புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் மூன்று முடி திருத்தும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையங்களில் அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் அனுமதிக்கப்படுவதில்லையாம்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும், காவல்துறை கண்டு கொள்வதில்லை என்பது கொடுமையானது. காவல் துறைக்கு இதைத்தவிர வேறு என்ன முக்கிய வேலையோ!
கோட்டைக்காடு கிராமத்தில் முடி திருத்தும் கடையில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை எதிர்த்து செல்வம் என்ற தோழர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார்.
தந்தை பெரியார் பிறந்த - சுய மரியாதை இயக்கம் பாடுபட்ட தமிழ் மண்ணிலே இப்படியொரு அநாகரிகம் - கொடுமை நடைமுறையில் இருப்பதை சகிக்கவோ, அனுமதிக்கவோ முடியாது. முடியவே முடியாது.
ஏணிப்படி ஜாதி அடுக்குமுறைபற்றி (Graded Inequality) அண்ணல் அம்பேத்கர் ஆழமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். முடி திருத்துவோர் மாநாடுகளிலும் தந்தை பெரியார் விரிவாகவே விளங்கும்படி எடுத்துக் கூறியுள்ளார்.
"உங்களுக்குள்ளேயே உயர்வு - தாழ்வு பேசிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு கிடக்கிறீர்களே, உங்கள் அனை வருக்கும் மேலாக பிராமணன் - பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் - நீங்கள் அனைவரும் சூத்திரர்கள் - சற்சூத்திரர்கள் (பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள்) என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே - நடத்திக் கொண்டு இருக்கவும் செய்கிறார்களே - இதற்காக நீங்கள் வெட்கப்பட்டதுண்டா? உங்களுக்கெல்லாம் வெட்கம் இல்லையா? தேவடியாள் மக்கள் என்று பார்ப்பான் சொல்லுவதைவிட வேறு எந்த இழிவை, அவமரியாதையைச் சுமக்க விரும்புகிறீர்கள்?" என்று நாக்கைப் பிடுங்கக் கேட்டாரே? அதற்குப் பிறகுகூட பார்ப்பனர் அல்லாதோர் பல அடுக்குகளாகச் சிதறிக் கொண்டு - அதே நேரத்தில் ஜாதி தற்பெருமை பேசிக் கொண்டு திரியலாமா?
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக் காடு கிராமத்தில் நடக்கும் கேவலமான தீண்டாமைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். காவல்துறை வரிந்து கட்டிக் கொண்டு இன்றே, இக்கணமே செயல்பட வேண்டும்.
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் ஆட்சியில் இவை நடக்கலாமா? (பட்டினப் பிரவேசங்களும் நடக்கலாமா?)
அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று, உண்மை நிலையை உடனடியாகக் கழகத் தலைமை நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
புதுக்கோட்டைப் பகுதியில் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் முடி திருத்தும் நிலையங்களில், உணவு விடுதிகளில் இரட்டை கிளாஸ்கள் என்ற நிலை இருக்குமானால் உடனடியாக திரா விடர் கழகத் தலைமை நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். கழகத்தினரின் களப் பணியில் இது மிக மிக முக்கியமானது.
இவற்றின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கழகத் தலைவர் முடிவு செய்வார்.
கரோனா தொற்று நோயைவிட மிகக் கொடுமையானது இந்தத் தீண்டாமைப் பெரு நோய்.
இதைப்பற்றி எல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசாங்கமோ, பா.ஜ.க., சங்பரிவாருக்கோ கிஞ்சிற்றும் கவலையில்லை. தேவைப்பட்டால் முடி திருத்தும் தொழிலாளர்கள் - தாழ்த் தப்பட்ட சமூக மக்களிடையே ஒரு மோதலை உருவாக்கலாமா என்ற உயர்மட்டக் கூட்டம் நடத்தி முடிவு செய்வார்கள்.
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் காதுகளில் கேடு கெட்ட இந்தத் தீண்டாமை செய்தி விழும்போதே இரத்தம் கொதிக்கிறது! கொதிக்கிறது!!
தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படட்டும்! புதுக்கோட்டை கோட்டைக் காடு என்னும் ஊரில் தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுக்கும் உடனடியான அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.
சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டு, இப்படி எல்லாம் ஒரு மனிதனின் சுய மரியாதையை இன்னொரு மனிதன் அவமதிக்கும் காட்டுக் குணத்தை அனுமதிக்கலாமா?
தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கர மடங்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில் உள்ளவர்களை லோகக் குரு என்று கூறும் வெட்கம் கெட்ட 'பெரிய மனிதர்களும்' வாழத்தான் செய்கிறார்கள்.
இவற்றை எல்லாம் தந்தை பெரியார் இலட்சியப் பெரும் படை சந்திக்கும் - முகத்திரையையும் கிழித் தெறிவோம்!
வாழ்க பெரியார்!
வெல்க சுயமரியாதை!!
No comments:
Post a Comment