க் கட்சிகள் இதில் கவனம் செலுத்தினால் - 80க்கும் 20க்கும் இடையிலான போராட்டம்தான் தேர்தல் - என்பதன் அச்சு முறிந்து போகும்! கவனம் செலுத்துக!
No comments:
Post a Comment