‘‘ஆணவக் கொலைகளும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்’’
காணொலி சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, பிப். 8 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் என்பவை ஜாதி ஒழிப்புக்குக் கிடைத்த புதிய படைக்கலன்கள்; பெரி யாருடைய பட்டறையில்தான் இந்தப் படைக்கலன்கள் தயாரானவை - அந்தக் கருத்தோட்டம் இந்தியா முழுமையையும் ஆண்டு கொண்டிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘ஆணவக் கொலைகளும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்!’’
கடந்த 4.12.2021 அன்று மாலை ‘‘ஆணவக் கொலை களும் - உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பும்‘‘ எனும் தலைப்பில் காணொலிமூலம் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
முந்தைய தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் பலவற்றைச் செய்யச் சொல்லியும் முந்தைய அரசுகள் செய்யவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
‘சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் ஜாதி வெறியின் மூலம் ஆணவக் கொலைகள் நடைபெற லாமா?’ என்று நெற்றியடி கேள்வியாகக் கேட்டதோடு, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் கூற்றையும் ஜாதி ஒழிப்பு, ஜாதி மறுப்பு (கலப்பு திருமணங்கள்) திரு மணங்கள்தான் ஒரே வழி என்று கூறியுள்ளதோடு, தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிய, இருவரது மணவாழ்க்கையில் மூன்றாவது நபர் பிரவேசிக்க உரிமை இல்லை என்றும், அது ‘அகம்பாவம்‘ என்று தத்துவார்த்த ரீதியில் கூறிய கருத்தின் எதிரொலியாய் கேள்வியாக்கிக் (பெரியார் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும்கூட) கேட்டுள்ளனர்!
இளம் தம்பதியினர் வாழ்வில் ஜாதி பஞ்சாயத்து செய்வோருக்குக் குறுக்கிட எந்த உரிமையும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, அப் படித் தலையிட்டு, ஜாதி வெறியைக் கிளப்பியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டும் நெறிகள் இரண்டு வகையாகும்.
(1) தடுப்பது எப்படி (2) அதை மீறி ஆணவக் கொலை நடந்தால் குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை தருவது எப்படி என்பதையெல்லாம் கூறி, உச்சநீதிமன்றம் இது பற்றி சில வழக்குகளில் முன்பே ஆணை பிறப்பித்துள்ள நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படாமல் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்ட அத்தீர்ப்புத் தவறவில்லை.
அனைத்து ஜாதி ஒழிப்பு கருத்தாளர்களும், முற்போக்காளர்களும்
மனுவாதியின் ஆட்சி நடைபெறும் நிலையில் இந்தத் தீர்ப்பை எந்த அளவுக்கு மதித்து, ஒன்றிய அரசு செயல்படுத்தும் என்பது கேள்விக்குறியாக இருப்பினும், மக்களிடையே இதை வைத்து தீவிர மான பிரச்சாரத்தை மேற்கொண்டு அனைத்து ஜாதி ஒழிப்பு கருத்தாளர்களும், முற்போக்காளர் களும் போராட்டத்தை முடுக்கி விட வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்றுள்ள திராவிடர் ஆட்சியின் மூலக் கொள்கையே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்ற சமத்துவக் கொள்கையானபடி யால், நமது முதலமைச்சர் அவர்கள், சம்பந்தப்பட்ட உள்துறை, காவல் துறை, தலைமைப் பொறுப்பு அதிகாரிகளை அழைத்து - இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்களுக்கு, செயல்வடிவம் தந்து, ஆணவக் கொலைகள் எங்கும் நிகழாத வண்ணம் ‘தடுப் பணைகளைக் கட்டுவதோடு’, மீறி நடந்தால் வழக்குகளை பிறழ் சாட்சியங்கள் மூலமோ அல்லது வழக்குகளைத் திட்டமிட்டே ஓட்டை யுள்ளவைகளாக்கி ஜாதி வெறியர்களைக் காப் பாற்ற முயலும் முயற்சிகள் அதிகாரவர்க்கத்தி னரிடம் தலைதூக்கினால் முளையிலேயே கிள்ளி எறியவுமான ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்த முன்வரவேண்டும்.
இதற்கு முன் ராஜஸ்தான் மாநில அரசு இது பற்றி தனிச்சட்டம் ஒன்றை (2017ஆம் ஆண்டில்) இயற்றி யுள்ளதையும் சுட்டிக் காட்டியதோடு,
இந்த ஜாதிப் பஞ்சாயத்து, ஆணவக் கொலைகளைத் தடுப்பது பற்றி சட்டக் கமிஷன் அதன் 243ஆம் அறிக்கையில்:
“In order to implement the recommendations of the Law Commission in its 242nd Report, the State of Rajasthan has enacted the Prohibition of Interference with the Freedom of Matrimonial Aliances in the Name of Honour and Tradition Act, 2019 on the same lines” என்று 41ஆவது பாராவில் கூறியிருக்கிறார்கள்.
முந்தைய இரண்டு வழக்குகளில்கூட தமிழ்நாடு மாநிலம் Vs ஆறுமுகம் (சேர்வை), சக்திவாஹினி Vs யூனியன் ஆப் இண்டியா வழக்குகளிலும் கூறப்பட்டுள் ளதை மாநில அரசுகள் இனியும் காலதாமதம் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு செயலில் உடனே இறங்க வேண்டியது அவசர அவசியம்!
ஆணவக் கொலைகள் ஒழிக்கப்படுவதற்கும் ஜாதி ஒழிப்புக்கும் ஒன்றிய அரசும், மாநில அரசும் என்னென்ன செய்யவேண்டும்? - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரை
“சக்திவாஹினிக்கும் ஒன்றிய அரசுக்கும் எதிரான வழக்கில், ஆணவக்கொலைக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கும்படி இந்த நீதிமன்றம் ஒன்றிய அரசையும் மாநில அரசுகளையும் அறிவுறுத்தியிருந்தது. இப்படிப்பட்ட குற்றங்களைத் தடுக்க தேசிய திட்டம் ஒன்றையும் மாநில திட்டம் ஒன்றையும் சமர்ப்பிக் கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தங்கள் பாதுகாப்பிற்காகவும் நலனுக்காகவும் இணை யர்கள் அணுகுவதற்கேற்றபடி ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி குழுக்கள் அமைக்கும்படி மாநில அரசு களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. தடுப்பு, தீர்வு மற்றும் தண்டனைக்கான நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் கீழ்கண்ட யோசனைகளையும் வழங்கியிருந்தது:
கடந்த அய்ந்து ஆண்டு காலத்தில் எந்தெந்த மாவட்டத்தில், துணைப் பிரிவுகளில் அல்லது கிராமங் களில் ஆணவக் கொலைகள் நடந்துள்ளன என்பதையும் அது சம்பந்தமான பஞ்சாயத்து கூட்டங்கள் எங்கேனும் நடந்துள்ளனவா என்பது குறித்தும் மாநில அரசுகள் விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்துறை செயலாளர் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் பணிபுரி யும் காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி இது பற்றி பேச வேண்டும். குறிப்பிட்ட காவல் நிலையப் பொறுப்பில் உள்ள அதிகாரி, இப்படிப்பட்ட குற்றங்கள் அவர்களு டைய அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லையில் நடக்காமல் இருக்க அதிக விழிப்புணர்வுடன் இருப்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண் டும். கலப்புத் திருமணங்களோ, மதமாற்றுத் திருமணங்களோ எங்கேனும் நடக்கின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் விழிப்புடன் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
‘காப்’-பஞ்சாயத்து கூட்டம் இந்த விவகாரம் சம்பந்த மாக எங்கேனும் நடைபெற உள்ளதாக காவல்துறை அதிகாரிகளுக்கோ மாவட்ட நிர்வாகிகளுக்கோ தகவல் கிடைத்தால் அவர்கள் உடனடியாக தங்கள் மேலதி காரிகளுக்கு அதுபற்றி தெரிவிக்க வேண்டும். அதே சமயம், அதிகார எல்லைக்கு உட்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளருக்கும் காவல்துறை கண்காணிப் பாளருக்கும் தகவல் தரப்பட வேண்டும்.
தீர்வுக்கான வழிமுறைகள்
மாநில காவல்துறை ஆணவக் கொலைக் குற்றங் களைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகளுக்குப் பின்பும் காப்-பஞ்சாயத்து எங்கேனும் நடந்ததாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தால் அல்லது கலப்புத் திருமணம் / மதமாற்றத் திருமணம் செய்து கொண்ட இணையர்கள் மீதும் அவர்களின் குடும்பத் தினர் மீதும் பஞ்சாயத்தார் நடவடிக்கை எடுத்திருப்ப தாகத் தெரியவந்தால் - சட்டப்பூர்வ காவல்துறை அதிகாரி உடனடியாக முதல் தகவல் (FIR) அறிக்கையை IPC பிரிவுகளின்படி பதிவு செய்ய வேண்டும். வேறு காரணங்களால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித் திருந்தாலும் தக்க நடவடிக்கை அவசியம்.
முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப் பட்ட உடன் காவல்துறையின் கண்காணிப்பாளருக்கும் துணை கண்காணிப்பாளருக்கும் அதுபற்றி தெரிவிக்கப் பட வேண்டும். அவர்கள் புலன் விசாரணை செய்யவும் சரியான முடிவுக்கு வரவும் இது உதவும்.
சம்பந்தப்பட்ட மணமக்களுக்கும் அவர்கள் குடும் பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், அவசியம் என்று கருதப்பட்டால் அதே மாவட்டத்திலோ அல்லது வேறு இடங்களிலோ, அவர்கள் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். அவர்கள் அச்சுறுத்தல் களுக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்பதால் அவர் களுக்கு பாதுகாப்பு கட்டாயம் தேவை. பாதுகாப்பிற்கென ஓர் இல்லம் ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் அமைக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
குடும்பத்தினர், உள்ளூர் சமுதாயத்தினர் அல்லது ‘காப்’களின் எதிர்ப்புக்குள்ளான ஆணும் பெண்ணும் பாதுகாப்புடன் இருப்பதற்கேற்ற வகையில் அந்த அடைக்கல இல்லங்கள் இருக்கவேண்டும். திருமணம் நடக்காதவரை அவர்களுக்கு இந்த பாதுகாப்பு அவசியம்.
திருமணம் நடந்த பிறகு எதிர்ப்புக்கு ஆளாகும் இளம் இணையர்களுக்கும் அத்தகைய அடைக்கல இல்லங்களில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட புகலிடங்கள் அதிகார வரம்புக்கு உட் பட்ட மாவட்ட மாஜிஸ்டிரேட் மற்றும் காவல்துறை கண் காணிப்பாளரால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
மாவட்ட நீதித்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் மிகவும் பக்குவமாகச் செயல்பட வேண் டும். அச்சுறுத்தப்பட்ட ஆணும் பெண்ணும் திருமண வயதை அடைந்து விட்டவர்கள் தானா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினாலும், அவசியம் என்று கருதப்பட்டாலும், காவல்துறையினரின் பாதுகாப்புடன் திரு மணம் நடக்க வும், அதைப் பதிவு செய்யவும் உதவிகள் செய்யப்பட லாம். திருமணம் பதிவு செய்யப்பட்ட பின் இணையர்கள் விரும்பினால், அவர்களுடைய பாதுகாப்பிற்கென அமைக்கப்பட்ட வீட்டில் அவர்களை தங்க அனுமதிக்க லாம். முதல் ஒரு மாதம் தங்க குறைந்தபட்ச வாடகை வசூலித்துக் கொள்ளலாம். பிறகு ஒவ்வொரு மாதமாக அதை ஒரு வருடத்திற்கு மேற்படாமல் நீட்டித்துக் கொள்ளலாம். எப்படிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு அவர் கள் ஆளாகியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
திருமணம் ஆகும் முன் அல்லது ஆனபின் அச்சுறுத்தலுக்கு ஓர் ஆணும் பெண்ணும் ஆளானால், அவர்களுடைய புகார் குறித்த தகவல்களை மாவட்ட மாஜிஸ்டிரேட்டும் காவல்துறை கண்காணிப்பாளரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள மற்றொரு காவல்துறை மேலதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் அந்த அதிகாரி முறைப்படி ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட புகார் சார்ந்த இன்ன பிற விவரங்களை ஆய்வு செய்து ஒரு வாரத் திற்குள் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தன் விசா ரணை பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அந்த அறிக்கை கிடைத்தவுடன் பாதிக்கப்பட்டுள்ள மணமக்களை அச்சுறுத்தியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித விலக்குமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிடிபட வேண்டும். பஞ்சாயத்து உறுப்பினர்களும் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களும் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட வேண்டும். அய்.பி.சி. 115ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கைகள் யாவும் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
தண்டனை சார்ந்த வழிமுறைகள்
மேற்கண்ட அறிவுரைகளை காவல்துறை அதிகாரி களோ, வேறு மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அது விதி மீறல் குற்றமாகவே கருதப்படும். துறை சார்ந்த நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும். பிரச்சினை முழுதாக தீரும் வரை, துறை சார்ந்த நட வடிக்கையின்படி விதிகளை மீறியவர்கள் அதிகபட்சம் ஆறுமாத காலத்திற்குள் நடவடிக்கைக்கு ஆளா வார்கள்.
ஆறுமுகம் சேர்வை என்பவருக்கும், தமிழ்நாட்டுக் கும் எதிரான 2011ஆம் ஆண்டின் வழக்கில் இந்த நீதிமன்றம், செக்ஷன் 405/6 ஆம் பிரிவின்படி அளித்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசுகள் வீதி மீறல் குற்றங்களுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தீவிர நட வடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று இந்த நீதி மன்றம் நிர்வாகப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கும், காவல்துறை அலுவலர்களுக்கும் ஏற்கெனவே பல அறிவுரைகளை வழங்கியுள்ளது. ‘காப்’ பஞ்சாயத்துத் தீர்ப்புக்குப்பின் நிகழ்ந்த ஆணவக் கொலைகளை ஆறுமுகம் சேர்வைக்கும் - தமிழ்நாடு மாநிலத்திற்கும் எதிரான வழக்கின்போது, இந்த நீதிமன்றம் வன்மை யாகக் கண்டித்தது. ஜாதிகளின் பெயரால் கொடுமைகள் புரியும் ஆணவம் மிகுந்த மனித மிருகங்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று இந்த நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது (2011).
கவனத்தில் கொள்ள வேண்டியவை - சம்பவம் நடக்கவிருப்பது முன்பே தெரிந்திருந்தும் அதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறிவிட்டார்களா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
குற்றம் ஏற்கெனவே நடந்து விட்டிருந்தால் குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்யவும் அடுத் தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அந்த அதிகாரிகள் தவறிவிட்டார்களா என்பதையும் கண் டறிய வேண்டும்.
மாநில அரசுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்தி யேகமான குழுக்களை அமைக்கவேண்டும். அவற்றில் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் ஆதி திராவிடர் நல அலுவலர் இடம் பெற்றிருக்கவேண்டும்.
கலப்புத் திருமணங்கள் செய்துகொண்ட இணை யர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ, துன்புறுத்தப்பட்ட தாகவோ வந்த புகார்களையும் மனுக்களையும் இந்த மாவட்டக் குழுக்கள் பரிசீலிக்க வேண்டும்.
இத்தகைய மாவட்ட வாரியான தனி குழுக்கள் 24 மணிநேர உதவி மய்யங்களை அமைக்கவேண்டும். புகார் மனுக்களை பெறவும் பதிவு செய்யவும், அச் சுறுத்தப்படும் இணையர்களுக்கு, குடும்பத்தினருக்கு உதவி செய்யவும், ஆலோசனை வழங்கவும் பாது காப்பளிக்கவும் இந்த 24மணி நேர உதவி மய்யங்கள் இரவும் பகலும் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆணவக் கொலைக் குற்றங்கள் குறித்த விசார ணைக்கென இயங்கிவரும் சிறப்பு நீதி மன்றங்களில் அத்தகைய குற்றங்கள் விசாரிக்கபட வேண்டும். பாதிக்கப்பட்ட இணையர்கள் மீதோ குடும்பத்தினர் மீதோ வன்முறை தாக்குதல்கள் நடந்திருந்தாலும் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் விசாரணை நடத்தும், விசா ரணைகள் அன்றாடம் நடந்து, குற்றம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் முடிவுக்கு வரவேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் இந்த அறிவுரை பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி நிலுவையில் உள்ள வழக்குகளை, கூடுமான வரை, அதிகார வரம்பிற்கு உட் பட்ட நீதி மன்றத்திற்கு அனுப்பி தீர்வு காண உதவலாம்” என்று அந்தத் தீர்ப்பு மிகத்தெளிவாக உள்ளது
ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் போதிய பாதுகாப்பினை அளிக்கவேண்டும்
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.
வீடு தனியாகப் பார்த்து வைக்கவேண்டும்.
அவர்களுக்குத் தெளிவான வாய்ப்பை உண் டாக்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
எனவே, ஜாதி மறுப்புத் திருமணங்களை மாநில அரசுகள் ஆதரித்தாலும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மண வாழ்விணையர் களுக்குப் போதிய பாதுகாப்பினை அளிக்க வேண்டும்.
ஆணவக் கொலைகளை செய்கின்றவர்களுக் குக் கடுமையான தண்டனைக் கொடுக்கவேண்டும். இந்தக் குற்றங்களைச் செய்யத் தூண்டுபவர்களை யும், நியாயப்படுத்திப் பேசுகிறவர்களையும், ஜாதிப் பெருமைகளைப்பற்றி பேசுகிறவர்களையும் கடு மையாக தண்டிக்கவேண்டும்.
தெருக்களுக்கு ஜாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது; தமிழ்நாட்டில் எல்லோரும் பெருமைப்படக் கூடிய செய்தி என்னவென்றால், இங்கே ஜாதிக் கட்சி நடத்துகின்ற தலைவர்களின் பெயர்களில்கூட ஜாதிப் பட்டம் வால் இணைப்பதில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகு, ஜாதிப் பெருமை, ஜாதிப் பட்டத்தைச் சேர்ப்பது, என்னு டைய ஜாதி பெரியது; உன்னுடைய ஜாதி பெரியது என்று மார்தட்டுவது - இவை அத்தனையும் எங்கே கொண்டு போய்விடும் தெரியுமா? ஓர் அறிவியல் யுகத்தில், மீண்டும் தொடக்கக்கால காட்டுமிராண்டித்தனப் பருவத்தை நாம் திரும்பக் கொண்டு வருவதுபோன்று - மிகப்பெரிய குற் றத்தை தெரிந்தே, தெரியாமலோ, புரிந்தோ புரியா மலோ செய்கிறார்கள்.
எனவேதான் நண்பர்களே, நாம் இந்தப் பணியை செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இதற்கு மிகப்பெரிய துணையாக, ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கிறது உச்சநீதிமன்றம், இந்தத் தீர்ப்புகளின் மூலமாக.
ஜாதி ஒழிப்புக்குக் கிடைத்த புதிய படைக்கலன்கள்
எனவே, இந்தத் தீர்ப்புகள் ஜாதி ஒழிப்புக்குக் கிடைத்த புதிய படைக்கலன்கள்.
பெரியாருடைய பட்டறையில்தான் இந்தப் படைக் கலன்கள் தயாரானவை என்று சொன்னால், அந்தக் கருத்தோட்டம் இந்தியா முழுமையையும் ஆண்டு கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் சமூகநீதியை ஏற்காதவர்கள் செய்த சூழ்ச்சிகளை முறியடித்து எப்படி முதலாவது அரச மைப்புச் சட்டத் திருத்தம், பிறகு 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், அதற்குப் பிறகு, 93 ஆவது அரச மைப்புச் சட்டத் திருத்தம் வந்ததுபோன்று, அடுத்த திருத்தத்தில் இவை வரவேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சட்ட ஆணை யத்தினுடைய தீர்ப்பு சொன்னதுபோன்று, தனிச் சட்டங்கள் வரவேண்டும்.
ராஜஸ்தான் மாநிலம் கொண்டு வந்த சட்டம் போன்று மிகப்பெரிய அளவிற்கு வரவேண்டும். விரும்புகின்றவர் களுடைய திருமணங்களுக்குத் தடையில்லாத ஒரு சூழல் - அதற்குப் பாதுகாப்பான ஏற்பாடு என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதுபோல சட்டங்களை இயற்ற வேண்டும்.
இயற்றிய சட்டங்கள் செல்லாது என்று சொன்ன காலம் போய், புதிதாக சட்டங்கள் இயற்றுங்கள் என்று உச்சநீதிமன்றமே கலங்கரை வெளிச்சம்போல வழி காட்டவும்; அதை எப்படி செய்வது என்பதை சொல்லிக் கொடுப்பதற்கு சட்ட ஆணையம் இருப்பதும் - இவையெல்லாம் நமக்குக் கிடைத்திருக்கின்ற நல் வாய்ப்புகள். சிறந்த போர்க் கருவிகள்.
அவற்றை நாம் கையிலெடுத்துக்கொண்டு நம் முடைய பயணத்தைத் தொடருவோம்.
ஜாதி ஒழிப்புப் பணி என்பதற்குக் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வெற்றி இது.
எனவே, சோர்வில்லை தோழர்களே, இனிமேல் ஜாதி ஒழிப்பு அம்சங்களில் நம்முடைய நிலையை மிக எளிதாக மக்களிடையே கொண்டு சேர்ப்போம்.
இளைஞர்களே, நீங்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும், எந்த அமைப்பின்கீழ் இருந்தாலும்,
ஜாதி ஒழியவேண்டும்,
பெண்ணடிமை நீங்க வேண்டும்,
பிறவி இழிவு நீங்கவேண்டும்,
மனித சமுதாய சமத்துவமும், சம வாய்ப்பும், சமூகநீதியும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைத்தால்,
ஓரணியில் திரளுங்கள்!
மனிதன் மனிதனாக வாழவேண்டும்!
கட்சியில்லை, ஜாதி அறவே ஒழிந்தது, மனிதத் தன்மைதான் இந்த நாட்டில் நிலைப்பது.
மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.
மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்னார் தந்தை பெரியார்.
அந்த மானத்தைப் பெறுங்கள்; அந்த அறிவைப் பெறுங்கள்.
இந்த இரண்டையும் பெற்றால், உங்கள் உரிமையை நீங்கள் தானே பெறக்கூடிய ஆற்றலும், அந்தப் போர்க்குணமும் தானே வரும்.
வன்மத்தில் நமக்கு நம்பிக்கை இல்லை. அழகாக இங்கே சொன்னார் தோழர் அருள்மொழி அவர்கள்.
நாம் யாரையும் தண்டிக்கவேண்டும் என்றுகூட விரும்பவில்லை. அவர்களை மாற்றவேண்டும்; திருத்த வேண்டும், அவர்கள் மனிதர்களாக ஆக்கப்படவேண்டும். மனிதம் காப்பாற்றப்பட வேண்டும். மனிதத்தைப் பிடித்திருக்கின்ற அந்த நோய் விரட்டப்படவேண்டும்.
மனநோயாளிகளாக இருப்பவர்களைக்கூட சரி செய்யக்கூடிய மனநோய் காப்பகமாக நம்முடைய பிரச்சாரப் பணி, மருந்துகளைக் கொடுப்பதைப்போல, ஜாதி ஒழிப்புப் பணியை செய்து, ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவோம்.
அதற்கு ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஒரு கட்டம்.
அதையும் தாண்டி, ஜாதி வெறி தலைதூக்கும் நிலையில் வேக வேகமாக அதை மற்றவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்; ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
தடுப்பணைகள் கொடுப்பது, தீர்வுகளைக் கொடுப்பது, அதையும் மீறி செய்பவர்களுக்குத் தண்டனைமூலம் அறிவுறுத்துவது - இவையெல்லாம் அரசாங்கத்தினுடைய பணிகளாக இருக்கட்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்!
நம்முடைய பணி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
இளைஞர்களே,
இனி ஒரு முடிவு செய்யுங்கள்!
நீங்கள் திருமணம் செய்தால், சொந்த ஜாதியில் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்!
ஜாதி மறுப்புத் திருமணங்களையே செய்யுங்கள்!
அதன்மூலமாக நான் ஜாதியற்ற சமுதாயத்திற்கு என்னால் ஆன தொண்டை செய்தேன் என்று வாழுங்கள்.
உங்கள் சொந்தக்காலில் வாழுங்கள்! உங்களுக்குப் பாதுகாப்புத் தர சமூகம் தயாராக இருக்கிறது. அந்த சமூகம், அரசுகளையும் பாதுகாக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.
எனவே, புதுவாழ்வு பெறுவோம்!
ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்!
ஒரு பெரிய அருமையான சூழல் உருவாகியிருக்கிறது. இந்த சூழலை நாம் தவறவிடக் கூடாது.
இப்பொழுது இல்லையானால், எப்பொழுதும் இல்லை!
இப்பொழுது இல்லையானால், எப்பொழுதும் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்!
அதை இப்பொழுது செய்யுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
வீழ்க ஜாதிகள்!
ஜாதியை அழிப்போம்,
சமத்துவத்தை உருவாக்குவோம்!
மூச்சு அடங்கும்வரையில், இந்தப் பணியை செய்வோம்; நாங்கள் இல்லையானால், எங்கள் அடுத்த தலைமுறையினர் அந்தப் பணியை செய்யும்.
ஜாதிக்குக் கல்லறை கட்டுவதுதான் எங்கள் பணி!
எனவேதான், இனியும் ஜாதிக்குக் கல்லறை கட்டுவதுதான் - நாங்கள் கல்லறைக்குப் போவதற்கு முன்னால் எங்கள் பணி என்பதைக் குறிப்பிட்டு முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:
Post a Comment