- கவிஞர் கண்மதியன்
தடம்மாறாக் கொள்கை ; தரையில் என்றும்
தடுமாறா - தந்தை பெரியார் கொள்கை!
அன்று மருத்துவம் அனைவரும் படிக்கத்
தடையாய் இருந்தது சமசு கிருதம்!
மருத்துவம் படிக்க சமசு கிருதம்
அறிந்தி ருத்தல் அவசியம் என்கிற
சட்டம் தன்னைச் சாக்கடை வீசிப்
பல்லோரும் மருத்துவம் படிக்கச் செய்தார்
பனகல் அரசர் நீதிக்கட்சி ஆட்சியில்!
சமூக நீதி எழச் சட்டம் சாய்ந்தது;
பிராமணச் சட்டம் பிணவறை பாய்ந்தது!
அதுபோல் தானடா நீட்தேர்வு சட்டமும்!
சமூக நீதிக்குச் சவாலாய் எழுந்தது;
நீட்தேர் வென்னும் வடிவில் வந்தது!
சமூக நீதி தானடா சமத்துவம்;
சமத்துவம் தானடா திராவிடர் தத்துவம்!
இலட்சக் கணக்கில் கொட்டிப் பயிற்சிபெறும்
ஏழையைக் கவர்னர் காட்டு வாரா?
கேட்போரைக் கேனயன் எனநினைத் தாரா?
நீட்டால் ஏழைகள் பயனடை வாரென
ரோட்டில் போறவன் கூட சொல்லான்;
கவர்னர் சொல்கிறார் பயனடை வாரென!
அதனைக் கேட்டால் அகிலம் சிரிக்காதோ?
யானை மேய்க்கும் கவர்னர் ஓர்நாள்
பூனை தூங்கும் ஏழை வீட்டுப்
பானை பார்ப்பாரோ? படும்துயர் அறிவாரோ?
கோட்டுப் போட்ட கவர்ன ருமிங்கே
கோவணம் கட்டி உழவு செய்யும்
ஏழை விவசாயி ஏழ்மை அறிவாரோ?
சாண்வயிற்றுக் குழைக்கும் சவரத் தொழிலாளி
கூன்விழப் பாடுபடும் கூலித் தொழிலாளி
நிற்கவும் நிலமிலா நெசவுத் தொழிலாளி
போல மண்ணில் புலம்பும் தொழிலாளர்
கஞ்சிக் கின்றிக் காலம் கழிக்கிறார்!
அன்னவர் பிள்ளைகள் அறிவுபெறல் எப்படி?
பட்டினிக் கிடந்தே படிக்கும் பிள்ளைகள்
கட்டிக்க கந்தல் துணிகளே மேனியில்!
நிற்கவே முடியா நிலையில் இருப்பவனை
ஓட்டப் பந்தயத்திற்கு ஓடிவா என்பது
மடமை அன்றி மற்றசொல் உண்டோ?
நீட்தேர்வு உணர்த்தும் நிலையுமிது தானே!
கோடியில் புரளும் கோமான் பிள்ளைகளும்
வாடிய வயிற்றுள் வறுமைத்தீ பிள்ளைகளும்
ஒன்றாயத் தேர்வுபெற அளவுகோல் உண்டா?
இல்லை எனத் தெரிந்தும் நடத்தநீ மண்டா?
சோறு தின்னும் வாயால் தெரிந்தே
சேறு தின்ன லாமா? சொல்; சொல்!
ஏழைக்கு நீட்தேர்வு பயன்தரும் என்றே
ஆளுநர் சொல்வது அறிந்தும் அறியாததோ!
ஆளுநர் பதவிக்கு அழகா இது?
செத்த பிணத்திற்கு சிங்காரம் எதற்கு? இங்(கு)
ஒருநபர் ஆசையா? மக்கள் ஆட்சியா?
ஒருநூறு கேள்விகள் உருவாகும் சாட்சியா!
அடிமைத் தமிழன் அன்னையும் விற்பான்;
பதவி என்றால் பத்தினியும் விற்பான்;
கட்ட பொம்மனைக் காட்டிக் கொடுத்த
எட்டப்ப பக்தர்கள் இன்றும் இங்குளார்!
காட்டிக் கொடுக்கும் கயவர் கூட்டத்தால்
நாட்டில் குழப்பம்; நாளும் பதற்றம்!
இந்தியா என்கிற தேசம் ஏது?
வெள்ளையர் வந்தபின் வந்ததித் தீது!
மாநில உரிமை; மான உரிமை!
ஈன எருமைகளுக்(கு) இதுதெரி யாது!
சமநீதிக் குதவா சட்டம் தன்னைச்
சவக்குழி தள்ளத் தாமதம் ஏனடா?
இடஒதுக் கீட்டில் முதல்சட்டத் திருத்தம்
கண்டிட காரணம் பெரியார் தானடா!
சட்டத் திருத்தம் புதிதா? அந்தச்
சட்டம் என்பது தனிநபர் சொத்தா?
அப்படிச் சொல்லிட அவனுக்குப் பித்தா?
சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டும்
ஒன்றிய ஆட்சிக்(கு)
அந்தச் சவக்குழியே ஆரம்பச் சமாதி!
சமூக நீதி சமத்துவம் காண
ஓரணி நிற்போம்; உயர்வு பெறுவோம்!
பெரியார் மண்ணிது; வாலை ஆட்டினால்
நரியார் வாலையெலாம் ஒட்ட நறுக்குவோம்;
வாலிலா நரியை ஓடோட விரட்டுவோம்!
வான மிருந்து வந்தவரா கவர்னர்?
தவறெனில் தட்டிக் கேட்பவன் தமிழன்!
இந்தியாவின் வழிகாட்டி தமிழ்நாடன்றோ!
இதற்குச் சான்றுகள் ஏராளம் உண்டே!
இவ்வரலா ரறியார் இருப்பதும் வீணே?
தலைதாழாத் தமிழா! தன்மானத் தமிழா!
தமிழகம் நமதே! தமிழகம் நமதே!
No comments:
Post a Comment